பிறை கூறும் சேதி

மறைகூறும் செய்திகளைப் பின்பற்ற

,,,,,மனிதகுலத்தில் முஸ்லிம்கள் ஆனோரே

பிறைகூறும் செய்திகளாய்ப் பாவடிவில்

,,,,,பொழிகின்றேன் ஏற்பீரே தீனோரே!

இருளகற்றி ஒளிவீசி வானில்நான்

…..இருந்துகொண்டு பேசுகின்றேன் மானிடரே!

அருள்வசந்தம் சுமந்துகொண்டு உங்களிடம்

….அகத்தினுள்ளே நீக்குகின்றேன் மாஇடரே!

வரவேற்கக் காத்திருந்த நீங்களெல்லாம்

…வாய்மையை மட்டுமுங்கள் வாய்களிலே

உரமிட்டு வைத்திருந்து என்வரவை

….உற்சாகமாய்க் காணவந்தீர் வாயிலிலே!

பிறைக்கீற்றின் கதிர்வீச்சில் சுமந்துவந்தேன்

…..பிழைபொறுக்க ரமலானின் மாதமாக

இறைக்கூற்றை நான்சுமந்த ஒருபிறையில்

….இறக்கிவைத்தான் மாநபி(ஸல்)க்கு வேதமாக!

கறைகளையும் தீமைகளையும் அழுகின்றக்

,,,கண்ணீரால் கழுவத்தான் வந்துள்ளேன்

இறையிடமே மன்னிப்பைக் கேட்கவேண்டி

,,,இம்மாதமாய் உங்களிடம் தந்துள்ளேன்!

பசித்துணியால் பாவக்கறை துடைத்திடவே

,,,பயிற்சிகளைத் தருகின்றேன் சத்தியமாக

வசித்திருக்கும் ஷைத்தானை இப்பசியால்

,,,வதைத்திடுங்கள் ஒருமாதப் பத்தியமாக!

ஷைத்தானை விலங்கிட்டு அடக்குமாற்றல்

…. “சபுரென்னும் பூட்டுக்குள் பூட்டித்தான்

வைத்தேனே பிறையென்னும் ஒளியாக

,,,வீசுகின்ற ரமலானைக் காட்டித்தான்!

வானோக்கிப் பார்க்கின்ற கண்களையும்

…வரிசையான தீமைதரும் காட்சிகளால்

வீணாக்கிப் பறிக்கின்ற ஷைத்தானை

…விலக்கிடுங்கள் என்பிறையின் சாட்சிகளால்!

ஆன்மாவின் உணவாக இம்மாதம்

….ஆக்கிவைத்து நோன்பென்னும் பசியாக

தேன்பாயும் திருமறையைத் தினமோத

..தித்திக்க வைத்தேனே ருசியாக!

ஆண்டுதோறும் வருகின்றேன் உங்களிடம்

…ஆவலுடன் காத்திருப்பீர்; நம்புகின்றேன்

மாண்டுபோகும் ஷைத்தானை உங்களிடம்

…மடியினிலே கண்டுமனம் வெம்புகின்றேன்!

அழுகையெனும் தண்ணீரால் கழுவிடுங்கள்

….அழுக்காறு பாவத்தைக் கவனமாக

தொழுகையெனும் தவத்தினாலே பெற்றிடுங்கள்

….தொடர்ந்துவரும் வரமென்று சுவனமாக!

— அதிரை கவியன்பன் கலாம் , அபுதாபி

KALAM SHAICK ABDUL KADER
ACCOUNTANT
GRANITE CONSTRUCTION COMPANY
POB# 842
ABU DHABI, UAE
MOBILE 0508351499
Tags: ,

Leave a Reply