பால்நினைந்து கொடுத்திடுவீர் !

image1.JPG
                               பால்நினைந்து கொடுத்திடுவீர் !
     [ எம். ஜெயராமசர்மா … மெல்பேண்  …. அவுஸ்திரேலியா ]
      பிரமனின் படைப்பினிலே
      பெரும்படைப்பு பெண்ணினமே
      பெருங்குணங்கள் பெற்றவளே
      பிறப்பினிலே பெண்ணாவாள்
      ஆண்படைப்பும் பெண்படைப்பும்
      அகிலத்தில் உயர்படைப்பே
      ஆனாலும் பெண்படைப்பே
      அகிலத்தை ஆளுவதே
      கருவினைத் தாங்கிநிற்கும்
      பெருமையே பெண்மையாகும்
      உருவினைக் கொடுப்பதற்கும்
      உரியதே ஆண்மையாகும்
     இருஇனம் சமமானாலும்
     பெருமையே பெண்ணுக்கன்றோ
     சுமைதனைத் தாங்கிநின்று
     சுமப்பது பெண்மைதானே
    அடிவயிறு நோவெடுக்க
    அவள்சுமந்து பெற்றபிள்ளை
    அழகுமுகம் கண்டவுடன்
    அகமகிழ்ந்து நின்றிடுவாள்
    அக்குழந்தை பால்குடிக்க
    அவள்வயிறு குளிர்ந்துவிடும்
    அக்கணத்தில் ஆனந்தம்
    அவளோடு அணைந்துவிடும்
   பால்குடிக்கா விட்டாலும்
   பால்கொடுக்கா விட்டாலும்
   தாயின்நோ அதிகரிக்கும்
   தாளாத துயரைத்தரும்
  குழந்தை அழவேண்டும்
  குடிக்கவேண்டும் தாய்ப்பாலை
  தாயப்போ தனைமறப்பாள்
  தாயன்பு சுரக்குமப்போ
  தாய்ப்பாலே உணவாகும்
  தாய்ப்பாலே மருந்தாகும்
  தாய்ப்பாலைத் தவிர்த்துவிடின்
  நோய்க்கிடமாய் ஆகிடுமே
  பிள்ளைக்குப் பால்கொடுத்தல்
  பெருமையென நினைத்தார்கள்
  பால்குடிக்கும் பிள்ளைக்கு
  நோயணுகா என்றார்கள்
  நாகரிகம் தலைக்கேறி
  நல்லதெல்லாம் மறந்துவிட்டு
  பால்கொடுத்த பெண்களிப்போ
  படுத்துறங்கி நிற்கின்றார்
குழந்தை அழுதாலும்
கொடுக்கமாட்டேன் பாலென்று
குழறுபடி செய்கின்றார்
 குடும்பமதில் பெண்களிப்போ
பால்கொடுத்தால் தம்மழகு
பாழாகி விடுமென்று
பவ்வியமாய் சொல்லியவர்
பால்கொடுக்க மறுகின்றார்
பெற்றபிள்ளை அழுதாலும்
பெருங்கவலை கொள்ளாமல்
வற்றிவிடும் அழகுவென்று
வாடியவர் நிற்கின்றார்
உற்றவரும் மற்றவரும்
ஓலமிட்டு உரைத்தாலும்
சற்றுமதை மதியாது
தம்மழகைப் பேணுகின்றார்
புட்டிப்பால் கொடுக்கின்றார்
புத்திகெட்டு அலைகின்றார்
கிட்டச்சென்று கேட்டாலோ
வெட்டியே பார்க்கின்றார்
விஞ்ஞானம் வளர்ந்தாலும்
விந்தைகள் புரிந்தாலும்
உண்மைகள் ஒருபோதும்
ஓடிவிட மாட்டாது
தாய்ப்பாலைக் கொடுத்துவிடின்
தாய்க்குக் குறைவருவதில்லை
தாயழகும் கெடுவதில்லை
தாய்மைதான் அழகுபெறும்
என்றிப்போ விஞ்ஞானம்
எடுத்தியம்பி நிற்கிறது
இதைக்கேட்ட தாய்மாரும்
இரங்கிவந்து நிற்கின்றார்
மேலைநாட்டில் பெண்களிப்போ
விரும்பிப் பால்கொடுக்கின்றார்
வேலைக்குச் சென்றாலும்
பால்கொடுக்க மறக்கவில்லை
எம்கருவில் வந்தபிள்ளை
எம்பாலைக் குடிப்பதனால்
எங்கிருந்து பிரச்சனைகள்
எமக்குவரும் எண்ணுங்கள்
தாய்ப்பாலைக் குடித்தவர்கள்
தானுரமாய் உள்ளார்கள்
தகரப்பால் குடிப்பதனால்
தரம்கெட்டுப் போகாதா
தாய்ப்பாலில் உள்ளசத்து
தகரத்தில் இருக்கிறதா
தாய்மாரே மறக்காதீர்
தாய்ப்பாலைக் கொடுத்திடுவீர்
பால்முகத்தைப் பாருங்கள்
பரிவோடு அணைத்திடுங்கள்
பால்நினைந்து கொடுத்திடுவீர்
பாரிலுள்ள தாய்மாரே !
Tags: 

Leave a Reply