பாபரி மஸ்ஜித் வழக்கு

பாபரி மஸ்ஜித் வழக்கு தொடர்பாக ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் பத்திரிகை செய்தி

பாபரி மஸ்ஜித் வழக்கில் உச்சநீதிமன்றம் நீதமான சாதகமான தீர்ப்பினை வழங்கிடும் என ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளது. பாபரி மஸ்ஜித் தொடர்பான அறப்போராட்டத்திலும் அதனை மீண்டும் கட்டியெழுப்பிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம், மனித உரிமை அமைப்புகள் மற்றும் அணைத்து மதங்களையும் சார்ந்த நீதியை நேசிக்கும் மக்களுக்கு வழங்கிவரும் முழுமையான உறுதியான ஆதரவினை தொடர்ந்து ஜமாஅத் வழங்கிடும் என அதன் அகில இந்தியத் தலைவர் மௌலானா சையது ஜலாலுதீன் உமரி அவர்கள் புதுதில்லியில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

பாபரி மஸ்ஜித் நிலம் தொடர்பான சர்ச்சையில் தங்களைத் தாங்களே மத்தியஸ்தர்களாக நியமித்துக்கொண்டு இந்த வழக்கில் குறுக்கிட சமீபத்தில் சில பிரமுகர்களும் அமைப்புகளும் முனைப்புகாட்டி வருகின்றனர். இந்த வழக்கில் நீதிமன்றதிற்கு வெளியே சுமூகத்தீர்வு காண்பது என்பது முற்றிலும் சாத்தியமற்றது என ஜமாஅத்தின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் முஹம்மது சலீம் என்ஜினியர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், உச்சநீதிமன்ற தீர்ப்பினை ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம் சமூகமும், அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் மற்றும் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தும் முனைப்புடன் எதிர்நோக்கியுள்ளதாகவும் அதனை அனைவரும் நல்லுணர்வோடு ஏற்றுக்கொள்வர் என தெரிவித்தார்.

மேலும் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், பாபரி மஸ்ஜித் வழக்கு தொடர்பாக ஜமாஅத் மூன்று கோரிக்கைகளை முன்வைக்கிறது என ஜமாஅத்தின் அகில இந்தியத் துணைத்தலைவர் நுஸ்ரத் அலி அவர்கள் தெரிவித்தார். முதலாவதாக லிபர்ஹான் கமிஷனின் பரிந்துரையினை அமல்படுத்திட வேண்டும் எனவும், நில உரிமை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும் விரைந்து முடித்திட வேண்டும் எனவும், இறுதியாக பாபரி மஸ்ஜித் இடிப்பு மற்றும் விதியைமீறி ஒன்று கூடலுக்கு தூண்டியவர்கள் மீதான லக்னோ மற்றும் ரேபரேலி நீதிமன்றங்களில் நடந்து வரும் வழக்குகளின் தீர்ப்பினை விரைவு படுத்திட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

வரவிருக்கும் குஜராத் சட்டமன்ற தேர்தல் தொடர்பான கேள்விக்கு மௌலானா ஜலாலுதீன் உமரி அவர்கள் பதிலளிக்கையில், குஜராத் மாநிலத்தில் பல்வேறு தொகுதிகளில் ஜமாஅத்தின் தொண்டர்கள் கள ஆய்வில் ஈடுபட்டுள்ளதாகவும். ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் ஆதரவு பெற்ற வேட்பாளர்களின் பட்டியல் அம்மாநிலக் கிளையின் ஆலோசனையின் அடிப்படையில் விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவித்தார்.

மத சார்பற்ற ஜனநாயக கொள்கையினைக் கொண்ட, ஊழலில் தொடர்பில்லாத, நற்பண்புகளைக் கொண்ட வேட்பாளர்களை ஆதரிப்பது என்ற தேர்தல் கொள்கையினை இம்முறையும் கடைபிடிக்கப்படும் என குஜராத் தேர்தல் குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் ஜமாஅத்தின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் முஹம்மது சலீம் என்ஜினியர் தெரிவித்தார்.

தற்போது பற்றியெரியும் பிரச்சனையாகக் கருதப்படும் முத்தலாக் குறித்து கருத்து தெரிவிக்கையில், “ஒரே அமர்வில் மூன்று தலாக்குகள் வழங்குவதன் மூலம் இறுதியான திரும்ப அழைத்திட முடியாத விவாகரத்திற்கு வழி வகுக்கும் என்பதே பெரும்பான்மை இஸ்லாமிய அறிஞர்களின் கருத்தாகும். எனினும், அடிப்படையில் ஒருவர் ஒற்றை தலாக் கூறிடும் எண்ணத்தில் மூன்று முறை தலாக் கூறினாலும் அது ஒரு முறை கூறியதாகவே கருதப்படும்” என பதிலளித்தார் ஜமாஅத்தின் அகில இந்தியத்தலைவரும் அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் துணைத்தலைவருமான மௌலானா ஜலாலுதீன் உமரி அவர்கள். ஒரே அமர்வில் முத்தலாக் கூறுபவர்களுக்கு தண்டனையளிப்பது தொடர்பான மத்திய அரசின் வரைவு சட்டத்தின் மீதான கருத்து கூறுகையில் இது இஸ்லாமிய ஷரியத் சட்டத்தில் நேரடியாக குறுக்கிடும் செயல் எனவும், இது நமது அரசியல் அமைப்புச்சட்டம் உத்திரவாதம் அளித்துள்ள அடிப்படை உரிமைகளின் அடிப்படையில் விதிமீறலும் ஆகும் என அவர் கூறினார்.

அசாமிய முஸ்லிம்களின் குடியுரிமை பிரச்சினைகள், இஸ்லாமிய வங்கி அமைப்பதை மத்திய அரசு மறுப்பது மற்றும் ஹாதியா வழக்கு தொடர்பாகவும் இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விவாதிக்கப்பட்டது.

Leave a Reply