பாஜக தேர்தல் அறிக்கை : தொலைநோக்கு அறிக்கையா ?

தமிழகத்தில் ஒரு வலுவான கூட்டணியை அமைக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது பாஜக. சின்னச் சின்ன கட்சிகளின் துணையோடு தனி அணியாக 2016 தேர்தல் களத்தில் நிற்கிறது. அதன் தேர்தல் அறிக்கையை ‘தொலைநோக்கு அறிக்கை 2016’ என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.

பாஜக அறிக்கையை மூன்றாகப் பிரிக்கலாம். ஏற்கெனவே மற்ற கட்சிகள் வெளியிட்டுள்ள சில வாக்குறுதிகளை அப்படியே அல்லது சில மாற்றங்களுடன் வெளியிட்டிருப்பது. மத்திய அரசின் சில திட்டங்களை மாநிலத்துக்கு ஏற்றமாதிரி அளித்திருப்பது. அடிப்படைக் கொள்கையான இந்துத்துவா சார்ந்த சில பிரகடனங்கள்.

பிரதானம் – இந்துத்துவம்

பாஜக அறிக்கை முக்கியமாக முன்வைப்பது, கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தை. மதம் மாற்றுதல் கிரிமினல் குற்றமாகக் கருதப்படும் என்கிறது அறிக்கை. கூடவே, மதம் மாறியவர்களுக்குப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பட்டியல் இனத்தவருக்கான இட ஒதுக்கீட்டுச் சலுகைகள் தரப்பட மாட்டாது என்று அடித்துக் கூறுகிறது. பாஜகவின் அடுத்த வாக்குறுதி, பசுவதைத் தடைச் சட்டம்.

இந்துக் கோவில் நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுத்து, கோவில்களுக்கே திரும்ப அளிப்பதாகச் சொல்கிறது. கூடவே குத்தகைக்கு எடுக்கப்பட்டிருக்கும் இந்த நிலங்களின் வாடகையைக் கட்டாயமாக வசூலிக்கவும் வாடகை தராதோர் மீது நடவடிக்கை எடுக்கத் தனி நீதிமன்றங்களை உருவாக்கவும் வாக்குறுதி அளிக்கிறது.

அடுத்து ஒருபடி மேலே போய், இந்துக் கோவில்களை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து இந்து மதத்தில் பற்றுகொண்ட ஆன்றோர்களின் நிர்வாகத்தின்கீழ் கொண்டுவருவதாகச் சொல்கிறது.

முக்கியமான முன்னெடுப்பாக, அர்ச்சகர்கள், பூசாரிகள் ஆகியோருக்கு குறைந்தபட்ச ஊதியமாக மாதம் ரூ. 5,000 தரப்போவதாக அறிக்கை சொல்கிறது. அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாமா, கூடாதா என்பதற்கான வெளிப்படையான பதிலைச் சொல்லாமல், ‘தகுதியின் அடிப்படையில்’ அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று மட்டும் அறிக்கை சொல்கிறது.

ஹஜ் யாத்திரைக்கான உதவித்தொகை போலவே, வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருக்கும் இந்துக்கள் குடும்பத்தோடு புனிதப் பயணம் மேற்கொள்ள சிறப்புச் சலுகைகளைத் தரப்போவதாக பாஜக சொல்கிறது.

பாஜகவின் முதன்மை நோக்கம் இந்துத்துவம் மட்டுமே என்பதுதான் இந்த அறிக்கையிலிருந்து வெளிப்படுகிறது. இந்து மதத்தவருடைய வருத்தங்களைக் களைவதும், மதமாற்றத்தைத் தடுப்பதும், பசுவதையைத் தடுப்பதும்தான் முதன்மையான நோக்கம் என்பதுபோல இந்த அறிக்கை உருவாக்கப்பட்டிருப்பது ஆச்சரியம் தருகிறது. தமிழக மக்களின் தேவைகள், அபிலாஷைகள் ஆகியவற்றை முழுவதுமாகப் புரிந்துகொண்டு உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாக இது தெரியவில்லை.

பத்ரி சேஷாத்ரி

பதிப்பாளர், எழுத்தாளர். தொடர்புக்கு: badri@nhm.in

Tags: , , ,

Leave a Reply