பாஜகவின் வெளியுறவுக் கொள்கையும்,எதிர்கொள்ளும் சவால்களும்!

30days

                                   (கீழை ஜஹாங்கீர் அரூஸி)

ஆப்கீ பார் மோடி சர்க்கார் என்ற விளம்பரத்துடன் ஆட்சியை தமதாக்கி கொண்ட பாஜகவின் நடுவண் அரசு பொறுப்புக்கு வந்து ஒருமாத காலம் முடிவடைந்துள்ள நிலையில்,
மக்களின் மனநிலையை படம்பிடித்து காட்டிய தந்தி என்னும் தொலைக்காட்சி, மோடி சர்க்காரின் ஆட்சிமுறை பற்றிய கருத்து கணிப்பை நடத்தியதில் 61%மக்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதற்கு முக்கிய காரணம் பல்வேறு வகையிலான விலைவாசி உயர்வாகும்.
இது ஒருபுறம் இருக்க,சோதனை மேல் சோதனையாக மோடி சர்க்காருக்கு தற்போதைய வெளியுறவு கொள்கையும் பெரும்சவாலாக இருந்து வருகிறது.
இந்த சோதனையை பாஜக அரசு வெல்லுமா?அல்லது அனுபவமின்மை காரணமாக சொதப்புமா?என்பதை இனிவரும் காலம் தான் பதில் சொல்லும்.
தற்போது ஈராக் நாட்டில் நடந்துவரும் உள்நாட்டு போரினால்,அந்நாட்டுடனான ஆயில் இறக்குமதியில் தொய்வு ஏற்படும் சூழல் இருப்பதாக மீடியாக்களின் எச்சரிக்கை ஒருபுறமும்,
அந்நாட்டில் சிக்கி தவிக்கும் 39இந்தியர்களையும் உயிருடன் பாதுகாப்பாக மீட்டுவருவது என்ற இமாலய சிக்கல் இன்னொரு புறமும் பாஜகவை நிலைகுலைய வைத்துள்ளன.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வளைகுடா நாட்டின் இந்திய தூதரக அதிகாரிகளை அழைத்து ஈராக்கில் தவிக்கும் 39இந்தியர்களையும் பாதுகாப்புடன் மீட்பது குறித்த ஆலோசனை கூட்டத்தை வெளியுறவு நடுவண் அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நடத்தினார்.
கடந்தகால காங்கிரஸ் ஆட்சியிலும் இதுபோன்ற பிரச்சினைகள் வளைகுடா இந்தியர்களுக்கு ஏற்பட்ட போது,அப்போதைய அமைச்சர் பெருமக்களான வயலார் ரவியும்,ஈ.அஹமதுவும் சம்பந்தப்பட்ட நாட்டுக்கே நேரில் சென்று அந்நாட்டு அரசுடன் உரிய பேச்சுவார்த்தை நடத்தி உடனடி தீர்வும் கண்டதை நாம் மறந்து விடக்கூடாது.
ஆனால் தற்போது அதுபோன்ற செயல்பாடுகள் இன்றி நம் நாட்டிலேயே ஆலோசனை நடத்துவதால்…அதில் எந்தளவுக்கு பலன் கிடைக்கும் என்பதை தீர்மானிக்க முடியவில்லை.
39இந்தியர்களையும் பத்திரமாக மீட்பதற்கு பாரசீக வளைகுடா நோக்கி இந்திய போர்க்கப்பல் விரைந்துள்ளது என்ற செய்தி ஒருவித பதட்டத்தை மட்டுமே உருவாக்கி உள்ளது.
நாட்டுமக்களின் மீது உண்மையான அக்கறை இருக்குமானால்…மோடி அரசு தன்னுடைய ஈகோவை தூர எறிந்துவிட்டு,
கடந்தகால காங்கிரஸ் அரசின் நடுவண் அமைச்சர்களான வயலார் ரவி அல்லது வளைகுடா நாடுகளின் ஆட்சியாளர்களால் இன்றும் மதிக்கப்பட்டு வரும் ஈ.அஹமது அவர்களையும் அழைத்து ஆலோசனை நடத்தி,
 39இந்தியர்களையும் பாதுகாப்பாக மீட்பதற்கு உங்களால் ஆன உதவியும் வேண்டும் என கோரிக்கை வைத்து அவர்களையே இந்திய அரசின் நல்லிணக்க தூதுவராக ஈராக் அனுப்பி வைத்தால்..ஒருவேளை இறைவன் நாட்டப்படி நமது நோக்கம் வெற்றி பெறலாமல்லவா?
ONE MAN ARMY என்ற தனிநபர் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் தருணமல்ல இது.கூட்டு நடவடிக்கையின் மூலமே இதுபோன்ற சவாலான பிரச்சினைகளை வெல்ல முடியும்.
இந்தியாவை சுற்றியுள்ள பூடான்,பங்களாதேஷ்,நேபாளம்,இலங்கை,பாகிஸ்தான் மட்டும் நமது கவனத்திற்குரியதல்ல,
இந்தியாவின் பொருளாதார முதுகெலும்பாக இருக்கும் ஆயில் இறக்குமதிக்குரிய நட்பு நாடுகளான அரபுவளைகுடா நாடுகளுடனான ராஜ்ஜிய உறவுகள் மிகவும் முக்கியமானதாகும்.
தற்போதைய ஈராக்கில் சிக்கி தவிக்கும் 39இந்தியர்களை பாதுகாப்பாக மீட்டெடுக்கும் நடவடிக்கையில் பாஜக வெல்லுமா?அல்லது சொதப்புமா? என்பது அதன் அணுகுமுறையை பொறுத்தே உள்ளது.
Tags: , ,

Leave a Reply