பாஜகவின் ஃபாசிஸ சித்தாந்தம் வெற்றி பெறுமா?

bjp

                                  (கீழை ஜஹாங்கீர் அரூஸி)

ஃபாசிஸத்தின் முதல் அடையாளமாக விளங்கும் இத்தாலியின் முசோலினியை பின்பற்றி,இந்திய தேசத்தையும் ஒரு ஃபாசிஸ நாடாக அறிவிப்பு செய்வதற்கான ஆயத்தப்பணிகளில் RSS மற்றும் பாஜக முழுவீச்சில் இறங்கியுள்ளதை நாம் கவனத்தில் கொண்டு இந்த கட்டுரையை பொறுமையுடன் படித்தால் மட்டுமே நாம் எதிர்கொள்ளப்போகும் அபாயகரத்தை புரிந்து கொள்ளமுடியும்.
முசோலினியின் ஃபாசிஸமென்பது,ஒருபக்கம் தொழிலாளர்களுக்கு ஆதரவாகவும்,இன்னொரு பக்கம் முதலாளித்துவத்திற்கு ஆதரவாகவும் ஒரே நேரத்தில் இரட்டை வேடம் கொண்டு அனைவரிடமும் நல்லவனை போல் பெயரெடுத்து,அதிகாரத்தை தமதாக்கியதே.
முதல் உலக யுத்தத்திற்கு பிறகு வேலையில்லா திண்டாட்டமும்,பொருளாதார வீழ்ச்சியும்,பஞ்சமும் இத்தாலியில் விஸ்வரூபம் எடுத்தபோது 1919ல் படைக்கலைப்பு செய்யப்பட்ட போர் வீரர்களை கொண்டு சண்டை கூட்டத்தார் என்னும் பெயரில் ஒரு அமைப்பை இத்தாலியின் பெனிடோ முசோலினி உருவாக்கினான்.
முசோலினியின் முதல் எதிர்ப்பு சோஷலிசத்தின் மீதாகவே இருந்தது.ஆம்,சோஷலிசம் வீழ்த்தப்பட்டால் மட்டுமே ஃபாசிஸம் நிலைபெறும் என்ற நம்பிக்கை முசோலினிக்கு இருந்தது.
சோஷலிசத்திற்கு எதிரான முசோலினிக்கு பெரிய,பெரிய,முதலாளித்துவ வர்க்கமும்,”பூர்ஷுவா”என்னும் உயர்வகுப்பினரும் பெருமளவில் பண உதவியும்,ஆதரவும் கொடுத்தனர்.
தொழிலாளர்களுக்கு மத்தியில் முதாலாளித்துவத்தை எதிர்ப்பது போல் பேசுவதும்,முதலாளிகளுக்கு மத்தியில் தொழிலாளர்களை எதிர்ப்பது போல் பேசுவதும் முசோலினிக்கு கைவந்த கலை.
இத்தகைய போக்கின் முடிவுதான் இத்தாலியின் ஆட்சி அதிகாரம் முசோலினியின் கைகளுக்கு சென்றது.
இதயத்திற்குள் மறைத்து வைத்த தனது ஃபாசிஸ சுயரூபத்தை கொஞ்சம்,கொஞ்சமாக செயல்படுத்தினான் முசோலினி.
ஃபாசிஸத்தின் முதல் நடவடிக்கை தனது ஆட்சியில் எதிர்கட்சி இருக்க கூடாது என்பதே.தான் சார்ந்துள்ள இனம் தவிர மற்ற இனத்தவரெல்லாம் மூன்றாம்தர,நாலாந்தர மக்களாக அடிமைத்தனத்தில் இருக்க வேண்டுமென்பதும் முசோலினியின் கொள்கை.
நீதி,சட்டம்,பாதுகாப்பு,செய்தித்துறை,பொருளாதாரம் இவையனைத்தும் முசோலினியின் நேரடி கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டது.
ஜனநாயக முறையிலான நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டு ONE MAN ARMY என்ற தனிநபர் அதிகாரம் மட்டுமே நாட்டின் கொள்கை என பிரகடனம் செய்யப்பட்டது.
முசோலினியை விமர்சித்தவர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்.
இத்தாலியின் பாரம்பரிய ஜனநாயகத்தின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு ஃபாசிஸத்தின் அடையாளங்கள் அணிவகுத்தன.
அதில் மிகவும் முக்கியமானது பாராளுமன்றம் கலைக்கப்பட்டு முசோலினியின் ஆதரவாளர்கள் மட்டுமே ஒவ்வொரு மாகாணத்தின் கவர்னர்களாக நியமிக்கப்பட்டனர்.
ஃபாசிஸத்தின் உச்சக்கட்ட நடவடிக்கை மிகவும் பயங்கரமானதாகும்.அதாவது தனது ஆட்சியில் எதிரிகள் உயிர் வாழ்வதே அரிது அல்லது உயிர் வாழ முடியாது என்ற நிலை ஏற்பட வேண்டுமென்பது முசோலினியின் கட்டளை.
இத்தாலி முழுவதும் ஃபாசிஸ்டு மயமாக இருக்க வேண்டும்.அதை தவிர வேறு கட்சியோ ஸ்தாபனமோ இருக்கக்கூடாது.ஃபாசிஸ்டுகளே எல்லா உத்தியோகங்களிலும் இருக்க வேண்டும்.இதுதான் முசோலினியின் ஃபாசிஸம்.
முசோலினியின் இத்தகைய ஃபாசிஸத்தை இந்தியாவிலும் நிலை நிறுத்த வேண்டுமென்ற போக்கில் RSS மற்றும் பாஜக முயற்சிப்பதாகவே நமக்கு தோன்றுகிறது.
காரணம் முசோலினியின் நடவடிக்கைகளை போலவே தற்போது பாஜக பிரதமர் மோடி ஆட்சியிலும் நடப்பதாக ஒரு தோற்றம் ஏற்பட்டுள்ளது.மோடியை விமர்சிப்பவர்கள் ஜெயிலில் அடைக்கப்படுகின்றனர்.
தற்போதைய பிரதமர் மோடி அவர்கள் ஹிந்தி மொழியை விரும்புகிறார் என்பதற்காக மொத்த தேசமும் ஹிந்தி மொழியை விரும்ப வேண்டுமென்ற மொழி திணிப்பும் நமக்கு ஃபாசிஸத்தின் எச்சரிக்கையை நினைவு படுத்துகிறது.
வரலாற்று சிறப்புமிக்க நமது இந்திய பாராளுமன்றத்தில் தங்களுக்கு எதிர்க்கட்சியே இருக்கக்கூடாது என்பதில் பாஜக முனைப்பு காட்டுவதால் காங்கிரஸுக்கு எதிர்கட்சி பதவி கொடுப்பதில் இழுபறி நிலை.
தேசம் முழுவதுமுள்ள சிறிய,சிறிய மாநில கட்சிகளை தங்கள் கட்சியுடன் இணைத்து அந்தந்த மாநில சட்டமன்ற தேர்தல்களில் தமது கட்சியே வெற்றி பெற்று மொத்த தேசத்தின் அதிகாரத்தையும் தமதாக்கிய பின்னர் முசோலினியை போல ONE MAN ARMY என்ற சர்வாதிகார ஆட்சியை நிலை நிறுத்துவதற்கான முயற்சிகளில் ஒன்றுதான்,
 நாகலாந்தின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களையும் அவர்களது ஆதரவாளர்களையும் பாஜகவில் இணைய வைத்து,நாகலாந்தின் ஒட்டு மொத்த தேசியவாத காங்கிரஸும் பாஜகவுடன் இணைப்பு என்ற மீடியா தகவல்.
தமிழ்நாட்டிலும் அதுபோல பாமக,மதிமுக,தேமுதிக போன்ற கட்சிகளுக்கு வலை விரிக்கப்பட்டிருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
பல்வேறு இனம்,மதம்,மொழி,கலாச்சாரம் என்ற வேற்றுமையில் ஒற்றுமையே நமது தேசத்தின் அடையாளமாகும்.
125கோடி மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில்,இத்தகைய அடையாளங்களை சுமந்து நிற்கும் ஜனநாயகம் வீழ்த்தப்பட்டு பாஜகவின் ஃபாசிஸ சித்தாந்தம் வெற்றி பெறுமா?
அல்லது ஃபாசிஸ எதிர்ப்பு சக்திகள் ஒன்றிணைந்து பாஜகவின் ஃபாசிஸத்தை வீழ்த்தி தேசத்தின் ஜனநாயகத்தை காப்பாற்றுமா?
பொறுத்திருந்து பார்ப்போம் இன்ஷா அல்லாஹ்…..
Attachments area

bjp.jpg
Tags: , , ,

Leave a Reply