பாகியாத் நிறுவனர் – நினைவலைகள் அரங்கம்

– மௌலவி, அ. முஹம்மது கான் பாகவி

வே

லூர் அல்பாகியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரி 150 ஆண்டுகால வரலாற்றுக்குச் சொந்தமான பாரம்பரியமிக்க கல்வி நிலையம். இங்கு இஸ்லாமிய சமயக் கல்வி போதிக்கப்படுகிறது. வேலூர் மாநகரின் சின்னங்களில் ஒன்றாக விளங்கும் இக்கல்லூரியில் பயின்று வெளியேறிய ஆலிம்கள் (மார்க்க அறிஞர்கள்) ஆயிரக்கணக்கானோர் உள்ளனர்.

தமிழகம் மட்டுமன்றி, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, இலங்கை, மலேசியா, மியான்மர்… எனப் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் நாடுகளிலிருந்தும் மாணவர்கள் வந்து மார்க்கத்தையும் ஒழுக்கத்தையும் கற்றுச்செல்கின்றனர்.

இவர்கள், தாம் கல்வி கற்ற கல்லூரியின் பெயரை (பாகியாத்) அடையாளப்படுத்தும் வகையில் தம் பெயர்களுடன் ‘பாகவி’ எனும் பெயரையும் சேர்த்துக்கொள்வதில் பெருமிதம் கொள்கின்றனர்.

இந்த ‘பாகவி’கள் உலக நாடுகள் எங்கும் பரவிச் சென்று இறைப் பணியாற்றிவருகின்றார்கள்; இறையியல் கல்லூரிகளை நிறுவுதல், ஆசிரியர்களாக இருந்து கற்பித்தல், இறையில்லங்களை உருவாக்குதல், அவற்றில் ‘இமாம்’களாக இருந்து தொழுகை நடத்துதல், சிறார்களுக்கு வேதத்தையும் வழிபாடுகளையும் பயிற்றுவித்தல், எழுத்து மற்றும் பேச்சின் வாயிலாக நல்லொழுக்கங்களைப் போதித்தல் முதலான சமுதாயப் பணிகளை அடக்கத்தோடும் அர்ப்பணிப்பு உணர்வோடும் ஆற்றிவருகின்றனர்.

இந்திய விடுதலைப் போரில் கலந்துகொண்டு அதற்காகத் தீவிரப் பரப்புரை செய்தவர்களும் இவர்களில் அடங்குவர். தமிழ்நாட்டின் பள்ளபட்டி (அறவக்குறிச்சி) மௌலானா, மணிமொழி கலீலுர் ரஹ்மான் அவர்கள் ஓர் உதாரணம். பெரும்பாலும் குறைந்த சன்மானம் பெற்றுக்கொண்டு, வசதிகளைச் சுருக்கிக்கொண்டு, உள்ளதைவைத்துப் போதுமாக்கிக்கொண்டு ஒருவகை அர்ப்பணிப்பு வாழ்வை வலிய வருத்திக்கொண்டவர்கள், இந்த ஆலிம் பெருமக்கள்.

தாய்க் கல்லூரி

மற்ற கல்லூரிகள் (மத்ரஸாக்கள்) பெரும்பாலும் பாகியாத்தில் கற்றவர்களாலேயே உருவாக்கப்பட்டவை என்பதாலும் பாகியாத்திற்குப் பின்னால் உருவானவை என்பதாலும் பாகியாத்தை ‘தாய்க் கல்லூரி’ (உம்முல் மதாரிஸ்) என்று அழைப்பர்.

இக்கல்லூரியின் நிறுவனர் மௌலானா, ஷாஹ் அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) அவர்கள், ‘அஃலா ஹள்ரத்’ (மேலான பேரறிஞர்) என்று மரியாதையோடு வழங்கப்பட்டார்கள். 1831 அக்டோபர், 19ஆம் நாள் (ஹி. 1247 ஜுமாதல் ஊலா) முதல் பிறையில் பிறந்தார்கள். இவர்களின் பூர்வீகம் சேலம் ஆத்தூர். இருப்பினும், வேலூரே பிற்காலத்தில் இவர்களின் ஊராயிற்று.

மௌலானா அப்துல் காதிர் – ஃபாத்திமா தம்பதிக்கு மகனாகப் பிறந்த அன்னார், தமிழ், அரபி, உர்தூ, ஃபார்சி ஆகிய மொழிகள் அறிந்தவர்கள்; இயற்கை மருத்துவம் கற்றவர்கள். வேலூர், சென்னை, புனித மக்கா முதலான இடங்களில் கல்வி கற்று வேலூர் திரும்பிய அண்ணல் அஃலா அவர்கள் 1857ஆம் ஆண்டு வேலூரில் பாகியாத் கல்லூரியை நிறுவினார்கள். அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம் ‘ஷம்சுல் உலமா’ (மார்க்க ஞானச் சூரியன்) என்ற பட்டத்தை வழங்கியது. வேலூரில் தமது 90ஆவது வயதில் ஹி. 1337ஆம் ஆண்டு மறைந்தார்கள்.

நினைவலைகள்

அண்ணல் அஃலா ஹள்ரத் அவர்கள் குறித்த நினைவலைகளைப் பகிர்ந்துகொள்வதற்காகக் கடந்த 14.01.2017 அன்று, சென்னை மஅமூர் பள்ளிவாசலில் காலைமுதல் இரவுவரை ஒருநாள் நிகழ்வு ஒன்று சிறப்பாக நடந்தேறியது. சென்னை பாகவிகள் சேர்ந்து நடத்திய இந்தக் கூட்டத்தில் பல அமர்வுகள்.

ஒரு அமர்வில், மூத்த பாகவிகள் ஒவ்வொரு துறையிலும் ஆற்றிய சேவைகள் குறித்து துறைவாரியாக இன்றைய இளம் பாகவிகள் கருத்துரைத்தார்கள். மற்றோர் அமர்வில் பயனுள்ள பட்டிமன்றம் ஒன்று நடத்தப்பட்டது. இன்னோர் அமர்வில் சமகால மூத்த பாகவி ஆலிம்களும் மற்ற அறிஞர்களும் கலந்துகொண்டு ஆற்றிய உரைகள் இடம்பெற்றன.

வித்தியாசப்படுத்த இயலாத வகையில், ஒவ்வோர் அமர்வும் ஒவ்வொரு கோணத்தில் பயன்மிகுந்தும் சிறப்பு நிறைந்தும் அமைந்தது. உலமாக்களும் பொதுமக்களும் அரங்கில் நிறைந்திருந்து ஆவலோடு உரைகளைக் கேட்டுப் பயனடைந்தனர்.

பலன் என்ன?

இந்தக் கூட்டத்தால் மக்களுக்கு, மார்க்க அறிஞர்களின் அருமை பெருமைகள், தியாகங்கள் அறியக் கிடைத்ததுடன் மார்க்கத்திற்காக நாமும் ஏதாவது ஒரு வகையில் தொண்டாற்ற வேண்டும்; மார்க்கக் கல்வியின் வளர்ச்சியில் நமது பங்கும் இருக்க வேண்டும் என்ற உணர்வும் விழிப்பும் ஏற்பட்டது முதல் பயனாகும். பொதுவான ஆலிம்களுக்கு, தங்களைப் பற்றிய மதிப்பீடு, எதிர்காலத்தில் மார்க்க சேவையில் தாங்கள் காட்ட வேண்டிய வேகம், அர்ப்பணிப்பு ஆகியவற்றில் ஒரு புதிய எழுச்சி ஏற்பட்டிருக்கும்.

பாகவிகளைப் பொறுத்தவரை பல பயன்களைக் குறிப்பிடலாம். 1. ‘பாகவி’ என்ற அடையாளத்தை வழங்கி சமுதாயத்திற்குத் தங்களை அறிமுகப்படுத்திய பாகியாத் நிறுவனத்தையும் நிறுவனரையும் நன்றியோடு நினைவுகூர கிடைத்த வாய்ப்பு. 2. மூத்த பாகவிகளை ஒரே இடத்தில் சந்திக்கக் கிடைத்த அரிய வாய்ப்பு. 3. பாகியாத்தின் முன்னாள், இன்னாள் முதல்வர்களையும் போராசிரியர்களையும் சந்தித்து அளவளாவக் கிடைத்த அருமையான சந்தர்ப்பம். 4. பாகியாத்தின் சக மாணவர்கள், பழைய மற்றும் புதிய மாணவர்கள் ஆகியோரைச் சந்தித்து, கடந்த காலத்தை நினைவுகூர்ந்து உறவைப் பசுமைப்படுத்திக்கொள்ள கிடைத்த இனிய, சுகமான தருணம்.

மொத்தத்தில், கலந்துகொண்ட அனைவருக்கும், முன்னோரின் அரிய தியாகங்களோடு தங்களின் சிறிய பணியை ஒப்பிட்டுப்பார்த்து, சுயபரிசோதனை செய்துகொள்வதற்கும் குறைகளைக் களைந்து, இனிவரும் நாட்களில் நிறைகளை நித்தம் நித்தம் தேடிக்கொள்வதற்கும் கிடைத்த அகத்தூண்டல். இதுவே எல்லாவற்றையும்விடப் பெரிது; முக்கியமானது.

இந்த அருமையான -மனநிறைவான- சந்திப்புக்கும் அமர்வுகளுக்கும் முன்நின்று ஏற்பாடு செய்த சென்னை பாகவிகள், அவர்களுக்குத் துணைநின்ற ஆலிம்கள், பிரமுகர்கள், பொதுமக்கள் ஆகிய அனைவருக்கும் இதயங்கனிந்த நன்றி!

குறிப்பாக, அடையாறு அரபிக்கல்லூரி முதல்வர் மௌலவி, சதீதுத்தீன் பாகவி, புதுப்பேட்டை மஹ்மூத் பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி ஏரல் பீர் முஹம்மது பாகவி, சாலிகிராமம் V.R. புரம் பள்ளிவாசல் தலைவர் முஜீபுர் ரஹ்மான் பாகவி, மண்ணடி லஜ்னத்துல் முஹ்ஸினீன் பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி, ஃபக்ருத்தீன் பாகவி, பின்னால் நின்று முக்கிய சேவைகளைப் புரிந்த மஅமூர் பள்ளிவாசல் இமாம் K.A. அப்துர் ரஹ்மான் ரஹ்மானீ, அப்பள்ளிவாசலின் தலைமை இமாம் மௌலவி இல்யாஸ் காசிமி மற்றும் நிர்வாகத்தார் அனைவருக்கும் நன்றிகள் பல. ஜஸாகுமுல்லாஹ் கைரல் ஜஸா.

ஒரேயொரு வேண்டுகோள்!

கூட்டத்தின் உரைகளைப் பதிவு செய்து பாதுகாத்து, சமுதாயத்திடம் கொண்டுசேர்த்தால் அனைவருக்கும் பலன் கிடைக்கும். இளைய தலைமுறைக்கு வழிகாட்டும்! வஸ்ஸலாம்!

________________________

Tags: , , ,

Leave a Reply