பல்லவா பாக்லாவுக்கு ஐஎன்எஸ்ஏ விருது

அறிவியல் கதிர்

பல்லவா பாக்லாவுக்கு ஐஎன்எஸ்ஏ விருது
பேராசிரியர் கே. ராஜு

1974-ம் ஆண்டில் பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தி உலகை அதிரச் செய்தவர் இந்திரா காந்தி. இந்திய விஞ்ஞானிகளின் உயர்மட்ட அமைப்பான இந்திய தேசிய அறிவியல் கழகம் (Indian National Science Academy – INSA)   1986-ம் ஆண்டில் இந்திரா காந்தி பெயரில் அறிவியல் விருதை அளிப்பதென முடிவு செய்தது. ஐஎன்எஸ்ஏ-வைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் கூடி நாட்டில் அறிவியலைப் பரப்பும் பணியைச் சிறப்பாகச் செய்த ஒருவரைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஆங்கிலத்திலோ இந்திய மொழிகளில் ஏதாவதொரு மொழியிலோ அவரது  பணி இருக்கலாம். பொதுமக்களிடையே அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே ஐஎன்எஸ்ஏ-வின் நோக்கம். 2008-ம் ஆண்டில் தொடங்கி மூன்று ஆண்டுகளுக்கொரு முறை இந்த விருது அளிக்கப்படுகிறது.
இந்திரா காந்தி பிறந்து நூறாண்டு நிறைவைக் கொண்டாடும் இந்த ஆண்டில் பிரபல அறிவியல் ஊடகவியலாளர் பல்லவா பாக்லாவுக்கு  இந்திரா காந்தி விருது அளிக்கப்பட்டிருக்கிறது.  புது தில்லி தொலைக்காட்சியின் அறிவியல் பிரிவைக் கவனிக்கும் ஆசிரியர்தான் பல்லவா பாக்லா. தொலைக்காட்சியில் அறிவியல் செய்திகளைப் பார்ப்பவர்களுக்கு இவரைப் பற்றிய அறிமுகம் தேவையில்லை. சயன்ஸ் என்ற இதழின் நிருபராகவும் பிடிஐ நிறுவனத்தின் எழுத்தாளராகவும் என்டிடிவி தொலைக்காட்சியின் அறிவியல்  பிரிவு ஆசிரியராகவும் இவர் இருந்து வருகிறார். Getty Images நிறுவனத்தின் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராகவும் இருக்கிறார். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் குறித்த இவரது கட்டுரைகளுக்காக மூன்று தேசிய விருதுகளை இவர் வென்றிருக்கிறார்.
பருவநிலை மாற்றம் பற்றிய ஐ.நா.வின் சர்வதேசக் குழு இமாலயப் பனிமலைகள் உருகுவது குறித்து எடுத்த தவறான நிலையை அம்பலப்படுத்தி  எழுதியதற்காக 2010-ம் ஆண்டில் அமெரிக்க புவிஇயற்பியல் சங்கத்தின் டேவிட் பேர்ல்மான்  விருது இவருக்கு அளிக்கப்பட்டது. சந்திரனுக்கு இந்தியாவின் முதல் பயணமான சந்திரயான்-1 பற்றி 2008-ம் ஆண்டிலும் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட மங்கல்யான் பற்றி 2013-ம் ஆண்டிலும் இவர் மேற்கொண்ட பணிகளுக்காக பல்லவா பாக்லா பரவலான பாராட்டுகளைப் பெற்றார். ஏராளமான அறிவியல் நூல்களை எழுதி அறிவியலைப் பரப்பும் பணியை இவர் செய்து வருகிறார். அன்னாருக்கு நமது வாழ்த்துகள்.

Tags: ,

Leave a Reply