நெகமம்-பட்டணத்தில் புதிய நடுகற்கள் கண்டுபிடிப்பு

நெகமம்-பட்டணத்தில் புதிய நடுகற்கள் கண்டுபிடிப்பு

 

 

 

2012-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள்

 

நெகமத்தை அடுத்துள்ள தேவனாம்பாளையத்தைச் சேர்ந்த நண்பர் உருத்திரன், தம் ஊருக்கருகில் உள்ள பட்டணம் கிராமத்தில் தாம் கண்ணுற்ற ஒரு சிற்பத்தைக் காணவருமாறு அழைத்திருந்தார். கோவை-பொள்ளாச்சிப் பெருஞ்சாலையில் அமைந்துள்ள கோயில்பாளையம் என்னும் ஊரிலிருந்து பிரியும் ஒரு கிளைச்சாலையின் வழியே பட்டணம் கிராமத்தை அடைந்தோம். அங்கே, சாலையின் ஓரத்தில், செடிகளின் மறைவில் ஒரு பெண்ணின் சிற்பம் காணப்பட்டது. மூன்றடி உயரத்தில், மேற்பகுதியிலும், கீழ்ப்பகுதியிலும் பிறை வடிவில் வளைவான ஒரு தோற்றத்தில் காணப்பட்ட அச்சிற்பத்தில், பெண்ணொருத்தி தன் வலது கையில் அணைத்த நிலையில் இடுப்பில் ஒரு குழந்தையைத் தாங்கி நிற்கிறாள். அவளது இரு புறத்திலும் இரு மாடுகள், அவளின் தொடைப்பகுதியில் முட்டிக்கொண்டிருப்பதுபோல் தோற்றமளித்தன. அழகான சிற்பம்.

2012-இல் தாய்த்தெய்வச் சிற்பம்

நடுகல் சிற்பம்-தாய்த்தெய்வ வழிபாடு

இவ்வூர் மக்கள், இந்தச் சிற்பத்தைப்பற்றி ஒரு செய்தி சொல்கிறார்கள். கருவுற்ற ஒரு பெண், மாடு முட்டியதால் இறந்து விட்டதாகச் சொல்கிறார்கள். இது போன்ற, மக்களிடையே வழங்கும் கதை மரபும் இச்சிற்பத்தின் உண்மைப் பின்னணியைத் தெரிந்துகொள்ள உதவும் சான்றுகளில் ஒன்று. இந்தச் சிற்பத்தின் ஒளிப்படத்தைப் பார்த்த தொல்லியல்  ஆய்வாளரான,  சென்னை சு.இராசகோபால் அவர்கள், இச்சிற்பம், தாய்த்தெய்வ வழிபாட்டுடன் தொடர்புடைய ஒன்றாக இருக்கலாம் எனக்குறிப்பிட்டுள்ளார்.

கல்வெட்டு உள்ளதா?

மேற்படி நடுகல் சிற்பத்தின் அடிப்பகுதி மண்ணில் புதைந்திருந்தது. புதையுண்ட பகுதியில் ஏதேனும் கல்வெட்டு இருக்குமோ என்னும் ஆவல் எழுந்தது. ஆனால், சிற்பத்தைத் தோண்டியெடுத்துப் பார்க்கும் சூழ்நிலை இல்லை. ஊர்க் கவுண்டர், ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவர் ஆகியோரிடம் கலந்து பேசி, சிற்பத்தைத் தோண்டிப் பார்க்கும் ஏற்பாட்டை உருத்திரன் செய்தபின்னர் மீண்டும் வருவதாகத் திட்டமிட்டு ஊர் திரும்பினேன்.

வேறு சிற்பங்கள்

அருகிலேயே, வேறு நடுகற் சிற்பங்கள் இரண்டு தரையில் புதைந்திருந்ததையும் கண்டோம்.

 

2012-இல் புதையுண்ட நிலையில்   இரு நடுகற் சிற்பங்கள்

(தற்போது 13-06-2017 அன்று தோண்டியெடுக்கப்பட்டவை)

 

 

2013-ஆம் ஆண்டு ஜூலைத் திங்கள்

 

பத்து மாத இடைவெள்ளிக்குப் பின்னரே, மீண்டும் பட்டணம் சென்று தாய்த்தெய்வச் சிலையைத் தோண்டியெடுத்துப் பார்க்கும் சூழ்நிலை உண்டாயிற்று. தோண்டியெடுத்த  சிற்பத்தின் பீடப்பகுதியில் எழுத்துகள் தெரிந்ததால், சிலையை நன்கு தோண்டி நிற்கவைத்துப் பார்த்ததில் மூன்று வரிகளில் கல்வெட்டு எழுத்துகள் காணப்பட்டன. எழுத்துகளைப்படித்த வாசகம் பின்வருமாறு:

2013-இல் தோண்டியெடுத்தபோது

 

2013-இல் தோண்டியெடுத்தபோது – கல்வெட்டுடன்

 

 குறோதி வருசம் அற்ப்பிசை மீ (மாதம்) 9 உ (தேதி)

       முத்திலிவாட செட்டி உபையம்

 

அதாவது, தமிழ் ஆண்டான குரோதி வருடத்தில், ஐப்பசி மாதத்தில் ஒன்பதாம் தேதி, முத்திலிவாட செட்டி என்பவரால் இச்சிற்பம் உபையமாகச் செய்து தரப்பட்டது எனக் கல்வெட்டுச் செய்தி கூறுகிறது. எழுத்தமைதியை வைத்துப் பார்க்கும்போது குரோதி வருடம்கி.பி. 1724 அல்லது கி.பி. 1784 ஆண்டுகளோடு பொருந்தி வருகிறது. ஐப்பசி மாதம், செப்டம்பர்1724 அல்லது அக்டோபர்1784 என்னும் காலக்கணக்கீட்டுடன் பொருந்தி வருகிறது. இருநூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த நடுகல் சிற்பம் என்பதில் ஐயமில்லை. சிலையைத் தோண்டி எடுக்கையில் ஊர்ப் பெரியவர்களிடம் நடுகல் சிற்பத்தின் சிறப்பை எடுத்துச் சொல்லி, ஊரின் பெருமையாக இந்த வரலாற்றுச் சின்னத்தைப் பேணவேண்டும் என்று அறிவுறுத்தியும், நடுகல்லைப் பற்றி நாளிதழ்களில் செய்திகள் கொடுத்து வெளிப்படுத்தியும், தொல்லியல் துறையினரிடம் இந்த நடுகல் சிற்பத்தை அவர்களது அருங்காட்சியகத்தில் சேர்க்க விண்ணப்பம் செய்தும் பலன் ஏதும் விளையவில்லை.

 

2017-ஆம் ஆண்டு ஜூன் திங்கள்- நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர்

 

மூன்று நாள்களுக்கு முன் (ஜூன் 13, 2017), பட்டணம் கிராமத்தின் பரமசிவன் கோயிலின் பூசையாளர் (அவரது கோயிலில் இருந்த ஒரு கல்வெட்டைப் படித்துச் செய்தி வெளியிட்ட வகையில் நண்பரானவர்) சுப்பிரமணியம் என்பவர், சாலை விரிவாக்கத்துக்காக இயந்திரங்கள் கொண்டு சாலைப்பணி நடைபெறப்போவதால் நடுகற்சிற்பங்கள் பாதுகாப்பாகத் தரையின் கீழிருந்து வெளிக்கொணரவேண்டும் என்னும் நல்லெண்ணத்தால் என்னைத் தொடர்புகொண்டு நேரில் வர வேண்டுகோள் விடுத்தார். அவ்வண்ணமே நேரில சென்று சிற்பங்கள் பாதுகாப்பாக வெளியே எடுக்கப்படுவதைக் கண்காணித்து, ஊர்த்தலைவர்களிடம் இச்சிற்பங்களைத் தகுந்த இடமொன்றில் நிலை நிறுத்திப்

பாதுகாக்க வேண்டிக்கொண்டேன். அதுபோழ்து, 2012-ஆம் ஆண்டில் கண்டறிந்து, 2013-ஆம் ஆண்டில் அதன் சிறப்பை வெளிப்படுத்திய தாய்த் தெய்வ நடுகல் சிற்பம் எவ்வாறுள்ளதெனப் பார்க்கையில், உள்ளம் நொந்துபோனது. அக்காட்சியைக் கீழுள்ள ஒளிப்படம் காட்டும்.

2013-இல் புத்துயிர் பெற்ற தாய்த்தெய்வச் சிற்பம்

தற்போது மீண்டும் புதையுண்ட நிலையில்

 

 

தொல்லியல் எச்சங்களின் எதிர்காலம் என்ன?

மக்களுக்கும் மனமில்லை. தொல்லியல் துறைக்கும் மனமில்லை. தொல்லியல் துறை தங்கள் பகுதியில் புதிய எச்சங்களைத் தேடித்தேடி வெளிக்கொணர்ந்த காலங்கள் போயின. தன்னார்வலர்களின் தேடலைக் கூடப் பயன்படுத்திக்கொள்ள அத்துறை முன்வரவில்லையெனில் என் செய்ய? பூசையாளர் சுப்பிரமணியனுக்கு இருக்கும் பொறுப்புணர்வுகூடத் தொல்லியல் துறைக்கு இல்லையெனில் என் சொல்ல?

 

தமிழ் மரபு அறக்கட்டளை தலையிட  வேண்டுகோள்

 

தமிழ் மரபு அறக்கட்டளை, கோவைத் தொல்லியல் துறையுடன் தொடர்புகொண்டு ஆவன (மூன்று நடுகல் சிற்பங்களையும் அருங்காட்சியகத்தில் காப்பது அல்லது கல்வெட்டுடன் கூடிய தாய்த்தெய்வச் சிற்பத்தை மட்டும் அருங்காட்சியகத்தில் காப்பது)  செய்யவேண்டும் எனப் பணிவுடன் வேண்டிக்கொள்கிறேன்.

 

புதிய நடுகற்கள் பற்றி

 

தோண்டியெடுத்த இரு நடுகற்சிலைகளில் ஒன்றில் எழுத்துப் பொறிப்பு காணப்படுகிறது. ஆனால் படிக்க இயலாத அளவு சிதைந்துள்ளது. எழுத்துப்பரப்பின்மீது மாவு பூசாத நிலையில் எழுத்துகளே இல்லை என்னுமளவு கல்லின் பரப்பு தேய்மானத்தைக்கொண்டுள்ளது. நடுவில் ஓர் ஆண்மகனும், அவனது இருபுறங்களிலும் இரு பெண்டிரும், வலது ஓரத்தில் உருவத்தில் சிறிய மற்றொரு பெண்ணும் காணப்படுகின்றனர். ஆணின் பின்புறம் வேல் போன்றதொரு ஆயுதம் காணப்படுகிறது. ஆண் கைகள் கூப்பி நிற்பது போல் உள்ளது. இடப்புறம் உள்ள பெண் தன் இரு கைகளையும் உயர்த்தியவாறும், கைகளில் எவற்றையோ ஏந்தியவாறும் காணப்படுகிறாள். வலப்புறம் உள்ள பெண் தன் கையொன்றை மடக்கியவாறு ஒரு மதுக்குடுவையை ஏந்தி நிற்கிறாள். வீரர்களுக்கு எடுக்கப்பட்ட நடுகல்லில் மதுக்குடுவை பெரும்பாலும் காணப்படுவது இயல்பு. ஆண் சிற்பத்தில் முழங்கால் வரை ஆடைக்கட்டும், பெண்களின் சிற்பங்களில் கணுக்கால் வரை ஆடைக்கட்டும் காணப்படுகின்றன.

கல்வெட்டுள்ள புதிய நடுகல்

       (எழுத்துப்பொறிப்பு புலப்படாத நிலை)

கல்வெட்டுள்ள புதிய நடுகல்

              (எழுத்துப்பொறிப்புடன்)

மற்றொரு நடுகல்லிலும், முதல் நடுகல் போலவே ஓர் ஆணும், இரு பெண்களும் முதன்மையாகக் காணப்படுகின்றனர் உருவங்கள் சற்றே சிதைந்துள்ளன. இதுவும் வீரனொருவனுக்கு எடுக்கப்பட்ட நடுகல்லாகவே இருக்கவேண்டும். நடுகற்களின் காலம் 18-ஆம் நூற்றாண்டுக்கு முன்னர் எனக் கருதலாம்.

புதிய நடுகற்கள் தோண்டியெடுக்கும் காட்சிகள்

 

 

 

து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

அலைபேசி:  9444939156.

Tags: ,

Leave a Reply