நிலக்கரி ஆலைகளை அறவே தவிர்க்க முடியுமா?

அறிவியல் கதிர்
நிலக்கரி ஆலைகளை அறவே தவிர்க்க முடியுமா?
பேராசிரியர் கே. ராஜு
வளரும் நாடுகளில் உருவாக்கப்படும் நிலக்கரி ஆலைகளுக்கு – அசாதாரணமான சூழ்நிலைகளில் தவிர –  இனி நிதியுதவி வழங்கப் போவதில்லை என உலகவங்கி அண்மையில் அறிவித்துள்ளது. அமெரிக்காவும் பிற வளர்ந்த நாடுகளும் கூட  பருவநிலை மாற்றங்கள் காரணமாக இதேமாதிரியான முடிவுகளை எடுப்பது பற்றி யோசித்து வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை நிலக்கரியை அறவே கைவிடுவதென்பது இப்போதைக்கு சாத்தியமில்லை. புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மிகப் பெரிய எதிர்காலம் கிடைக்கப்போகிறது என்று வைத்துக் கொண்டாலும் கூட நிலக்கரி ஆலைகளிலிருந்து மின்னாற்றலைப் பெறுவது மேலும் பல ஆண்டுகளுக்கு தவிர்க்க முடியாததாகவே இருக்கும். பல நிலக்கரி ஆலைகள் காற்று மண்டலத்தை மிகவும் மாசுபடுத்தி வருவதை அறிவியல் சுற்றுச்சூழல் மையம் (CSE) சுட்டிக் காட்டுகிறது. சூழலியலாளர் என்ற முறையில் நிலக்கரியிலிருந்து மின்னாற்றறலைத் தயாரிப்பதை அறவே தவிர்க்க வேண்டியது தனது லட்சியம்தான் என்றாலும் அதற்கு மாற்றைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்பு  உடனடியாக இல்லை என சிஎஸ்ஈ தலைவர் சுனிதா நாராயன் குறிப்பிடுகிறார்.
ஏற்கனவே நீண்ட காலமாகச் செயல்படும் பல நிலக்கரி ஆலைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போதே பல ஆலைகள் புதியதாக நிறுவப்படுகின்றன. ஆனால் இவற்றில் பல ஆலைகள் திறன் அடிப்படையிலும் சரி, சுற்றுச்சூழல் அடிப்படையிலும் சரி அதிக பலன் தரக்கூடியவையாக இல்லை. இவை எல்லாவற்றையும் மூடிவிடுவதற்குப் பதிலாக நிலக்கரியை எரித்து ஆற்றலை உருவாக்குவதில் கூடுதல் திறனோடு செயல்படுவது எப்படி, குறைவான அளவில் நிலக்கரியைப் பயன்படுத்தி  அதிக ஆற்றலைப் பெறுவது எப்படி என்பதில் நம் கவனத்தைச் செலுத்துவதே சிறந்த உத்தியாக இருக்கும். திறனற்ற ஆலைகள் மூலம் காற்றை மாசுபடுத்துவதென்பது இந்தியாவுக்கு மட்டுமே உரியதல்ல. நிலக்கரி ஆலைகளிலிருந்து கார்பன் வெளியீடுகளைப் பொறுத்தவரை சீனா நம்மைவிட மோசமாகச் செயல்பட்டு வருகிறது. 2012ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி இந்தியாவைவிட ஐந்து மடங்கு அதிகமாக சீனாவில் கார்பன் வெளியீடுகள் இருக்கின்றன. ஆனால் அதைக் காரணமாகக் காண்பித்து நமது ஆலைகளை மேலும் திறனுடன் செயல்பட வைப்பதிலிருந்து நாம் விலகி நிற்க முடியாது. காற்று மண்டலத்திலிருந்து கார்பனைப் பிரித்து உள்வாங்கும் தொழில்நுட்பம் வர்த்தகரீதியில் வெற்றிபெற சில ஆண்டுகள் பிடிக்கும் என்பதே தற்போதைய நிலை. “சுத்தமான நிலக்கரி”யை நோக்கிய வளர்ச்சி உலகம் முழுதும் நடந்து கொண்டிருக்கிறது. நமது ஆலைகளை திறன் மேம்பட்ட ஆலைகளாக மாற்றியமைத்தால், புதிய ஆலைகளில் நிலக்கரி உபயோகத்தை 15 விழுக்காட்டிற்கு மேல் குறைக்க முடியும். ஆலைகளில் நீர்ப்பயன்பாடு, தூசுகள் வெளியீடு, கழிவு சாம்பலை மறுசுழற்சி செய்வது போன்ற அம்சங்களில் கவனம் செலுத்தி சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் குறைக்க அரசின் முயற்சியும் உலக நாடுகளின் உதவியும் தேவைப்படுகின்றன. நகரங்களில் காற்று மாசுபடுவதால் தற்போது நிலக்கரி ஆலைகளை நகரங்களை விட்டுத் தள்ளி அமைக்கத் தொடங்கி இருக்கின்றனர். ஆனால் இது பிரச்சனைக்குத் தீர்வு அல்ல. நாங்கள் பாதிக்கப்படக்கூடாது.. வேறு யாராவது பாதிக்கப்படட்டும் என்ற கண்ணோட்டம் சரியானதல்ல. அதேபோல், நிலக்கரிக்கு முடிவு கட்டுவோம் என்று உலக அளவில் ஏற்பட்டிருக்கும் அழுத்தம் “எதன் அருகிலும் எதையும் நிறுவக்கூடாது (Build Absolutely Nothing Anywhere Near Anything)” என்று போய் முடிவதும் ஆபத்தானது. இந்தக் கண்ணோட்டம் புதிதாக வரும் எந்த வளர்ச்சித் திட்டத்தையுமே பாதிக்கும். உலக நாடுகளின் ஆதரவும் நிலக்கரி ஆலைகளை மேலும் திறனுடன் இயக்க வேண்டும் என்ற இந்திய அரசின் முனைப்பும் இல்லையெனில் காற்றை மாசுபடுத்தும் ஆலைகளை மேலும் நிறுவுவது ஒன்றே விளைவாக இருக்கும். இதற்கு எதிராக நாம் குரல் கொடுப்போம்.
(உதவிய கட்டுரை : 2015 செப்டம்பர் 9 தி ஹிண்டு நாளிதழில் ராகுல் டோங்கியா எழுதியது.)

Tags: , ,

Leave a Reply