நாவைப் பாதுகாப்போம்

( J.S.S. அலி பாதுஷா மன்பயீ பாஜில் ரஷாதி, தேரிருவேலி

இருப்பு : ஷார்ஜா )

வணங்குவதற்கும் வழிபடுவதற்கும் தகுதியான ஒரே இறைவன் அல்லாஹ்வின்  கருணை கொண்டு துவங்குகிறேன்.

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான் ( மனிதன் ) எதைக் கூறியபோதிலும் ( அதனை எழுதக் ) காத்துக் கொண்டிருக்கும் ஒருவர், அவனிடம் இல்லாமலில்லை. ( அவன் வாயில் இருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் உடனுக்குடன் பதியப்படுகிறது. ( அல் குர்ஆன் 50 : 18 )

மேலே கூறப்பட்ட வசனத்தின் கருத்து மனிதன் பேசுகின்ற, அவனின் நாவிலிருந்து வெளிவருகின்ற ஒவ்வொரு பேச்சும் சொல்லும் பதிவேட்டில் பதியப்பட்டுகின்றது. ஆனால் இன்று நடப்பதென்ன உலகில் நல்ல பேச்சுக்களை கேட்பதே அபூர்வமாகிவிட்டது. மனிதர்கள் இருக்கும் இடத்திலிருந்து இறையில்லம் வரை கூச்சலும் குழப்பமும் அதிகரித்து விட்டது.

இரண்டு சகோதரர்கள் சந்தித்துக் கொண்டால் அவர்களின் சுகம் நலன்களை விசாரிப்பதை விட மூன்றாவது நபரை பற்றி புறம் பேசுவது தான் இன்றைய நிலை. இது இப்படியென்றால் நான்கு பேர் அல்லது ஏழெட்டு பேர் சேர்ந்து விட்டால் என்ன நடக்கும் என்பதை சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை. அந்த அளவிற்கு மனிதர்கள் வீண் பேச்சிலும் வெட்டிப் பேச்சிலும் பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எனதருமை முஸ்லிம் சகோதரர்களே நாம் எதை பேசினாலும் எச்சரிக்கையோடும் அளவோடும் பேசவேண்டும்.

நமது நாயகம் ( ஸல் ) அவர்கள் சொன்னதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் ஒரு மனிதனின் இஸ்லாம் சிறப்பானது. நிறைவானது என்பது அவன் தனக்குத் தேவையற்றவைகளை விட்டுவிடுவதாகும் என்று நபிகள் நாயகம் ( ஸல் ) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி )

ஹதீஸின் கருத்து தேவையற்ற விஷயங்களை பேசாமல் இருப்பதும் மற்றும் மார்க்கம் அனுமதிக்காத வீணான செயல்களை விட்டும் விளகியிருப்பதும் ஈமான் முழுமையானது எனபதற்கு அடையாளமாகும். மேலும் மேற்கண்ட செயல்களை விட்டும் தவிர்ந்திருப்பது ஒருவரிடம் உள்ள நல்ல குணமும் அழகுமாகும். மனிதர்களின் ஈடேற்றமும் வெற்றியும் நல்ல பேச்சுக்களைப் பேசி வீணானவைகளை விட்டொழிப்பதில் தான் உள்ளது.

மனிதனுடைய நற்பாக்கியமும் துர்பாக்கியமும் அவனுடைய இரு தாடைகளுக்கிடையே உள்ளன. ( நாவை முறையாகப் பயன்படுத்துவது நற்பாக்கியமாகும். அதனை முறை தவறிப்பயன்படுத்துவது துர்பாக்கியமாகும்) என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அதீயிப்னு ஹாதிம் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் ( தப்ரானி )

ஹஜ்ரத் பரா இப்னு ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் கிராமவாசி ( ஸஹாபி ) ஒருவர் நபி ( ஸல் ) அவர்களின் சமூகத்திற்கு வந்து யாரஸூலல்லாஹ் என்னை சுவனத்தில் நுழையச் செய்யும் செயல் ஒன்றை எனக்கு சொல்லித் தாருங்கள் என்று கேட்டார்.

நபி ( ஸல் ) அவர்கள் சில அமல்களைக் கூறினார்கள். அவற்றில் அடிமையை விடுவித்தல், கடனாளியை கடன் சுமையிலிருந்து விடுவித்தல், பிராணியுடைய பாலிலிருந்து பலனடைய மற்றவர்களுக்குக் அதைக் கொடுத்து உதவுதல் என்பவையும் அடங்கும். இதைத் தவிர மேலும் சில செயல்களையும் கூறினார்கள். அதன் பிறகு இவைகளைச் செய்ய உமக்கு இயலவில்லையானால் தீய பேச்சுக்கள் பேசுவதை விட்டும் உமது நாவைத் தடை செய்வீராக என்று நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (பைஹகீ)

நாவைத் தடை செய்தல் என்றால், நாவை கட்டுப்படுத்தி வைத்தல் என்பது தான். மேலும் அந்நாவை தவறாக பயன்படுத்தக்கூடாது. நாவை தவறாக பயன்படுத்தக்கூடாது என்பதில் ஏராளம் உள்ளன.

அதில் உதாரணத்திற்கு சில புறம் பேசுதல், கோள் சொல்லுதல், வீண் பேச்சுக்கள் பேசுதல், ஒழுக்கமின்றி எல்லாவிதப் பேச்சும் பேசுதல், வெட்கக்கேடான எல்லாவிதப் பேச்சுக்களையும் பேசுதல், சண்டை சச்சரவு செய்தல், திட்டுதல், மனிதனையோ மிருகத்தையோ சபித்தல், பாட்டு மற்றும் கவிதையிலேயே எந்நேரமும் ஈடுபடுதல், கேலி செய்தல், இரகசியத்தை வெளிப்படுத்துதல், பொய் வாக்குறுதி அளித்தல், பொய் சத்தியம் செய்தல், சிலேடையாக பேசுதல், காரணமின்றி பிறரைப் புகழ்தல், காரணமின்றி கேள்விகள் கேட்டல் இது போன்று நாவு சம்பந்தப்பட்ட விஷயங்கள் ஏராளம் உள்ளன.

இவைகள் அனைத்தை விட்டும் தவிர்ந்து கொள்வது தான் மனிதனுக்கு ஈடேற்றத்தையும் வெற்றியையும் தரும். காரணம் ஈடேற்றம் பெற என்ன வழி என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபொழுது பின் வரும் ஹதீஸை கூறினார்கள்.

ஹஜ்ரத் உக்பதுப்னு ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் யாரஸுலல்லாஹ் ஈடேற்றம் பெற வழி என்ன ? என்று நபி ( ஸல் ) அவர்களிடம் நான் வினவினேன். உனது நாவைக் கட்டுப்படுத்திக் கொள்ளும், வீட்டில் தங்கியிரும் ( வீணாக வெளியில் செல்ல வேண்டாம் ) உமது பாவங்களை நினைத்து அழுது கொண்டிருப்பீராக ! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள். (திர்மிதி )

மேலும் ஒரு அறிவிப்பில் இவ்வாறு வருகிறது. அல்லாஹுத ஆலாவுக்கு மிகவும் பிரியமான அமல் (செயல்) எது என்று நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடம் வினவியபோது அனைவரும் மௌனமாக இருந்தனர். யாரும் பதில் கூறவில்லை. அல்லாஹ்வுக்கு மிகவும் பிரியமான அமல் (செயல்) நாவை பாதுகாப்பது தான்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூ ஜுஹைஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (பைஹகீ)

இன்று உலகத்தில் ஒட்டுமொத்த குழப்பங்களுக்கும் காரணம் நாவுதான். எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல்லிற்கும் வார்த்தைக்கும் கட்டுப்பட்டு நமது நாவை பாதுகாத்தாலே சந்தோஷமும் நிம்மதியும் மேலும் அனைத்து விதமான குழப்பங்களுக்கும் முடிவு கிடைத்து விடும்.

இம்மையிலும் மறுமையிலும் ஈடேற்றமும் வெற்றியும் கிடைத்திட நாவை பாதுகாப்போம்.

நபி வழி நடப்போம்

வஸ்ஸலாம்.

தொடர்பு எண் : 00971 55 253 59 63

Tags: , ,

Leave a Reply