தொல்லியல் தொல்லையா?

தொல்லியல் தொல்லையா?

பழங்காலக்கல்வெட்டுகளைப் பாதுகாப்பது எவ்வாறு?

 

 

உலக மரபு வார விழாவை ஒட்டி, கோவை தொல்லியல் துறையினரின் செய்தி ஒன்று நாளிதழில் ”தொல்பொருள் பெயரில் தொல்லை கூடாது” என்னும் தலைப்பில் வெளியானது. தொல்லியல் துறை தவிர, தன்னார்வத் தனிப்பேரோ, தன்னார்வ நிறுவனங்களோ தொல்லியல் அகழாய்வு நடத்த ஒப்புதல் இல்லை என்வும், தொல்பொருள்களைக் கண்டெடுக்கும்போது துறைக்குத் தெரியப்படுத்தவேண்டும் எனவும் அறிவுறுத்தும் செய்திதான் அது. கூடவே, கல்வெட்டுகள் பேரூர்க் கோயிலில் பாதுகாக்கப்படுவதாகவும் செய்தியில் சொல்லப்பட்டுள்ளது.

 

கோயில்களின் திருப்பணி பற்றி இரு செய்திகளைப் பகிர்ந்துகொண்ட அதேவேளையில், பழங்கல்வெட்டுகளையும், தொல்பொருள்களையும் பாதுகாக்கும் முறை பற்றிய கேள்வியும் எழுகிறது. அது பற்றிய ஒரு பகிர்வு இங்கே. மேலே குறிப்பிட்ட நாளிதழ்ச் செய்தியில் காணப்படும் அறிவுறுத்தலில் உள்ளது போல் இங்கு தனிப்பட்ட முறையில் எந்த அகழாய்வும் நடைபெறுவதில்லை. ASI என்னும் நடுவணரசின் தொல்லியல் ஆய்வுத்துறையினர் மட்டுமே அகழாய்வு செய்கின்றனர். அண்மையில், கீழடியில் ஆய்வு செய்த உயர்அலுவலர், தம்முடைய சொந்த வற்புறுத்தல் ஆயுதத்தைக் கையாண்டபிறகே தமிழகத்தில் அகழாய்வு செய்யமுடிந்தது எனப் பதிவு செய்துள்ளார் என்பதிலிருந்தே தமிழகத்தில் அகழாய்வின் நிலைமையை உணரலாம். தமிழகத் தொல்லியல் துறை அண்மையில் எத்துணை அகழாய்வுகள் நடத்தியுள்ளது எனச் சொல்லமுடியுமா? நிலைமை இவ்வாறிருக்க, தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், மாணவர்கள் ஆகியோர், வரலாறு-தொல்லியல் தேடல் ஆர்வம் காரணமாகக் களப்பணியில் ஈடுபாட்டுடன் இறங்கி, தொல்லியல் தொடர்பான இடங்களில் மேற்பரப்பு ஆய்வு (ஆய்வு என்று இதைச் சொல்லித் “தடா”  போடவேண்டிய தேவை இல்லை) செய்து சில வேளை தொல்பொருள்களைக் கண்டெடுக்கிறார்கள். அவ்வகைப் பொருள்களில் தமிழி (தமிழ்ப்பிராமி) எழுத்துகள் கொண்ட பானைச் சில்லுகள் கிடைத்துள்ளன. அவற்றின் மதிப்பு, உரியவர்க்குத் தெரியும். நானும், கல்வெட்டுத் தேடும் களப்பணியில் ஆங்காங்கே, பல கல்வெட்டுகளையும், எழுத்துப்பொறித்த சிற்பங்களையும் கண்டு, அவற்றைத் தொல்லியல் துறையினர் எடுத்துப்போய் துறையின் ஆய்வகத்தில் வைக்கலாமே எனக் கோரிக்கை விடுத்ததுண்டு. ஆனால், துறையினர் செயல்படுத்துவதில்லை.

 

செலக்கெறிச்சல் கல்வெட்டுகள்

 

கோவை மாவட்டம், சூலூர்-சுல்தான்பேட்டை சாலையில் செலக்கரச்சல் என்னும் ஊரில், 2012-ஆம் ஆண்டு கல்வெட்டுகளைக்காணச் சென்றபோது, அங்கு ஊரின் வீதிகளில் கல்வெட்டுகள் சிதறிக்கிடப்பதைக் காண நேர்ந்தது. அதுபற்றி ஆற்றாமையுடன் நாளிதழ்களில் செய்தி எழுதி வெளியிட்டேன். 2004-ஆம் ஆண்டு, செலக்கரச்சலில் சிதறிக்கிடந்த கல்வெட்டுகள் பற்றிய செய்தி கிடைதுக் கோவை தொல்லியல் துறையினரே படியெடுத்து கல்வெட்டுகள் சொல்லும் செய்திகளைப் பதிவு செய்துள்ளனர். அவர்களின் பதிவின்படி, செலக்கரச்சல் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான ஊராகும்; பழம் பானைகள், முதுமக்கள் தாழிகள், மன்னர்கள் காலத்து நாணயங்கள் இங்கு வெளிப்பட்டுள்ளன; கி.பி. 13-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கொங்குச் சோழர்க்ள் விக்கிரம சோழன், வீரராசேந்திர சோழன் ஆகியோரின் கல்வெட்டுகள் உள்ளன; சங்க காலத்திலிருந்து கி.பி. 14-ஆம் நூற்றாண்டு வரை இந்த ஊர் வரலாற்றுச் சிறப்புமிக்க ஊராகத் திகழ்ந்தது.

 

2004-ஆம் ஆண்டு எவ்வாறு கல்வெட்டுகள் ஊர்த்தெருக்களில் சிதறுண்டு கிடந்தனவோ, அதே நிலையில்தான் 2012-ஆம் ஆண்டு நான் பார்த்தபோதும் இருந்தன. பார்த்ததை இங்கே படங்கள் வாயிலாகப் பதிவு செய்கிறேன்.

ஊர்த் தெருக்களில்

 

ஊர்த் தெருக்களில்

 

ஊர்த் தெருக்களில்

ஊர்த் தெருக்களில்

ஊர்த் தெருக்களில்

 

 

ஊரைத்தாண்டி இட்டேரிக்குப் போகும் வழியில்

மண்ணில் புதையுண்ட நிலையில்

 

மண்ணை அகற்றிய நிலையில்

 

 

புதையுண்ட நிலையில்

 

தோண்டியெடுத்த நிலையில்-எழுத்துப்பொறிப்புடன்

தொல்லியல் அருங்காட்சியகத்தில் வைக்கலாமே

இந்தக் கல்வெட்டுகள், சிலை ஆகியவற்றின் இன்றைய நிலை என்ன? இவற்றை எப்படிப்பாதுகாக்கலாம்? துறை உதவ முன்வரவேண்டும்.

—————————————————————

து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.

அலைபேசி: 9444939156.

Tags: ,

Leave a Reply