தேரி காதை: பெண்களின் முதல் குரல்!

தேரி காதை: பெண்களின் முதல் குரல்!

By -பேராசிரியர் சு. இரமேஷ்
பெளத்தப் பிக்குணிகளின் பாடல்களடங்கிய தொகுதி “தேரி காதை’யாகும்.

இப்பாடல் தொகுதி புத்தர் வாழ்ந்த காலத்தில் பாலி மொழியில் உருவாக்கப்பட்டு, அவர் மறைவிற்குப் பிறகு தொகுக்கப்பட்டது. புத்தர் மறைவிற்குப் பின்னர் முதன்முறையாக சங்கம் கூடியபோது பெளத்த நூல்களைத் தொகுப்பது தொடர்பான பணி தொடங்கியது. அந்த வகையில் கெளதம புத்தரின் பல்வேறு போதனைகள் அடங்கிய பெளத்தர்களின் புனித நூலான திரிபிடகம் தொகுக்கப்பட்டது. விநயம், ஸூத்தம், அபிதம்மம் ஆகியன திரிபிடகத்தின் மூன்று பகுதிகளாகும். இதில் “தேரி காதை’ புத்தரின் முதன்மைச் சீடர்களுள் ஒருவரான ஆனந்தரால் தொகுக்கப்பட்ட ஸýத்த பிடகத்தில் அமைந்துள்ளது.
தேரி காதையைப் பாலி மொழியில் இருந்து 1905ஆம் ஆண்டு ரைஸ் டேவிட்ஸ் என்ற பெண்மணி ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். 2007ஆம் ஆண்டு பேராசிரியர் அ.மங்கை என்பவர் இதனைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். காதல், குடும்பம், குழந்தை வளர்ப்பு உள்ளிட்ட வட்டத்தை மீறி சிந்தித்த பெண்களின் குரலைத் தேரி காதை பதிவு செய்கிறது.
இந்நூல் பதினாறு சருக்கங்களில் 522 பாடல்களைக் கொண்டுள்ளது. பெண்களின் மனப்பதிவுகளாக அமைந்துள்ள தேரி காதை, பல இலக்கிய வடிவங்களுக்கு முன்னெடுப்புகளாக அமைந்துள்ளது. இதனை பெளத்த அறப்பாடல்களின் தொகுப்பாக மட்டும் கருதி இதன் எல்லையைச் சுருக்கிவிட முடியாது. பெண்ணியத்தின் தோற்றப் பிரதியாகவும் பெண்களின் உள்ளொளித் தேடல் சார்ந்த குரலாகவும் இதன் வாசிப்பின் பரப்பைக் கொண்டுசெல்ல வேண்டும்.
இந்திய மொழிகளில் உள்ள செவ்வியல் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்காக, ரோஹன் மூர்த்தி என்பவரால் “மூர்த்தி கிளாஸிக்கல் லைப்ரரி ஆஃப் இந்தியா’ என்ற அமைப்பு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த நூறு ஆண்டுகளில் இந்தியாவின் மிக முக்கியமான ஐந்நூறு செவ்வியல் இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க இந்த அமைப்புத் திட்டமிட்டுள்ளது. தொடக்கமாகக் கடந்த ஆண்டு இந்திய மொழிகளில் இருந்து ஐந்து நூல்களை இந்த அமைப்பு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. அவற்றுள் ஒன்று இந்தத் “தேரி காதை’யாகும். காலத்தால் முற்பட்ட தொன்மையான பெண்களின் பாடலாகத் “தேரி காதை’ விளங்குகிறது. தேரி காதையின் பாடல்கள் அனைத்தும் பெண்கள் பலரின் அனுபவத்தின் அடிப்படையில் எழுதப்பட்டவை.
தேரி காதையில் இடம்பெற்றுள்ள தேரிகளில் பலர், தங்களுடைய குழந்தைகளின் இழப்பின் காரணமாகவே ஆன்ம தேடலில் ஈடுபட்டு உண்மை நிலையை அடைந்துள்ளனர். கோசல மன்னனின் மனைவி உப்பிரீ. இவளது குழந்தை ஜீவா ஒருநாள் இறந்து விடுகிறது. தினமும் இடுகாட்டிற்குச் சென்று அழுகிறாள். பகவன் காரணம் கேட்கிறார். “”என் மகளுக்காக அழுகிறேன்” என்கிறாள். “”இங்கு 84,000 புதல்வியர் உள்ளனர். யாருக்காக நீ அழுகிறாய்?” என்ற பகவன், ஒவ்வொருவர் பற்றியும் விளக்குகிறார். உப்பிரீ உள்ளொளி பெற்றுத் தூய பதவி அடைகிறாள்.
சாவத்தியில் ஏழ்மை நிலையில் பிறந்தவள் கீச கோதமி. யாருமற்றவள் என்பதால் கணவன் வீட்டில் இவளைக் கேவலமாக நடத்தினர். இவளுக்கு ஒரு மகன் பிறந்தான். அனைவரும் இவளைக் கெளரவமாக நடத்தத் தொடங்கினர். ஒருநாள் மகன் இறந்து போனான். மறுபடியும் மோசமாக நடத்துவார்களே என அஞ்சிய கோதமி, இறந்துபோன மகனை இடுப்பில் கட்டிக்கொண்டு வீடுவீடாக மருந்து கேட்டு அலைகிறாள். அவர்கள் புத்தரிடம் ஆற்றுப்படுத்துகின்றனர். “”நகரத்துக்குள் போய், சாவு ஏதும் நடக்காத ஒரு வீட்டில் இருந்து கொஞ்சம் கடுகு வாங்கி வருவாய்” என்று புத்தர் கூறுகிறார். எல்லா வீடுகளிலும் ஒன்றிற்கும் மேற்பட்ட இறப்புகள் நடந்துள்ளதை அறிந்து புத்தரிடம் திரும்புகிறாள். “”கோதமி கடுகு கொண்டு வந்தாயா?” என்கிறார் புத்தர். கடுகு தனது வேலையைச் செய்தது. “”பகவனே! என்னை உங்கள் சங்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்கிறாள். 213லிருந்து 223வரையிலான பாடல்கள் கீச கோதமியின் பாடல்கள். அவற்றுள் ஒரு பாடலின் மொழிபெயர்ப்பு வருமாறு:

எண்வகைப் பாதையில் சென்றேன்
நறுமணநிலை செல்லும்வழி சென்றேன்
நிப்பாணம் உணர்ந்தேன்
புனித இலக்கின் கண்ணாடியில் உற்றுநோக்கினேன் (222)

குழந்தைச் செல்வம் குறித்த புனிதம் தொடர்ந்து பெண்களின்மீது கட்டப்பட்டு வந்திருப்பதைக் தேரிகளின் கதை நமக்கு விளக்குகிறது. இதிலிருந்து விடுபட்டவர்கள் பிறப்பின் உன்னதத்தை அடைந்துள்ளனர்.
தேரிகளில் பலர் கெளதம புத்தருக்கு முன்பிருந்த புத்தர்களின் காலத்திலும் வாழ்ந்துள்ளனர். இவர்களின் இரக்க குணம் அடுத்தடுத்த நற்பிறப்புக்களை அளித்து, இறுதியில் “நிப்பாண’ நிலைக்கு உயர்த்தியிருக்கிறது.
“தேரி காதை’தான் தமிழுக்குக் குண்டலகேசியைத் தந்தது. இதில் வரும் “பத்தா’ என்ற தேரியின் கதையைத்தான் நாதகுத்தனார் “குண்டலேசி’ என்ற காப்பியமாக்கினார்.

தேரி காதைதான் பெண்களின் முதல் குரல்.

————————————

நன்றி: தினமணி :-

http://www.dinamani.com/weekly-supplements/tamilmani/2017/mar/04

Tags: , , ,

Leave a Reply