தெருவில் கிரிக்கெட் ஆடும் மாணவர்கள் தேசிய அணிக்கு தேர்வாகலாம்

தெருக்கள் மற்றும் மைதானங்களில், ஆக்ரோஷமாக கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாடும் மாணவர்களை, தேசிய அணியில் இடம் பெற செய்ய, மத்திய அரசு புதிய, ஆன்லைன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
பள்ளி மாணவர்களில் சிறந்த விளையாட்டு வீரரை, தேசிய அளவில் விளையாட வைக்க, இந்திய விளையாட்டு ஆணையம் முடிவு செய்துள்ளது. இதற்காக, பள்ளி விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதுகுறித்து, மாநில அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, இந்திய விளையாட்டு ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதன் விவரம்: கிரிக்கெட் மற்றும் கால்பந்து விளையாட்டில் சிறந்த மாணவர்களை, பள்ளி, மாவட்டம், மாநிலம், தேசிய அளவில் தேர்வு செய்ய, ஆன் லைன் முறையில் பதிவு செய்யப்பட்டு, போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்த ஆண்டின் முதல் தகுதி போட்டி, மாவட்ட அளவில், நவம்பர் மூன்றாம் வாரம் நடக்க உள்ளது; தேசிய அளவில், ஜனவரியில் நடக்க உள்ளது.

இதில் பங்கேற்க விரும்புவோர், தங்கள் பள்ளி மற்றும் மாணவர்களின் பெயர் விவரங்களை, www.sspf.in அல்லது http://www.sportsauthorityofindia.nic.in இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். போட்டி விவரங்கள் இணையதளம் மூலம் மட்டுமே அறிவிக்கப்படும். தகுதி பெறும் மாணவர்களின் பட்டியலும், இணையதளத்தில் மட்டுமே வெளியாகும். இதில், நடுவர், விளையாட்டு வீரர்களை தேர்வு செய்பவர், ஸ்பான்சர் என, யாரும் தலையிட்டு பரிந்துரை செய்ய முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, விளையாட்டுப் பிரிவு இயக்குனர் சிலர் கூறுகையில்:

மத்திய அரசின் விளையாட்டு ஆணையம் மூலம் நடக்கும் இந்த போட்டியில், பங்கு பெறும்போது, எந்த பரிந்துரையும், தடையும் இல்லாமல், தேசிய அளவிலான கிரிக்கெட் மற்றும் கால்பந்து போட்டியில், இளைஞர்கள் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என்றனர்

Tags: , ,

Leave a Reply