துபாயில் ராயல் செஃப் நிறுவனம் வழங்கிய பொங்கல் விழாவில் திண்டுக்கல் ஐ லியோனியின் நகைச்சுவை பட்டிமன்றம்

 DSC_0472 (1)
துபாய் : துபாயில் DTS ஈவெண்ட்ஸ் மற்றும் ராயல் செஃப் நிறுவனம் இணைந்து வழங்கிய பொங்கல் விழா 16.01.2014  வியாழக்கிழமை மாலை துபாய் இந்தியப் பள்ளி ஷேக் ராஷித் கலையரங்கில் வெகு சிறப்புற நடைபெற்றது.
நிகழ்வின் துவக்கமாக DTS ஈவெண்ட்ஸ் இயக்குநர் ஜெயந்தி மாலா சுரேஷ், பிருந்தா குமார் உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்வினை துவக்கி வைத்தனர்.
ராயல் செஃப் நிறுவன மேலாண்மை இயக்குநர் ஷேக் தாவூத் வரவேற்புரை நிகழ்த்தினார். பொங்கல் திருநாளில் தமிழ் மக்களுக்கு சிறப்பான நிகழ்வினை ஏற்பாடு செய்ய வேண்டும் எனும் நோக்கில் திண்டுக்கள் ஐ லியோனி தலைமையிலான குழுவினரின் நகைச்சுவை பட்டிமன்றத்திற்கு ஏற்பாடு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
பிரசித்தம் குழுவினர் கவிதா பிரசன்னா தலைமையிலும், சந்திரா கீதாகிருஷ்ணன் தலைமையிலான குழுவினரின் ஆடல் மற்றும் பாடல் நிகழ்வுகள் கண்களுக்கு விருந்தாக அமைந்திருந்தது.
சிறப்பு விருந்தினர்களாக துபாய் இந்திய கன்சல் ஜெனரலாக பொறுப்பேற்றிருக்கும் அனுராக் பூஷன் முதன் முதலாக பொது நிகழ்வில் குறிப்பாக தமிழ் நிகழ்வில் பங்கேற்றார். அவர் தனது உரையில் இந்திய துணை தூதரகம் பொதுமக்களுக்கு எந்நேரமும் சேவையாற்றக்கூடிய வகையில் அமைந்திருக்கும் என்றார். தான் ரஜினிகாந்த்தின் ரசிகர் என்பதில் மகிழ்வடைவதாகக் குறிப்பிட்டார்.
ஐநாவின் உலக சமாதான தூதுவர் முனைவர் ஜெயசிங் ஆயிரக்கணக்கான தமிழ் மக்களை ஒருங்கே சந்திக்கும் வாய்ப்பினை நல்கிய அமீரகத் தமிழர்களுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.
துணை கன்சல் ஜெனரல் மதுரை அசோக் பாபு, கம்யூனிட்டி டெவலப்மெண்ட் அத்தாரிட்டியின் டைரக்டர் பழனி பாபு, இந்திய நலச்சங்க கன்வீனர் கே. குமார்,  சமூக ஆர்வலர் குத்தாலம் ஏ லியாக்கத் அலி, ஜெயந்தி மாலா சுரேஷ்  உள்ளிட்டோர் பொன்னாடை அணிவித்தும் நினைவுப் பரிசு வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.
கலைமாமணி திண்டுக்கல் ஐ லியோனி தலைமையிலான குழுவினரின் நகைச்சுவைப் பட்டிமன்றம் மகிழ்விற்கு துணை நிற்பவர்கள் உறவுகளா ? நண்பர்களா எனும் தலைப்பில் கலகலப்பான பட்டிமன்றம் பார்வையாளர்கள் வயிறு குலுங்க சிரிக்கும் வண்ணம் நடைபெற்றது.
நள்ளிரவைத் தாண்டியும் ஆயிரக்கணக்கானோர் அரங்கு நிறைந்து ரசிப்பதை பாராட்டிய லியோனி மகிழ்வில் துணை நிற்பவர்கள் நண்பர்களே என்ற தீர்ப்பினை பெரும் ஆரவாரத்துக்கு இடையே வழங்கினார்.
நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு ராயல் செஃப் வழங்கிய பரிசுகள் 25 அதிர்ஷ்டசாலிகளுக்கு வழங்கப்பட்டது.
நிகழ்விற்கான அணுசரனையினை ஆலியா முஹம்மது டிரேடிங், பிரிமியர் கிச்சன் அப்ளையன்ஸ், சக்தி சுத்தமான நெய், ரமீ குரூப் ஆஃப் ஹோட்டல், பிளாக் துளிப் பிளவர்ஸ், வெஸ்டர்ன் ஆட்டோ, சிவ ஸ்டார் பவன், பெருமாள் பூக்கடை, நரசுஸ் காஃபி, மூன் டிவி மற்றும் தினமலர் ஆகியவை வழங்கின.
நிகழ்வினை பெட்டினா ஜேம்ஸ் பால் மற்றும் ஏ முஹம்மது தாஹா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.
Tags: , , , , , ,

Leave a Reply