தீபாவளி

சீக்கியர்கள் பொற்கோயில் கட்டுமானப்பணியையும்,
சமணர்கள் மகாவீரரின் துறவரத்தையும்,
இந்துக்கள் இராமகிருஷ்ண அவதாரங்களை
நினைவில் நிறுத்தினாலும்
சாதி சமயம் மதம்
மொழி நாடு இனமென்று
வேற்றுமையிலும் மனம்
ஒற்றுமையை நாட
உற்சாகம் உச்சமடைந்தது!

அகல்தீப எண்ணெய் விளக்குகள்
அகத்தீய எண்ணத்தை விலக்க
பரமாத்மா தீபத்தில்
ஜீவாத்மா ஒளியாக
பல கார சண்டைகளும்
பலகார சண்டைகளாக இனிக்க
புத்தாடைகள் பூண்டபொழுது
புன்னகையும் பூத்தது!

வானவேடிக்கையாய் வாஞ்சையை   பரப்பி
வஞ்சஎண்ணங்களை வெடிக்கழிவுடன் விடுத்து
திகட்டதிகட்ட தின்றஉணவுகளும்
தீபாவளிஇலேகியத்தால் திருப்தியடைய
விடுமுறையும்,வெகுமதியும்
அனைவருக்கும் ஆனந்தம்தர
பாசத்துடன் பட்டாசுகள் பங்குகளாக பிரிக்கப்படுகையில்
சீர்கேடுதரும் சீனப்பட்டாசுகளை சிதைத்து
சிவகாசி தோழனுக்கு தோள்கொடுப்போம்!

– அபிநயா,துபாய்.

Tags: 

Leave a Reply