தில்லியில் காற்று மாசு.. தில்லிவாழ் மக்களுக்கும் பொறுப்பு உண்டு

அறிவியல் கதிர்

தில்லியில் காற்று மாசு.. தில்லிவாழ் மக்களுக்கும் பொறுப்பு உண்டு
பேராசிரியர் கே. ராஜு

தில்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்திலிருந்து இலங்கை கிரிக்கெட் வீரர்கள் காற்று மாசிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முகமூடிகளை அணிந்துகொண்டு பாதி விளையாட்டிலேயே வெளியேறியது தில்லியின் வரலாற்றில் மோசமானதொரு அத்தியாயம்தான். பருவமழை தவறுமே தவிர, பனிமூட்டம் தில்லி மாநகரை மூடிக் கொள்வது மட்டும் தவறவே தவறாது. ஒவ்வொரு வருடமும் தவறாமல் தொடரும் கொடுமையாக அது மாறிவிட்டிருக்கிறது. 2011-ம் ஆண்டில் லஞ்ச ஊழலுக்கெதிரான பேரணிகள், 2012-ம் ஆண்டில் `நிர்பயா கொடுமையான பலாத்காரத்திற்கு ஆளானதை எதிர்த்த இயக்கங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டார்கள். ஆனால் காற்று மாசுபடுதலுக்கு எதிராக நடைபெறும் எதிர்வினை அவரவர் வீட்டோடு நின்று போய்விடுகிறது. மக்கள் ராம்லீலா மைதானத்திற்கோ ஜந்தர் மந்தருக்கோ வராமல் வாட்ஸ்அப் பகிர்வுகளோடு நிறுத்திக் கொள்கிறார்கள். தில்லி மராத்தான், இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் விளையாட்டுக்கெல்லாம் தெருவுக்கு வந்தவர்கள் எல்லாம் கூட காற்று மாசுபடுதலுக்கெதிராக இயக்கமாகத் திரளவில்லை. உலகப் பண்பாட்டுத் திருவிழாவுக்குக் கூடி யமுனை நதிக்கரையை பாழ்படுத்தியது, நீதிமன்றம் தடை செய்தபிறகும் தீபாவளியை ஒட்டி பட்டாசுகளை வெடித்தது போன்ற செயல்களின் மூலம் தில்லிவாசிகள் தங்களுக்கு பொழுதுபோக்குதான் முக்கியமே தவிர சுற்றுச்சூழல் ஒரு பொருட்டல்ல என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்கள்.

தில்லி காற்று மாசு பற்றி செய்தியளித்த ஊடகங்களில் கணிசமானவை பஞ்சாபிலும் அரியானாவிலும் வைக்கோல் போர்கள் எரிக்கப்பட்டதை இந்த சுற்றுச்சூழல் நெருக்கடி ஏற்பட்டதற்கு முக்கியக் காரணமாக முன்வைத்தன. ஆனால் காற்றை மாசுபடுத்தியதில் தில்லிவாசிகளின் பங்கு பற்றி ஊடகங்கள் பெரிதும் அலட்டிக்கொள்ளவில்லை. 2016-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட கான்பூர் ஐஐடி-யின் 334 பக்க அறிக்கை வைக்கோல் எரிப்பைக் குறிப்பிட்டிருந்த போதிலும் மாநகராட்சியால் திடக்கழிவுகள் எரிக்கப்பட்டது, வாகனங்கள் வெளிவிடும் புகை இரண்டையும் காற்று மாசுக்கு இதர இரு காரணங்களாகக் குறிப்பிட்டிருந்தது. திடக் கழிவுகள் எரிப்பதை நிறுத்திவிட்டு கழிவு மேலாண்மைத் திறனை செழுமைப்படுத்தினால் தில்லி காற்று மண்டலத்தின் தரத்தை 100 சதவிகிதம் மேம்படுத்த முடியும்.. வாகனங்கள் விடும் புகையைக் கட்டுப்படுத்தினால் தரத்தை 50 சதவிகிதம் மேம்படுத்த முடியும்.. வைக்கோல் எரிப்பை நிறுத்தினால் 90 சதவிகிதம் மேம்படுத்த முடியும் எனவும் அறிக்கை தெளிவாகக் குறிப்பிட்டது.

தில்லியில் 18.6 மில்லியன் மக்கள் வசிக்கிறார்கள். சுமார் 10 மில்லியன் கார்கள் தில்லி சாலைகளில் ஓடுகின்றன. தில்லி மக்கள் தொகையில் 15-லிருந்து 20 சதத்தினர் மட்டுமே கார் வைத்திருப்பவர்கள். அடுத்த ஆண்டு இறுதிக்குள் 10000 பேருந்துகளை தில்லி சாலைகளில் பயன்படுத்திக் கொள்ள உச்சநீதிமன்றம் அண்மையில் அனுமதி கொடுத்திருக்கிறது. ஆனால் இதன் காரணமாக தனியார் வாகனங்களின் எண்ணிக்கை ஒன்றும் குறையப் போவதில்லை. மேலும் ஒவ்வொரு நாளும் தில்லியில் சுமார் 250 டன்கள் திடக்கழிவுகள் எரிக்கப்படுகின்றன. தில்லிவாழ் மக்களும் மாநகராட்சியினரும் குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை எனப் பிரிப்பதைத் தவிர்த்துவிடுவது வழக்கமாக இருக்கிறது. இக்குப்பைகளைப் பிரித்துவைக்க வீடுகளில் இரு குப்பைத் தொட்டிகள் வைத்திருக்க வேண்டும் என்ற மிக எளிய விதியைப் பின்படுத்துமாறு யாரும் மக்களை வற்புறுத்துவதில்லை. மக்களும் இதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. மாறாக, தாங்களே வரவழைத்துக் கொண்ட காற்று மாசிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அதிக செலவு பிடிக்கும் வேறு வழிகளையே நாடுகிறார்கள். என்ன விலையானாலும் சரி, காற்றைச் சுத்தப்படுத்தும் கருவிகளையும் ஸ்டெராய்ட் மருந்தை உறிஞ்சும் இன்ஹேலர்களையும் வாங்கி வீடுகளில் வைத்துக்கொள்கிறார்கள். இவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனத்தினர் வலிய வரும் வாய்ப்பைத் தவற விடுவார்களா? உற்பத்தியை அதிகரித்து அமோகமாக விற்று லாபம் சம்பாதித்து வருகிறார்கள். மேகங்களில் மருந்தைத் தெளித்து செயற்கை மழையை வரவழைப்பது பற்றி தில்லி அரசு யோசித்து வருகிறதே தவிர, குப்பைகளைப் பிரித்துவைக்குமாறு கூறி மக்களை “சிரமத்துக்குள்ளாக்க” விரும்புவதில்லை.

சுத்தமான காற்றைப் பெறும் போராட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பாகவே உச்சநீதிமன்றம் எரிபொருள் நுகர்வையும் புகை வெளியேற்றத்தையும் கட்டுப்படுத்துமாறு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் முரண்பாடுகளின் வடிவமாக விளங்கும் இந்தியாவில் உணவுப் பாதுகாப்பையும் நிலத்தடி நீர் பாதுகாப்பையும் தரவேண்டியது விவசாயிகளின் பொறுப்பு என கொள்கை முடிவுகள் எடுக்கப்படும்.  ஆனால் தில்லிவாழ் மக்கள் எவ்விதப் பொறுப்பிலிருந்தும் விடுவிக்கப்படுவார்கள். தில்லியின் சுற்றுச்சூழலை மறுபடி மறுபடி மீட்டெடுப்பது நீதிமன்றத்தின் தலையீடாக இருக்குமே தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பொறுப்பாக மாறாது.

கார்கள் இல்லாத பகுதிகள், தனியார் வாகனங்கள் விற்பனை மீது கூடுதல் வரிகள், சட்டவிரோதமான கார் பார்க்கிங் மீது நடவடிக்கைகள், கார் வாங்குவதற்கு கணிசமான முன்நிபந்தனைகள் போன்ற கடுமையான நடவடிக்கைகள் மூலமே தில்லியின் காற்று மண்டலத்தைத் தூய்மையாக்க முடியும். பனிமூட்டம் என்பது நிர்வாகத் திறமையின்மையின் ஓர் அடையாளம்தான். உண்மையில் பொறுப்பற்ற நுகர்வுக் கலாச்சாரம், மோசமான மாநகர நிர்வாகம் இரண்டும்தான் தில்லியைப் பீடித்திருக்கும் நோய்கள்.
(உதவிய கட்டுரை : 2017 டிசம்பர் 28 தேதியிட்ட ஆங்கில இந்து நாளிதழில் அமிதான்க்ஷு ஆச்சார்யா, சுந்தரராஜன் கிருஷ்ணன் எழுதிய கட்டுரை)

Tags: ,

Leave a Reply