திருமண வாழ்வை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு ….

திருமண வாழ்வை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு

திருமண வாழ்வை எதிர்நோக்கியிருக்கும் ஒருவர் விடை தேட வேண்டிய மூன்றாவது கேள்வி யார்? என்பது. அதற்கான பதிலின் இறுதிப்பகுதியாக இந்தப்பத்தி அமைகிறது என்று நினைக்கிறேன். இந்தப் பத்தியில் கோட்பாட்டு உண்மைகளைத் தாண்டி அனுபவத்தில் கண்ட சில விடயங்களைப் பரிமாறிக் கொள்ள ஆசைப்படுகிறேன். அது சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் பயனளிக்கும் என்று நம்புகிறேன்.

சுமார் முன்னூறுக்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகளிடம், குறிப்பாகச் சொன்னால் பதினெட்டு வயதிற்கும் இருபத்தி ஐந்து வயதிற்கும் இடைப்பட்டவர்களிடம் நான் ஒரு கருத்துக் கணிப்பை செய்து பார்த்திருக்கிறேன். அதில் அவர்களிடம் இவ்வாறு ஒரு கேள்வியைக் கேட்டுப் பார்த்தேன்.“உங்கள் எதிர்காலத் துணையிடம் நீங்கள் எதிர்பார்க்கும் பண்புகள் எவை?”

இதற்கான அவர்களது பதில்கள் என்னில் சந்தோசம் கலந்த ஓர் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அந்த ஆச்சரியத்திற்கு ஒரு குறிப்பான காரணம் இருந்தது. அதுதான் அந்த இளைஞர்களும் யுவதிகளும் பெரியளவு மார்க்க ஈடுபாடுகளோ தஃவா ஈடுபாடுகளோ இல்லாத,  எம் சமூகத்தின் சராசரி இளைஞர்களும் யுவதிகளுமாகவே இருந்தனர். அந்த வகையில் அவர்களது எதிர்பார்ப்புகள் அதிகமாக உல்லாசத் தேடல்களாக இருக்கும் என்பதுதான் பெரிதும் எனது எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் ஆச்சரியப்படத்தக்கவகையில் அதற்கு முற்றிலும் மாற்றமான பதில்கள் வந்திருந்தன. அவை இஸ்லாமிய விழுமியங்களுக்கு மிகவும் நெருக்கமானவையாக இருந்தன.

ஆண்கள் தரப்பில் இருபத்தி மூன்று வகையான பதில்கள் அளிக்கப்பட்டிருந்தன. பெண்கள் தரப்பில் இருபது வகையான பதில்கள் அளிக்கப்பட்டிருந்தன. அவையனைத்தையும் இந்த இடத்தில் பதிவு செய்வது எனது நோக்கமல்ல. மாற்றமாக அவற்றின் அதிகூடிய விகிதாசாரத்தைப் பெற்ற பதில்களையும் அவை குறித்த சில அவதானங்களையும் முன்வைப்பதே எனது நோக்கம்.

முதலில் ஆண்கள் தரப்பு பதில்களில் கூடுதல் விகிதாசாரத்தைப் பெற்ற ஐந்து வகையான பதில்களைத் தருகின்றேன்.

  1. நல்ல ஈமானும் மார்க்கப் பண்பும் உள்ளவள் – 89 வீதம்
  2. விட்டுக்கொடுப்பு,  பொறுமை,  புரிந்துணர்வுடன் அனுசரித்து நடப்பவள் – 79 வீதம்
  3. நல்ல ஒழுக்கம் உள்ளவளாக இருத்தல் – 64 வீதம்
  4. அன்பாய் நடந்து கொள்பவள் – 57 வீதம்
  5. எனது குடும்பத்தினர்,  பெற்றோருடன் நன்கு பழகி கௌரவமாக நடாத்துபவள் – 50 வீதம்

பெண்கள் தரப்புப் பதில்களில் முதல்தர ஐந்து பதில்களை அவதானியுங்கள்

  1. நல்ல ஈமானும் மார்க்கப் பண்பும் உள்ளவர் – 84 வீதம்
  2. என்னுடன் அன்பாக நடப்பவர் – 72 வீதம்
  3. விட்டுக்கொடுப்பு,  பொறுமை,  புரிந்துணர்வுடன் நடப்பவர் – 63 வீதம்
  4. எனது பெற்றோர்,  குடும்பத்தினர்க்கு உதவி செய்து,  கௌரவப்படுத்துபவர் – 59 வீதம்
  5. பொது விடயங்களுக்கு உதவி செய்யக் கூடியவர் – 50 வீதம்

இரு தரப்பினருடைய பதில்களையும் பொதுப்படையாகப் பார்க்கின்ற பொழுது,  மார்க்கம்,  புரிந்துணர்வு,  அன்பு,  குடும்ப உறவுகளை மதித்தல் போன்ற விடயங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருப்பதைக் காணலாம். ஆண்கள் தரப்பில் மேலதிகமாக ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதையும் பெண்கள் தரப்பில் மேலதிகமாக சமூக ஈடுபாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதையும் காணலாம்.

இந்தப் பதில்களைப் பார்க்கின்ற பொழுது,  அன்பு,  புரிந்துணர்வு போன்ற விடயங்கள் பொதுவாக எல்லோரும் எதிர்பார்க்கக் கூடியவைதான். ஆனால் மார்க்கம்,  குடும்பம் என்ற இரண்டு அம்சங்களும் கொஞ்சம் கவனத்தை ஈர்க்கக் கூடியவையாக இருந்தன. இன்றைய இளைஞர் சமூகத்திடம் இவற்றிற்கு முக்கியத்துவம் இருக்கிறது என்பது உண்மையில் மிகுந்த நம்பிக்கையைத் தரக்கூடிய ஒரு விடயம். எவ்வளவுதான் சமூகத்தில் சீர்கேடுகள்,  ஒழுக்க வீழ்ச்சி என்று அடையாளப்படுத்தப்பட்டாலும் அந்த ஒழுக்க வீழ்ச்சியை தனது வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்வதற்கு யாரும் தயாரில்லை,  என்பதே உண்மை. தனக்குரிய துணை என்று தேடும் பொழுது மார்க்கமும் ஒழுக்கமும் முக்கியமானது என்றுதான் பார்க்கிறார்கள். உண்மைதான் இதுதான் மனித இயல்பு. அல்லாஹ் இவ்வாறுதான் எங்களைப் படைத்திருக்கிறான். அந்தப் படைப்பியல்பைத்தான் துணை தேடும் பொழுதும் கடைபிடிக்குமாறு நபியவர்களும் வலியுறுத்தியுள்ளார்கள்.

அடுத்து,  குடும்பம் என்ற காரணி இது மிகவும் வலிமை மிகுந்தது. உண்மையில் குடும்பத்தினரை மதித்தல்,  உதவுதல் என்பது இரு தரப்பினரிடமும் மிகுந்த தாக்கத்தை செலுத்தக்கூடியது. குடும்பத்தை மதிக்கவில்லை என்பது பல சமயங்களில் வெளியில் சொல்லாத வலிகளை சுமந்து வாழும் நிலைமைத்தான் இரு தரப்பினரிடமும் ஏற்படுத்தி விடுகிறது. குடும்ப உறவை இணைந்து நடத்தல் என்பதும் மனிதப் படைப்பியல்பு சார்ந்த ஒன்றுதான். அதனால்தான் இஸ்லாம் அதனை மிகவுமே வலியுறுத்திப் பேசியிருக்கிறது. அந்த இயல்பின் வெளிப்பாட்டைத்தான் இளைஞர்கள் தமது பதில்களாய்த் தந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

பெண்கள் தரப்புப் பதில்களில் குறிப்பாக துணையின் சமூக ஈடுபாட்டைப் பேசியிருப்பது ஒரு செய்தியைச் சொல்கிறது. ஒரு பெண் தனது துணையை அதிகமாக வீட்டுடன் முடங்கிக் கிடப்பவனாகக் காண விரும்புவதில்லை. தான் உண்டு தனது வேலை உண்டு என்று வாழ வேண்டும் என விரும்புவதில்லை. ஒவ்வொரு பெண்ணும் தனது கணவனை ஒரு ஹீரோவாகவே காண விரும்புகிறாள். அவனது சமூக ஈடுபாட்டால் சந்தோசமடைகிறாள். என்னிடம் பல சகோதரர்கள் தமது மனைவியர் பற்றி முறைப்பட்டிருக்கிறார்கள். “பள்ளிவாயல் வேலைக்குப் போங்கள்,  பாடசாலையின் கூட்டத்திற்குப் போங்கள்,  அதற்குப் போங்கள்,  இதற்குப் போங்கள்” என்ற மனைவியின் நச்சரிப்பை அலுத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அது நச்சரிப்பு அல்ல. தனது கணவனை ஹீரோவாகக் காணும் எதிர்பார்ப்பு. இதுவும் ஒரு படைப்பியல்புதான். அதுதான் அவர்களது வார்த்தைகளில் வெளிவந்திருக்கிறது.

இந்தப் பதில்களில் திருமண வாழ்வை எதிர்நோக்கியிருக்கும் ஒவ்வொருவரக்கும் வலிமையான ஒரு செய்தியிருக்கிறது என்று நினைக்கிறேன். ஒவ்வொரு ஆணும் தனக்கு வரப்போகும் துணைவி முக்கியமாய்த் தன்னிடம் எதனை எதிர்பார்க்கிறாள் என்பதை இவை சொல்கின்றன. அதுபோல் ஒவ்வொரு பெண்ணும்,  தனக்கு வரப்போகும் துணைவன் தன்னிடம் எதனை முக்கியமாய் எதிர்பார்க்கிறான் என்பதை இந்தப் பதில்கள் சொல்கின்றன. எனவே நான் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற செய்தியை இரு தரப்புக்கும் சொல்கிறது.

இறுதியாக,  இங்கு மற்றொரு உண்மையைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது. இவர்களது பதில்களில் அழகு,  அறிவு,  பொருளாதாரம் போன்ற காரணிகள் ஐம்பது வீதத்திற்கும் குறைவான முக்கியத்துவத்தையே பெற்றிருந்தன. இன்றைய குடும்பங்களுக்குள்ளே குறிப்பாக இந்தக் காரணிகளுக்குப் பெரிய இடமிருக்கிறது. ஆனால் இளைஞர்களுடைய பார்வை இவற்றைத் தாண்டிச் சென்றிருப்பதைக் காண முடிகிறது. குறிப்பாக புறத்தோற்றம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுவதாகத்தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அழகு என்ற காரணிக்கு ஆண்கள் அளித்த முக்கியத்துவம் வெறும் 39 வீதம்தான்,   பெண்கள் அளித்த முக்கியத்துவம் வெறும் 28 வீதம் மாத்திரமே. பெண்களை விட ஆண்கள் புற அழகிற்கு அதிக இடம் தருவார்கள் என்பது உளவியல் சொல்லும் உண்மை. அந்த உண்மை இங்கு வெளிப்பட்டிருக்கிறது. ஆனால் அழகு என்ற காரணி,  துணைத் தெரிவில் பெரும் தாக்கம் செலுத்தக்கூடியது அல்ல என்பதுவே இங்கு புலப்படுகிறது. அழகு என்ற காரணி சார்பு நிலை கொண்டது என்பதுவும் இதற்குக் காரணமாக இருக்கலாம். அதாவது அழகு என்பது எது என்பதை வரையறை செய்வதில் ஆளுக்கு ஆள் வித்தியாசம் இருக்கிறது. ஒருவருக்கு அழகாய்த் தெரிவது மற்றவருக்கு அழகாய் இருக்க மாட்டாது.

பொருளாதாரத்திற்கு பெண்கள் தரப்பு கொடுத்த முக்கியத்துவம் 22 வீதம். ஆனால் ஆண்கள் தரப்பு பொருளாதாரம் குறித்து எந்தக் கருத்தும் சொல்லியிருக்கவில்லை. குடும்பத்தின் பொருளாதாரம் ஆணின் கடமை என்பதை உணர்ந்ததனாலோ என்னவோ பெண்ணின் பொருளாதார நிலை குறித்து ஆண் தரப்பு எதுவும் பேசாதிருந்திருக்கலாம். ஆனால் பெண்களும் ஆணின் குணநலன்களுக்கு வழங்கும் முக்கியத்துவத்தை பொருளாதாரத்திற்கு வழங்கவில்லை என்பதுவே உண்மை. இங்கு பொருளாதாரம் அவசியமற்றது என்று சொல்லவில்லை. மாற்றமாக துணைத் தெரிவின்போது அது பெறும் முக்கியத்துவம் என்ன என்பது மட்டுமே இங்கு அடையாளப்படுத்தப்பட்டது.

அல்லாஹ்வே போதுமானவன்.

Tags: 

Leave a Reply