திருச்சி அருகே சோழர் காலக் கல்வெட்டுகள் கண்டெடுப்பு

திருச்சி அருகே சோழர் காலக் கல்வெட்டுகள் கண்டெடுப்பு

 

stoneageபேட்டைவாய்த்தலை அருகே கண்டெடுக்கப்பட்ட சோழர் கால கல்வெட்டு.

திருச்சி மாவட்டம், பேட்டைவாய்த்தலை அருகே சோழர் கால கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருச்சி – கரூர் சாலையில் உள்ள பேட்டைவாய்த்தலை அருகே, உய்யகொண்டான் கால்வாய்க்கரையில் இருந்த சோழர் காலக் கல்வெட்டுகளை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகக் கடல்சார் தொல்லியல் துறைப் பேராசிரியர் சு. ராஜவேல் , கல்வெட்டுப் பட்டயக் கல்வி மாணவர் செந்தில்வேலன் கண்டறிந்தனர்.
இதுகுறித்து ராஜவேல் தெரிவித்திருப்பது:
இக்கல்வெட்டுகளில் ஒன்று முழுமையாகவும் மற்றொன்று உடைந்தும் காணப்படுகிறது.
முழுமையான நிலையில் உள்ள முதல் கல்வெட்டு தஞ்சையைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி புரிந்த முதலாம் ஆதித்த சோழனின் கல்வெட்டு. இம்மன்னன் தனது தந்தை பரகேசரி விஜயாலய சோழனுக்குப் பின்னர் கி.பி. 870 முதல் கி.பி. 907 வரை ஆட்சி செய்தான். தற்போது கிடைத்துள்ள புதிய கல்வெட்டு ஆதித்த சோழனின் 35-ஆவது ஆட்சியாண்டு (கி.பி. 905) கல்வெட்டாகும்.
சூரலூர் நாட்டின் நிர்வாக அமைப்பான நாட்டார் அனைவரும் ஒன்று கூடி இவ்வூரில் நீண்ட நாட்கள் பயிர் செய்யாது பாழாகக் கிடந்த நிலம் ஒன்றை உறையூரைச் சார்ந்த வினையமன் சோமனாதித்தன் என்பவருக்கு விற்கின்றனர். இந்நிலத்தை நாட்டாரிடமிருந்து விலைக்குப் பெற்ற வினையமன் அந்நிலத்தின் வருவாயிலிருந்து கிடைக்கிற வருமானத்தை புனர்பூசத்து நாள் நடக்கும் திருவேட்டைத் திருவிழாவின்போது இரவு உணவைக் கோயிலின் சார்பாக அளிக்க ஏற்பாடுகள் செய்கிறார். நிலத்தின் எல்லைகள் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது.
இவ்வூரின் வழியாகச் செல்லும் உய்யவந்தான் கால்வாயிலிருந்து ஓடை ஒன்று பிரிந்துள்ளது. இவ்வோடை பொன்னோடை என சோழர் காலத்தில் வழங்கப்பட்ட செய்தியை கல்வெட்டு குறிப்பிடுகிறது. இவ்வோடைக்கு அருகில்தான் தற்போது சுவடிழந்த கோயிலின் இடிபாடுகள் மேடாக உள்ளன.
இக்கோயில் பொன்னோடைப் பரமேஸ்வரர் என சோழர்கள் காலத்தில் வழங்கப்பட்டதை கல்வெட்டு குறிப்பிடுகிறது. ஓடையில் ஏற்பட்ட வெள்ளத்தால் இக்கோயில் அழிந்திருக்க வேண்டும். மேலும் இவ்வூரில் கலிப்படக்கி ஈஸ்வரர் ஆலயம் என்ற கோயிலும் இருந்துள்ளது. கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிலம் உள்ள பகுதியில் கலிப்படக்கி ஈஸ்வர ஆலயம் இருந்துள்ளது. தற்போது கலிப்படக்கி கோயிலின் சுவடுகள் இவ்வூரில் காணப்படவில்லை.
பொன்னோடை பரமேஸ்வரருக்கு விலை கொடுத்து வாங்கிய நிலம் அருகில் சமணக் கோயிலுக்கு அளிக்கப்பட்ட நிலம் ஒன்றும் இருந்துள்ளது. இவ்வூரில் சமணர்களுக்கான கோயிலொன்றும் இருந்துள்ளதை இதன் மூலம் அறிய முடிகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்னர், இவ்வூரிலிருந்த சமண தீர்த்தங்கரர் சிற்பத்தை அருங்காட்சியகத்துக்கு எடுத்து காட்சிப்படுத்தியுள்ளதாக ஊர் மக்கள் கூறினர். இப்பகுதியில் சோழர் கால உடைந்த கல்வெட்டு ஒன்றும் முற்றுப்பெறாத நிலையில் கள ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
இவ்வூரில் புனர்பூசத்து நாளில் இரவுப் பொழுதில் திருவேட்டைத் திருநாள் நடந்துள்ளது. இக்கோயிலின் அருகிலிருந்த பொன்னோடையில் ஏடுகளை விடும் விழாவாக இது இருந்திருக்க வேண்டும். சமணத்துக்கும் சைவத்துக்கும் இடையில் ஏற்பட்ட வாதங்கள் குறித்து இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.
ஓடுகின்ற நீரில் பனை ஏடுகளை விட்டு விழா நடத்துவர். இதை இலக்கியங்களில் புனல் வாதம் என்பர். ஆற்றுப் பகுதியில் இருந்த தலங்களில் இதுபோன்ற திருவேட்டைத் திருநாள் அக்காலத்தில் நடைபெற்றதை பல கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.
இக்கோயிலுக்கு இத்திருவிழா நடப்பதற்கு நிலக்கொடை அளித்த வினையமன் இன்றைய திருச்சிராப்பள்ளிப் பகுதியிலுள்ள உறையூரைச் சார்ந்தவராகும். இவர் செட்டி எனக் குறிக்கப்படுவதால் வணிகராக இருந்திருத்தல் வேண்டும். சோழர் காலத்தில் பேட்டைவாய்த்தலை ஒரு வணிக நகரமாக விளங்கியுள்ளது. இங்குள்ள மத்தியார்ஜுனர் கோயில் கல்வெட்டுகளில் இவ்வூர் இராஜேந்திர சோழன் பேட்டை என வழங்கப்பட்டுள்ளது.

http://www.dinamani.com/tamilnadu/2017/jan/08/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%87-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-2628957.html

Tags: , ,

Leave a Reply