‘திருக்குர்ஆன்’ உலகின் அதிசயம்

‘திருக்குர்ஆன்’ உலகின் அதிசயம்

பா. ஹாஜிமுகம்மது, நாமக்கல்

திருக்குர்ஆன் உலகத்தின் அதிசயம். ஆம். குர்ஆன் உலகின் ஓர் அதிசயமும், அற்புதமும் தான். காரணம் அதனை உலக மக்களுக்காக இறக்கி அருளிய அல்லாஹுத்தா ஆலாவே, அத்திருமறை சூரத்துல் கஹ்பு (குகை) என்ற அத்தியாயம் 18 (18) வசன எண் 109 இல் இப்படி அருளியுள்ளான்.

‘குல்லவ் கானல் பஃஹ்ரு மிதாதல்லி கலிமாத்தி ரப்பிலநபிதல் பஃஹ்ருகப்ல அன்தன்பத கலிமாத்து ரப்பி வலவ் ஜிஃநாபிமிஸ்லஹி மததா’, அதாவது நபியே ! நீர் கூறும் “என் இறைவனுடைய வார்த்தைகளை அவற்றில் எதிர் ஒலிக்கும் கருத்துக்களை கடல் நீரையே எழுதும் மையமாகக் கொண்டு எழுதினாலும் அவைகளை எழுதுவதற்குள் அந்தக் கடல் நீரான மை தீர்ந்துவிடும். அதைப்போல தொடர்ந்து எழுதுவதற்கு இன்னொரு கடலையே உதவிக்குக் கொண்டு வந்தாலும் சரியே”

இது அல்லாஹ், உலகத்திற்கு விடுக்கும் சவாலாக இருக்கின்றது. இம்மாதிரி சவால் விடுத்து கூறுகின்ற வேறு எந்த வேதநூலும் இல்லை எனலாம். காரணம் முழு சமுதாய மக்கள் தங்கள் வாழ்வில் கடைப்பிடித்து வாழத் தேவையான அனைத்து நன்நெறி விளக்கங்களைக் கொண்டுள்ளது என்பதை குர்ஆன் ‘தர்ஜுமா’ என்று சொல்லப்படுகின்ற தமிழில் உள்ள விளக்கத்தினைப் படித்தால் விளங்கிடலாம்.

குர்ஆன் என்றாலே ஒதப்பட்டது ஓதக்கூடியது அவ்வாறு அதனை ஓதி நிறைவு செய்த பின் மீண்டும் ஆரம்பித்து ஓதுவது என்பதாக இருக்கின்றது. ‘ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்’ என்ற முதுமொழியும் வேதநூல்கள் மற்றும் நன்நெறி கொண்டவைகளை நாள்தோறும் ஓதி, படித்துப் பயன் அடையுங்கள் என்று மக்களைப் பார்த்து வலியுறுத்துகின்றது.

வேதத்திற்காக தூதர்களா? தூதர்களுக்காக வேதமா? என்றால் அல்லாஹ் தனது ஏகத்துவ ஓரிறைக் கொள்கையினை அக்கால மக்களிடையே எடுத்துச் சொல்ல மனிதர்களோடு மனிதர்களாக வாழ்ந்த மாமனிதர்களைத் தன்னுடைய நபியாக, ரசூலாகத் தேர்வு செய்தான். அதன்பின் அவர்களுக்கு உறுதுணையாக இருந்திட வேதநூல்களையும், ஜுஸ்வுகள் என்ற ஏடுகளையும் கொடுத்து அருளினான் என்பது வரலாற்றுப் பதிவாக இருக்கின்றது.

குர்ஆன் முகமது நபிகளுக்கு அருளப்பட்ட வரலாறு

40 வயதான ‘முகமது’ என்ற (புகழப்பெற்றவர்) மாமனிதரை தனது நபியாக அல்லாஹ் தேர்வு செய்து குர்ஆனையும், நபித்துவத்தையும் ஒருசேர கொடுத்துச் சிறப்பித்தான். ஹிரா குகையில் இறைவனைத் தியானித்து இருந்த சமயம் வானவர் கோன் ஜிப்ரயீல் (அலை) அவர்களை அனுப்பி முழு குர்ஆனைக் கற்றுக் கொடுத்தான்.

‘இக்ஃரா பிஸ்மிரப் பிக்கல்லதி அலக்’ அதாவது யாவற்றையும் படைத்த உம்முடைய இறைவனின் பெயரைக் கொண்டு ஓதுவீராக என்று ஜிப்ரயீல் (அலை) பணித்தபொழுது நபிகள் மிகவும் பணிவாக நான் ஓதியவன் அல்லவே? என்று கூறினார்களாம். அதன்பின் அவர்கள் நபிகளை இறுகக்கட்டி அனைத்து குர்ஆன் அத் 96 வது சூராவை முதல் ஐந்து வசனங்களை ஓதிக் காட்டியபின் நபிகளும் இறை அருளால் அவ்வாறே ஓதினார்கள் என்பதும் வரலாற்றுப் பதிவாக இருக்கின்றது.

அந்த முதல் ஐந்து வசனங்களாவன

  1. யாவற்றையும் படைத்த உமதிறைவன் நாமம் கொண்டு ஓதுவீராக
  2. அலக் என்ற நிலையில் இருந்து மனிதனைப் படைத்தான்.
  3. ஓதுவீராக ! உம் இறைவன் மாபெரும் கொடையாளி.
  4. அவனே (அல்லாஹ்) எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.
  5. மேலும் அவன் மனிதனுக்கு அறியாதவற்றைக் கற்றுக் கொடுத்தான்.

நபிகள் நாயகம் ஓர் ‘உம்மீ’ அதாவது எழுதப் படிக்கத் தெரியாதவர் என்று அல்லாஹ் குர்ஆன் அத்.7. வசன எண் 157 –இல் கூறியுள்ளான். இறைச்செய்தி என்ற வஹி மூலம், சுமார் 456 முறை அவ்வாறு சுமார் 23 ஆண்டுகள், மக்காவில் 13 ஆண்டுகளும் மதினாவில் 10 ஆண்டுகளும் நபிகள் தங்கி இருந்த சமயம் குர்ஆன் அருளப்பட்டது.

குர்ஆனின் பொருள் அடக்கம்

மொத்த வசனங்கள் 6666, அத்தியாயங்கள் 114, ஜுஸ்வுகள் 30. மேலும் இறைத்துதி வசனங்கள் 166, உவமைகள், நன்மைகள் கொண்டது, தீமைகளைத் தடுப்பது, வரலாறு சம்பவங்கள், எச்சரிக்கை வசனங்கள், வாக்குறுதிகளை அளிக்கும் வசனங்கள் என தலா 1000 உள்ளன.

குர்ஆன் அருளப்பட்டதற்கான அத்தாட்சிகள்

அல்லாஹ்வே குர்ஆன் அத் 21. வசன எண் 7-இல் நபியே ! உமக்கு முன்னரும் நாம் மனிதர்களையே நம்முடைய நபியாக அனுப்பினோம். அவர்களுக்கே வஹி என்ற இறைச் செய்திகளையும் அறிவித்தோம் என்றும் இது குர்ஆன் அல்லாஹ்வின் திருவேதம். இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. மேலும் இது பயபக்தியுடையோருக்கு நேர்வழி காட்டியாகும் என்று அருளியுள்ளான். இதுவே குர்ஆன் உலகின் அதிசயம் என்பதற்கு சான்றாக உள்ளது.

மேலும் நாம் உம்மீது குர்ஆனை சிறுகச் சிறுக தேவைக்கு ஏற்ப இறக்கி அருளினோம் என்று அத்.76. வசன எண் 23-இல் அருளியுள்ளான்.

குர்ஆன் கூறும் சில அற்புதச் செய்திகள்

‘அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்’ என்று ஆரம்பம் ஆகின்ற குர்ஆனின் முதல் அத்தியாயம் தொழுகையில் கட்டாயம் ஓதப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. இது உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம்’ என்ற வசனம் இறைவனுக்கும் அடியானுக்கும் நெருக்கத்தை ஏற்படுத்துகின்றது. இந்த அல்ஹம்து சூரா குர்ஆனுக்கு தாய் அதாவது ‘உம்முல்’ குர்ஆன் ஆக உள்ளது. அதேபோல யாசின் சூரா 22:23 அத்தியாயங்கள் குர்ஆனுக்கு இருதயமாக உள்ளது. அத்துணை அரும்பெரும் செய்திகள் அவைகளில் அடங்கி உள்ளது.

அத் 11. வசன எண் 6-இல் நாம் உணவளிக்கப் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் இந்த மண்ணில் இல்லை என்று கூறியுள்ளான். அவ்வாறு பல கோடி உயிரினங்களுக்கு உணவு கொடுக்கின்ற அல்லாஹ்வின் பொறுப்பில் நாமும் ஒருவராக உள்ளோம் என்பதை எண்ணி அவனுக்கு அதிக அதிக இபாதத்து செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம் என்பது சிந்திக்கத்தக்கது.

கியாம நாள்வரை உலக அதிசயமாக புனித நூலுக்கு அறிஞர் பெருமக்களால் பல்வேறு கோணங்களில் விளக்கங்களும், விரிவுரைகளும் எழுதப்பட்டுக்கொண்டே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. முன்பே கூறியபடிக்கு மனித மக்கள் அனைவரும் சுகமாக, சுபிட்சமாக, அமைதியாகப் பிறருக்கு உதவி செய்பவர்களாக இன்னும் எத்துணை நல்ல செய்திகள் வேண்டுமோ அத்துணையும் முழுமையாக அருளப்பட்டது. இதுவும் குர்ஆனின் அதிசயமாகும். எனவே குர்ஆனுக்கு நாம் தருகின்ற கண்ணியம் அதனை தினம் ஓதி வருவதில்தான் உள்ளது.

 

( தினமணி – ஈகைப் பெருநாள் மலர் – 2015 )

Tags: , ,

Leave a Reply