திருக்குர்ஆன் உணர்த்தும் ஆன்மிகம் !

திருக்குர்ஆன் உணர்த்தும் ஆன்மிகம் !

-கவிஞர் மு. ஹிதாயத்துல்லாஹ், இளையான்குடி

 

இந்த உடல் நமக்குச் சொந்தமல்ல

இருக்கின்ற இவ்வுலகும் நிலையும் அல்ல

வந்த இட முகவரிக்கே திரும்பிச் செல்லும்

வரையோலைக் கடிதம் நாம், ஆமாம் உண்மை !

எந்தவோர் நம் செயலும் தவறா வண்ணம்

இறையவனின் லெளஹுல் என்னும் ஏட்டினிலே

விந்தையாய்ப் பதிகிறது எண்ணிக் கொள்வீர் – தீனின்

வெளிச்சத்தில் இறைமேன்மை கண்டு கொள்வீர் !

 

கண்ணிற்குத் தெரியாமல் ரூஹ் ஓர்நாள்

கைதாகப் போகிறது என்ன செய்வோம்?

மண்ணாண்டு மனையாண்டு என்ன யிங்கே

மதியாண்டு நிதியாண்டு வந்த நம்மை

விண்ணாண்டும் மண்ணாண்டும் இருக்கும் மேலோன்

விசாரணைக் கைதியாய் அழைத்துப் போவான் !

பொன்னாண்ட புகழாண்ட மன்னர்கூட –இறைப்

பேரரசின் முன்னாலே பணிந்தே நிற்பர் !

 

வாழ்கின்றநாளேனும் நன்மை செய்து

வல்ல இறைஉவப்பை நாம் பெறுவோமாக !

சூழ்கின்ற துயர்கண்டு அஞ்சிடாமல்

தொழுகையிலே துஆவிலே வெல்வோமாக !

நாள், வார, மாதமென்று நகரும் காலம்

நல்அமலை அதற்குள்ளே நிறையச் சேர்த்து

ஆலம் படைத்தாளுகின்ற பெரியோன் அல்லாஹ்

அருளன்பில் நாமெல்லாம் திளைப்போமாக !

Tags: ,

Leave a Reply