தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் 2015

தமிழ் எழுத்துருவியல் கருத்தரங்கம் 2015

அக்டோபர் 17, 18 – 2015

தமிழ் இணையப் பல்கலைக் கழகம் கலையரங்கம், சென்னை–25.

கருத்தரங்கம் பற்றி

ஒரு மொழியில் எழுதுவதற்கும், படிப்பதற்கும் உகந்த வகையிலும், அம்மொழியைஎழுதும்போதும், அச்சிடும்போதும், காட்சிப்படுத்தும்போதும் கவரும் வகையிலும் அம்மொழியின் எழுத்துருக்களை ஒழுங்கமைக்கின்ற ஒரு கலையாகவும் ஒரு தொழில்நுட்பமாகவும் விளங்குவது எழுத்துருவியல் ஆகும். எழுத்துருக்களை ஒழுங்கமைப்பது என்பது, எழுத்துருவின் வடிவங்கள், புள்ளிக் கணக்கில் அவற்றின் உருவளவு, வரியின் நீளம், வரிகளுக்கு இடையேயான இடவெளி (leading), எழுத்துகளுக்கு இடையேயான இடவெளி (tracking) ஆகியவற்றைத் தெரிவு செய்வதும், எழுத்திணைகளுக்கு இடையேயான இடவெளியைச் சரிசெய்வதும் (kerning).ஆகும். எழுத்துருவியல் என்னும் சொல்லானது எழுத்துகளின் பாணி (Style), ஒழுங்கமைப்பு, செயலாக்கத்தில் உருவாக்கப்படும் எழுத்துகள், எண்கள், சின்னங்கள் இவற்றின் தோற்றம் ஆகியவற்றையும்,உள்ளடக்கியதாகும்.

எழுத்துருக்களின் வடிவாக்கமானது, அச்சுக்கோத்தல் முறைமைகளின் வளர்ச்சியோடு இணைந்தே வளர்ச்சி பெற்றது. எழுத்துருவியல் குறிப்பிடத்தக்க வகையில் அதன் மூலத்திலிருந்தே படிப்படியாக வளர்ச்சிபெற்ற போதிலும், அது மரபோடு நெருக்கமாக ஊடுருவிச் செல்லுகின்ற, பெரிதும் மாற்றம் காணாத பழமையான கலையாகும்.படிப்பெளிமையே தலையாய நோக்கம் என்பதால்,, படிப்பதற்கு மிகவும் தெளிவாக இருப்பவை பெரும்பாலும் தக்கவைத்துக் கொள்ளப்படுகின்றன. அவை மாற்றத்துக்கு உள்ளாவதில்லை. இதுவே எழுத்துருவியல் அவ்வாறிருக்கக் காரணமாகும்.

மேலும், எழுத்துருவியலின் பரிணாம வளர்ச்சியானது, கையால் எழுதுதலுடனும் அதனோடு தொடர்புடைய கலை வடிவங்களுடனும் குறிப்பாக, எழுத்துருவியலுக்கு முன்பே பல நூற்றாண்டு காலம் செழித்தோங்கி வளர்ந்திருந்த முறைப்படுத்தப்பட்ட எழுத்துப் பாணிகளுடன் பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்துள்ளது. எனவே, எழுத்துருவியலின் பரிணாம வளர்ச்சியை இந்த உறவுநிலையின் அடிப்படையிலேயே விவாதிக்க வேண்டும்.படிப்பெளிமை என்கிற விஷயம் இன்றைய சூழலில், குறிப்பாக, சிறிய காட்சித்திரை கொண்ட கையடக்கச் சாதனங்களின் பயன்பாடு பெருகியுள்ள இன்றைய காலகட்டத்தில் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

ரோமன் எழுத்துருவியலானது, தொழில்நுட்ப வளர்ச்சியுடன் நெருக்கமான உறவுகொண்டு,பன்னெடுங்காலமாக வளர்ச்சிபெற்று வந்துள்ளது. முறைப்படுத்தப் பட்ட ஆய்வுகள் மிக அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்னமும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.என்றாலும் தமிழ் எழுத்துருவியலைப் பொறுத்தமட்டில், அத்தகைய முயற்சிகள் அனேகமாக முற்றிலும் இல்லை என்கிற வருந்தத்தக்க நிலையே உள்ளது. ஏதோ கொஞ்சம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றால், அதுவும் ஒரு சில சுதந்திரமான தனிநபர்களின் முயற்சிகளே ஆகும்.

தமிழ்ப் பயனர்களிடையே, எழுத்துருவியலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தவும்,அதுபற்றிய ஒரு விழிப்புணர்வை உருவாக்கவும் இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இந்தமாநாடு, வரும் ஆண்டுகளில் நடைபெறப்போகும் இதுபோன்ற பல மாநாடுகளுக்குமுன்னோடியாகத் திகழும் என்றும், தமிழ் எழுத்துருவியலின் முறைப்படியான வளர்ச்சிக்குஉதவும் என்றும் நம்புகிறோம்.

இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட இருக்கும் முதன்மையான தலைப்புகள்:

1)   ஓலைச் சுவடி முதல் கையகச் சாதனங்கள் வரைதமிழ் வரிவடிவத்தின் பரிணாமவளர்ச்சி.

2)   மேற்கத்திய எழுத்துருவியலிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்காலப்போக்கில் மேற்கத்திய எழுத்துருவியல் எவ்வாறு வளர்ச்சி பெற்றது? – சவால்களும்தீர்வுகளும்

3)   இந்திய எழுத்துருவியல் பரிசோதனைகள்இந்திய எழுத்துருவியலைத் தரப்படுத்தலில்எடுக்கப்பட்ட முன்முயற்சிகள்

4)   தமிழ் எழுத்துருவியலின் பண்புக்கூறுகள்

5)   ஆப்பிள், ஆண்ட்ராய்டு சாதனங்களில் தமிழ் எழுத்துருவியலின் அனுபவங்கள்

6)   அச்சு ஊடகத்தில் எழுத்துருவியல் பிரச்சினைகள்

7)   எண்மிய அச்சிலும், காட்சித்திரைச் சாதனங்களிலும் எழுத்துருவியல் பிரச்சினைகள்

8)   கலை, விளம்பர ஊடகங்களில் எழுத்துருவியல் பிரச்சினைகள்

கருத்தரங்கில் யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்?

கல்வியாளர்கள், வரைகலை, விஸ்காம் மாணவர்கள், அச்சகத்தார், நூல்கள், பத்திரிகைகள்,செய்தித்தாள்கள் வடிவமைப்போர், வெளியிடுவோர், எழுத்துரு உருவாக்குபவர்கள்,அச்சுக்கோப்பவர்கள், எழுத்துருவியலாளர்கள், வரைகலை வடிவமைப்பாளர்கள், கலைஇயக்குநர்கள், ஓவியர்கள், வேடிக்கைக் கதைப்புத்தக ஓவியர்கள், சுவர், பதாகை விளம்பரஓவியர்கள், மேலும், வெளியீடுகள், காட்சிப்படுத்தல், வினியோகித்தல் இவற்றுக்காகசொற்கள், எழுத்துகள், எண்கள், சின்னங்கள் ஆகியவற்றை ஒழுங்கமைக்கும் பணியில்ஈடுபட்டுள்ள எவரும் கலந்து கொள்ளலாம். எழுத்தர்கள், செய்திமடல் எழுத்தாளர்கள்உட்படச் சுயவெளியீட்டுப் பணியில் ஈடுபட்டுள்ள எவரும் இம்மாநாட்டினால்பயன்பெறலாம்.

கருத்தரங்கம் அமைப்பாளர்களைப் பற்றி:

பதினாறு ஆண்டுகளாக இயங்கிவரும், கணித்தமிழ்ச் சங்கம் தமிழ் மென்பொருள்தயாரிப்பாளர்களின் சங்கமாகும். தகவல் தொழில்நுட்பத் துறையில் தமிழின் வளர்ச்சிக்குவழிவகை செய்யும் பணியில் பல்லாண்டு காலமாக ஈடுபட்டு வருகிறது. தமிழ் எழுத்துருக்குறியாக்கத் தரப்பாடுகளை வளர்த்தெடுப்பதிலும், தமிழ் மென்பொருள்களின் வளர்ச்சியிலும்முன்னெடுப்பிலும் தமிழ்நாடு அரசு, உத்தமம் (உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்)ஆகியவற்றுடன் நெருங்கி இணைந்து பணியாற்றி வருகிறது.

கருத்தரங்கில் பங்கேற்று உரையாற்றுபவர்கள், பதிவுக் கட்டண விபரங்கள் 30–09–2015 அன்று வெளியிடப்படும்.

 

நன்றி.

 

அன்புடன்

 

சொ.ஆனந்தன்

தலைவர்

கணித்தமிழ்ச் சங்கம்.

+91-9444075051

மின்னஞ்சல்: valli_software@vsnl.com

 

Tags: , ,

Leave a Reply