தமிழ்ச்சங்கத்துக்கு அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் ரூ.10 லட்சம் நிதியுதவி அளிப்பதாக உறுதி

ராமநாதபுரம் தமிழ்ச்சங்கத்தின் கட்டட வளர்ச்சிக்காக ரூ.10லட்சம் நிதியுதவி அளிப்பதாக மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை இணை அமைச்சர் டாக்டர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் ஞாயிற்றுக்கிழமை உறுதியளித்தார்.

ராமநாதபுரம் ஆயிரவைசிய மகாஜன சபை திருமண மண்டபத்தில் நடந்த விழாவுக்கு மாவட்ட வர்த்தக சங்கத் தலைவர் பா.ஜெகதீசன் தலைமை வகித்தார். மிளகாய் வத்தல் வணிகர் சங்கத் தலைவர் ஆர்.ஸ்ரீதர், தமிழ்ச்சங்கத் தலைவர் மை.அப்துல்சலாம், செயலாளர் டாக்டர்.பொ.சந்திரசேகரன், துணைத்தலைவர் வைகிங். எம்.எஸ்.கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மற்றொரு துணைத் தலைவர் குழ.விவேகானந்தன் வரவேற்றுப் பேசினார்.

விழாவில் சங்க துணைத்தலைவர் அமரர் த.குழந்தைச் செட்டியார் திருவுருவப் படத்தினை அவரிடம் பணி செய்த ஆர்.சர்தார் சாகிப் திறந்து வைத்தார். அவரது நினைவுகளை சங்க உறுப்பினர் க.ராமநாதன் குறிப்பிட்டுப் பேசினார். கவிஞர்.நா. வேலுச்சாமிதுரை புகழஞ்சலி செலுத்தினார். சங்கத்தின் செயல்பாடுகளை பாராட்டி வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் ஆ.ரவிச்சந்திர ராமவன்னி, கனவு மெய்ப்பட வேண்டும் என்ற தலைப்பில் கவிஞர்.வைகைபாரதி ஆகியோர் பேசினார்.

விழாவில் அமரர் குழந்தை செட்டியார் நினைவு விருதினை மத்திய அமைச்சர் இ.எம்.சுதர்சன நாச்சியப்பன் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ,மாணவியருக்கு பரிசுகளையும் வழங்கி பேசினார். விழாவில் மு.சேதுராமன் (ஆசிரியர்), கண் மருத்துவர் பொ.சந்திரசேகரன் (மருத்துவம்), அ.வேணுகோபாலன் (வணிகம்), கவிஞர்.நா.வேலுச்சாமி துரை (இசை), த.கோதண்டராமன் (சமுகநலம்) ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இவை தவிர ராமநாதபுரம் ராமபக்த சபாவுக்கு ஆன்மிகப்பணி விருதும்,கீழக்கரை முகம்மது சதக் அறக்கட்டளைக்கு சமுதாயப்பணி விருதும் வழங்கப்பட்டன.

விழாவில் பேசிய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தமிழ்ச் சங்கத்தின் கட்டட வளர்ச்சி நிதிக்காக மாநிலங்களவை உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.10லட்சம் நன்கொடையாக அளிப்பதாக உறுதியளித்தார். தமிழ்ச்சங்க நிர்வாகிகளும் அதற்கு நன்றி தெரிவித்துக் கொண்டனர். நிறைவாக சங்க உறுப்பினர் கு.இளங்கோவன் நன்றி கூறினார்.

விழாவில் காங்கிரஸ் கட்சியின் மனித உரிமைகள் பிரிவுத் தலைவர் திருமலை, செய்தித் தொடர்பாளர் கண்ணன்பாபு, தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் டாக்டர்.மதுரம் அரவிந்தராஜ், கே.வி.எஸ்.பாண்டியன், கே.கே.நாராயணன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

Tags: , , ,

Leave a Reply