தமிழை விரும்பும் சீனப் பெண்

தமிழை விரும்பும் சீனப் பெண்

தமிழில் பேசுவதையே பல தமிழர்கள் தரக்குறைவாக நினைக்கும் போது சீன மாணவியான நிலானி, தன் தமிழ் அறிவை மேம்படுத்திக்கொள்வதற்காக இந்தியா வந்திருக்கிறார். சீன வானொலி தமிழ்ப் பிரிவில் அறிவிப்பாளராகப் பணிபுரியும் அவர் தற்போது வந்திருப்பது பேச்சுத் தமிழ் கற்க.

நான் சீனாவில் தமிழ் மொழியில் படித்துப் பட்டம் பெற்றேன். ஆனால் எனக்கு தமிழ்நாட்டில் புழங்கும் பேச்சுத் தமிழ் அவ்வளவாகத் தெரியவில்லை. கொச்சைத் தமிழில் பேசுவதைக் கேட்கும்போது ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சி யாகவும் இருக்கு என்று புன்னகைக்கிறார் நிலானி.

சீன வானொலி தமிழ்ப் பிரிவில் கடந்த பத்து ஆண்டுகளாக அறிவிப்பாளராகப் பணிபுரியும் நிலானி, கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் ஆறு மாதத் தமிழ் டிப்ளமோ படிப்பு படித்து வருகிறார். நிலானியின் பேச்சில் தமிழ் மொழி மீது அவருக்கு இருக்கும் தீராத காதல் வெளிப்படுகிறது.

தமிழ் மொழி அருமையானது. அதன் உச்சரிப்பில் உள்ள இன்பம் உலகில் வேறெங்கும் காண முடியாது. தமிழ் மொழிக்கு எந்நாளும் ஆங்கிலம் மாற்றாகாது. ஆங்கிலத்தை முன் வைத்துத் தமிழை அலட்சியப்படுத்துவதால் ஓரினம் அழிவதோடு, உன்னதமான பண்பாடும் கலாச்சாரமும் அழிந்துவிடும் – தமிழை நாம் போற்றி வளர்க்கவேண்டியதன் அவசியத்தைச் சொல்கிறார் நிலானி.

நிலானிக்கு அவருடைய பெற்றோர் வைத்த பெயர் ஹூ லீ யுவான். சீனா தகவல் தொடர்பாளர் பல்கலைக் கழகத்தில்  தமிழ் இனத் தொடர்பியல் பட்டப் படிப்புக்கு சேரும் வரை அவருக்குத் தமிழ் தெரியாது. அங்கு சுந்தரம் என்ற பேராசிரியர்தான் தமிழ் கற்க சீனர்களுக்கு காலங்காலமாக வழிகாட்டியாக இருந்துவருகிறார்.

அவரிடம்தான் நிலானியும் தமிழ் பயின்றார். சுந்தரம் ஆசிரியரும் சீனர்தான். அவர் தமிழ் படித்து, சீனர்களிலேயே பல தமிழ் மாணவர்களை உருவாக்கி வருகிறார். நான் தமிழ் இனத் தொடர்பியல் மற்றும் செய்தி மொழிபெயர்ப்புப் பாடங்களை எடுத்து பல்கலையில் நான்காண்டுகள் படித்து பட்டம் பெற்றேன்.

என் பெற் றோருக்குத் தமிழ் தெரியாது. நான் தமிழ் படிக்கப்போகிறேன் என்றதும் மகிழ்ச்சியடைந்தார்கள். அவர்கள் கொடுத்த ஊக்கமும் உற்சாகமும் என் தமிழ் ஈடுபாட்டை அதிகரித்தன.

படிப்பு முடிந்ததும் சீன வானொலியின் தமிழ்ப் பிரிவில் எனக்கு அறிவிப்பாளர் பணி கிடைத்தது. அதில் விநாடி-வினா, சீன சமையல் குறிப்புகள் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவேன். முக்கியமாக அங்கே நிகழ்ச்சி அறிவிப்பாளர் பணிதான் என்னுடையது என்று பூரிக்கிறார் நிலானி.

Tags: , ,

Leave a Reply