தந்தை மது குடிப்பதை நிறுத்த ரயில் முன் பாய்ந்து மகன் தற்கொலை

தந்தை மது குடிப்பதை நிறுத்த ரயில் முன் பாய்ந்து மகன் தற்கொலை

 

வேலூர்: தந்தை மது குடிப்பதை நிறுத்துவதற்காக, அவரது மகன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டார்.வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்து புத்துக்கோவில் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம், 52; கூலி தொழிலாளி; மதுப்பழக்கம் உள்ளவர். இவருக்கு, நான்கு குழந்தைகள். இதில், இரண்டு பேர் ஆண்கள். கடைசியாக பிறந்தவர் கனிஷ்குமார், 18, வாணியம்பாடி கல்லூரியில், பி.எஸ்சி., வேதியியல் படித்து வந்தார்.
தந்தை செல்வம், குடி போதையில் ஆங்காங்கு விழுந்து கிடப்பதும், வாய்க்கு வந்தபடி உளறுவதும் கனிஷ்குமாருக்கு பிடிக்கவில்லை. தந்தையை திருத்த எடுத்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை.

இந்நிலையில், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் ரயில் நிலைய எல்லையில், நேற்று காலை, கனிஷ்குமார் பிணம் கிடந்தது. சட்டைப்பையில் ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்ததாவது:எல்லாருக்கும் சாரி… எனக்கு உயிரோடு இருக்க பிடிக்கல. உடனே, இந்த வயசுலேயே என்ன கஷ்டம்னு யோசிக்காதீங்க.எனக்கு ஒரு பிரச்னையும் இல்ல; என் சாவுக்கு யாரும் காரணம் இல்ல; செத்ததுக்கு அப்புறம் என்ன நடக்கப் போகுதுன்னு தெரியல. பார்க்கலாம்.என் அப்பா, முடிஞ்சா குடிக்கிறத விட்டுட்டு, என் சாவுக்கு ஆகற செலவை, அவர் ஒழுங்கா செய்ய சொல்லுங்க.எனக்கு ஒரு பிரச்னையும் இல்ல. யாரும் பீல் பண்ணாதீங்க. என் போட்டோ அக்கா வீட்டுல இருக்கு. அதை பிரேம் பண்ணுங்க.இவ்வாறு, கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.நேற்று காலை, 8:45 மணிக்கு, புத்துக்கோவில் அருகே நாகர்கோவில் – ஹவுரா ரயில் முன் கனிஷ்குமார் பாய்ந்துள்ளார். ரயிலில் அடிப்பட்ட பின், இன்ஜினில் உடல் மாட்டிக் கொண்டது.வாணியம்பாடி ரயில் நிலையத்தை கடந்தபோது, ரயில்வே ஊழியர்கள் இதை பார்த்துள்ளனர். அதன்பின் ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் அருகே, உடலை ரயில்வே போலீசார் மீட்டனர்.சம்பவம் நடந்த இடத்தில் இருந்து, 8 கி.மீ., தூரத்தில் விண்ணமங்கலம் ரயில் நிலையம் உள்ளது. உடல் அவ்வளவு தூரம் இழுத்து செல்லப்பட்டுள்ளது.

Tags: , , , ,

Leave a Reply