தந்தையரின் புகைப் பழக்கத்தால் மாரடைப்புக்குள்ளாகும் மகன்கள்

தந்தையரின் புகைப்பழக்கத்தால் அருகிலிருந்து வளரும் மகன்களுக்கு மாரடைப்பு பாதிப்பு ஏற்படுவதாக, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை நுரையீரல் சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

   உலகப் புகையிலை எதிர்ப்பு தினம் மே 31 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.  அதனடிப்படையில், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நுரையீரல் சிகிச்சைப் பிரிவில் நடைபெற்ற புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை, மருத்துவமனை டீன் ரேவதி கயிலைராஜன் தொடக்கி வைத்தார்.

  அப்போது அவர் பேசுகையில், புகைப்பழக்கம் உள்ள வீட்டில் குழந்தைகள், பெண்கள் என அனைவருமே நோய் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதனால், குடும்ப பொருளாதாரமும் பாதிக்கப்படும். எனவே, புகைப்பழக்கத்தின் தீமையை அனைவரும் மற்றவர்களுக்கு எடுத்துரைப்பது அவசியம் என்றார்.

  இதில், புகையிலைப் பழக்கத்தால் ஏற்பட்ட நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெறும் பெண் நோயாளிகள், அதன் தீமைகள் குறித்து விளக்கிப் பேசினர்.

  காசநோய் சிகிச்சை குறித்து ஆய்வில் ஈடுபட்டுள்ள டாக்டர் ரமேஷ்குமார் கூறியதாவது: புகைப்பது சம்பந்தப்பட்டவர்களை மட்டுமல்லாது, அருகிலிருப்போரையும் பாதிக்கும். ஆண்டுக்கு நாட்டில் 1.65 லட்சம் பேர் சுவாசக் கோளாறு காரணமாகவும், 37 ஆயிரம் பேர் ஆஸ்துமாவினாலும், 21,500 பேர் நுரையீரல் புற்றினாலும் உயிரிழக்கின்றனர்.

  மேலும், இதய நோயால் ஆண்டுக்கு 3.79 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். சிகரெட்டில் 4 ஆயிரம் வேதிப்பொருள்கள் உள்ளன. இதில், 43 பொருள்கள் புற்றுநோய் காரணியாக உள்ளன.

  தொடர்ந்து புகைக்கும் தந்தைகளின் அருகிலிருந்து வளரும் மகன்களுக்கு இளம் வயதிலேயே மாரடைப்பு பாதிப்பு வருவது கண்டறியப்பட்டுள்ளது என்றார்.

  நிகழ்ச்சியில், மருத்துவமனைக் கண்காணிப்பாளர் டாக்டர் வீரசேகரன், நுரையீரல் சிகிச்சைப் பிரிவு டாக்டர் விவேகானந்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை நுரையீரல் சிகிச்சைப் பிரிவு சார்பில் நடந்த நிகழ்ச்சியில், சிறப்பு மருத்துவர் ஜி. வேல்குமார் கூறுகையில், புகைப்பிடிப்போரால் சுற்றுச்சூழலும் மாசடையும், புகைப் பழக்கமுள்ளோருக்கும் நுரையீரல் செயல்திறன் குறைந்துவிடும் என்றார்.

வேலம்மாள் மருத்துவமனை: மதுரை பசுமலையில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பணிமனை வளாகத்தில் வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சார்பில், புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வுக் கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், மருத்துவமனை மனநல ஆலோசகர் டாக்டர் ரவிச்சந்திரன், மருத்துவமனை பொது மேலாளர் டி. முருகேசன், போக்குவரத்துக் கழக மண்டலப் பொதுமேலாளர் தங்கவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags: , , ,

Leave a Reply