டாக்டர்கள் பற்றாக்குறையால் சிகிச்சைக்கு சிக்கல் வெளியூர்களுக்கு பரிந்துரைப்பதால் கூடுதல் செலவு

முதுகுளத்தூர் : முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால், பாதிக்கப்பட்ட நோயாளிகள், வெளியூர் அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். இதனால் கூடுதல் செலவு, அலைச்சலால் நோயாளிகள் தவிக்கின்றனர்.

இந்த அரசு மருத்துவமனையில் ஒரு சித்தா டாக்டர் உட்பட 11 டாக்டர்கள் பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு பணிக்கு வந்த வெளி மாவட்ட டாக்டர்கள் சில மாதங்களிலேயே, கட்டாய பணிமாறுதல் வாங்கி சென்றுவிடுகின்றனர்.

தற்போது இந்த மருத்துவமனையில், இரண்டு டாக்டர்கள் மட்டுமே உள்ளனர். 17 நர்சுகளுக்கு பேருக்கு பதில் 12 பேரும், துப்புரவு பணியாளர் ஒருவர் பணியாற்றி வருகின்றனர். நோயாளிகளுக்கு சிகிச்சை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இரவில் விஷக்கடி, விபத்தில் சிக்குவோரும், போலீஸ் வழக்குகளுக்காக பரிசோதனைக்காக அழைத்து வரப்படுவோரும், ராமநாதபுரம், மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். “ஜெனரேட்டர்’ இருந்தும், போதிய டீசல் ஒதுக்கீடு இல்லாததால், காட்சி பொருளாய் உள்ளது.

தேரிருவேலி ஆரம்ப சுகாதார நிலையத்தில், இரவு நேரங்களில், விஷ கடி, காய்ச்சல், வாந்தி, பேதியால் பாதிக்கபட்டவர்களை பரிசோதனை செய்யகூட, டாக்டர்கள் இல்லை.

சிகிச்சை அளிக்க நர்சுகள் தயக்கம் காட்டி வருவதால், கிராமப்புறங்களில் இருந்து வருவோர் வெளியூர் மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர்.
முதுகுளத்தூர் முனியசாமி கூறுகையில், “”முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில், “எக்ஸ்-ரே’, இசி.ஜி., வசதிகள் இருந்தும், போதிய ஊழியர்கள் இல்லாததால், சிறு பரிசோதனைகளுக்குகூட, தனியாரை நாடும் கட்டாயத்திற்கு நோயாளிகள் தள்ளபட்டுள்ளனர். மருத்துவமனைகளில் டாக்டர்கள் தங்கி சிகிச்சையளிக்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவிடவேண்டும்,” என்றார்.

மாவட்ட மருத்துவதுறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “”விரைவில் பற்றாக்குறையாக உள்ள, டாக்டர்கள், நர்சுகள் உட்பட பிற பணியிடங்கள் நிரப்பப்படும்,” என்றார்.

 

Tags: , , , , , ,

Leave a Reply