ஜெருசலேம் புனிதப் பயணம்: நிதியுதவிக்கு கிறிஸ்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு, தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ. 20 ஆயிரம் நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ், நிதியுதவி பெற விரும்பும் கிறிஸ்தவர்கள் ஜூலை 31ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும், என மதுரை மாவட்ட ஆட்சியர் எல். சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: இப்புனிதப் பயணம் பெத்லஹேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மதம் தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. இப்புனித பயணம், செப்டம்பர் 2014 முதல் நவம்பர் 2014 வரை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. பயணக் காலம் 10 நாள்கள் வரை இருக்கும்.

இதற்கான விண்ணப்பப் படிவங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்களிலிருந்து கட்டணமின்றி பெறலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, அனைத்து இணைப்புகளுடன் தபால் உறையில் ஜெருசலேம் புனித பயணத்துக்கான விண்ணப்பம் என்று குறிப்பிட்டு, மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், 807, 5ஆவது தளம், அண்ணாசாலை, சென்னை-2, என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவேண்டும். நேரில் செல்லத் தேவையில்லை.

இப்புனிதப் பயணம் மேற்கொள்ள விரும்புவோர், 1.7.2014ஆம் தேதியில் குறைந்தபட்சம் ஓராண்டு செல்லத்தக்க பாஸ்போர்ட் உடையவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர் அல்லது குடும்பத்தினர் தமிழகத்தில் வசிக்கும் கிறிஸ்தவ மதத்தவராக இருத்தல் அவசியம். விண்ணப்பிக்கும்போது, வெளிநாடு பயணம் மேறகொள்வதற்கு எவ்விதமான வில்லங்கங்களும் இருத்தல் கூடாது. வெளிநாடுகளில் புனிதப் பயணம் மேற்கொள்வதற்கு மருத்துவ மற்றும் உடற்தகுதி பெற்றவராக இருத்தல் வேண்டும்.

ஏற்கெனவே, ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொண்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கக் கூடாது. ஒரு குடும்பத்தில் விண்ணப்பதாரரையும் சேர்த்து அதிகபட்சம் 4 நபர்கள் பயணம் மேற்கொள்ளலாம். இதில், 2 வயது நிறைவடைந்த 2 குழந்தைகளும் இருக்கலாம்.

இப்பயணத்தில் 70 வயது நிறைவடைந்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிப்பதுடன், அவருக்கு துணையாக அவர் விரும்பும் நபரை மேற்படி நிபந்தனைக்கு உள்பட்டு, அவருடன் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர். தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தகவல் மற்றும் புனிதப்பயணம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்த விவரம் தெரிவிக்கப்படும், என அவர் தெரிவித்துள்ளார்.

Tags: , , ,

Leave a Reply