ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்திற்கு சிங்கப்பூர் அமைச்சர் லாரன்ஸ் வோங் பாராட்டு

Ifthar 2015 - Photo with Community Leadersஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கத்திற்கு சிங்கப்பூர் அமைச்சர் லாரன்ஸ் வோங் பாராட்டு

 

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை), சென்ற சனிக்கிழமை27-06-2015 அன்று சிங்கப்பூர் பென்கூலன் பள்ளிவாசலில் நோன்பு திறப்பு மற்றும் சமய இன நல்லிணக்க நிகழ்ச்சியை நடத்தியது. சிங்கப்பூரின் ஒற்றுமை, சமய மற்றும் இன நல்லிணக்கத்தைப் பறைசாற்றிய இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலாசார, சமூக, இளையர் ஆகிய துறைகளுக்கான மாண்புமிகு அமைச்சர் திரு லாரன்ஸ் வோங் கலந்து கொண்டார். ஜமால் முஹம்மது கல்லூரி மாணவர்களைப் போன்ற கல்வியாளர்களும், பணியாளர்கள் ஒவ்வொருவரும் சிங்கப்பூரின் வளர்ச்சிக்குப் பங்களிப்பு செய்ய வேண்டும். திறன் சார்ந்த தொண்டூழியத்தில் ஈடுபட அதிக அளவில் சிங்கப்பூரர்கள் முன்வர வேண்டும். ரமலான் மாதத்தில் மட்டுமல்லாமல், ஆண்டு முழுவதும் இச்சங்கம் பல்வேறு சமூகப்பணியாற்றி வருகிறது. சிண்டாவுடன் இணைந்து பின்தங்கிய மாணவர்களுக்கான இலவச கணிதப் பட்டறைகளை இச்சங்கம் நடத்தியது பாராட்டுக்குரியது. இதுபோன்ற நோன்பு திறக்கும் நிகழ்ச்சிகளால், நம் சமூக உறவுகள் மேம்பட்டு, நாம் அனைவரும் ஒன்றுபட்ட பலஇன சமூகமாகத் தொடர்ந்து திகழமுடிகிறது என்று குறிப்பிட்டார் அமைச்சர் திரு லாரன்ஸ் வோங்.

 

நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவதற்காக, சிங்கப்பூரிலுள்ள ஜாமியா குழந்தைகள் இல்லத்தில் வசிக்கும்,68 ஆதரவற்றக் குழந்தைகளுக்கு இலவசப் புத்தாடைகளை இச்சங்கம் வழங்கியது. இதுபோன்ற நற்பணிகள் பாராட்டுக்குரியது என்றார் அமைச்சர்.

 

வரவேற்புரை வழங்கிய சங்கத்தின் தலைவர் கணக்காய்வாளர் முனைவர் ஹாஜி முஹிய்யத்தீன் அப்துல் காதர், சிங்கப்பூர் எதிர்நோக்கும் சவால்களையும், மிரட்டல்களையும் இளையர்களுக்கு எடுத்துச்சொல்லி, சிங்கப்பூரின் பாதுகாப்பிற்கும், அமைதிக்கும் நாம் ஒவ்வொருவரும் நம் கடமையைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

 

எம்.இ.எஸ். (MES) குழுமத்தின் தலைமை நிர்வாகி அல்ஹாஜ் எஸ். எம். அப்துல் ஜலீல், அமைச்சருக்கு பொன்னாடைப் போர்த்தி கௌரவித்தார். தமிழர் பேரவையின் தலைவர் டாக்டர் ஆர். தேவேந்திரன் அமைச்சருக்கு நினைவுப்பரிசு வழங்கினார். சங்கத்தின் செயலவை உறுப்பினர் கணிதப் பேராசிரியர் ஹாஜி அமானுல்லா நிகழ்ச்சியை வழிநடத்தினார். சங்கத்தின் செயலவை உறுப்பினர் ஜனாப் ஃபரீஜ் முஹம்மது இறை வசனங்களை ஓதினார். சங்கத்தின் செயலவை உறுப்பினர் ஜனாப் அப்துல் நஜீர் நன்றியுரை கூறினார். சிங்கப்பூர் பென்கூலன் பள்ளிவாசலின் இமாம் ஹாபிழ் மௌலவி கலீல் அஹ்மது ஹசனி நோன்பின் மாண்புகளை எடுத்துரைத்தார்.

 

சிண்டா, ஜாமியா சிங்கப்பூர், இந்திய முஸ்லிம் பேரவை, நற்பணிப் பேரவை, வளர்தமிழ் இயக்கம், தமிழர் பேரவை, தமிழ் மொழி பண்பாட்டுக் கழகம், சிங்கை தமிழ் சங்கம், சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்,சிங்கப்பூர் தென்காசி முஸ்லிம் நலனபிவிருத்தி சங்கம், ஐக்கிய இந்திய முஸ்லிம் சங்கம், தமிழர் பேரவை பன்னோக்குக் கூட்டுறவுக் கழகம், தமிழ் பட்டிமன்றக் கலைக் கழகம், நாகூர் சங்கம், காயல்பட்டின நலஅபிவிருத்தி சங்கம், முத்துப்பேட்டை சங்கம், கூத்தாநல்லூர் சங்கம், பொதக்குடி சங்கம், தோப்புத்துறை முஸ்லிம் சங்கம்,  மற்றும் பல சமூக அமைப்புகளிலிருந்து சமூகத் தலைவர்களும், சமூகப் பிரமுகர்களும்,சங்க உறுப்பினர்களும் சுமார் 300 பேர்  கலந்து கொண்டனர். ஒற்றுமையையும், சமய இன நல்லிணக்கத்தையும் பறைசாற்றிய வண்ணம், இந்நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

 

 

Tags: , , , ,

Leave a Reply