சேனா ஆனா – ஓர் இலக்கணம்

( ஏம்பல் தஜம்முல் முகம்மது  )

ஆனா ஆவன்னா தமிழுக்கு

உயிரெழுத்து

சேனா ஆனா?

கல்விக்கு உயிரெழுத்து!

பலதுறைக் கல்விக்கு உயிரெழுத்து

புள்ளியுள்ள எழுத்து

மெய்யெழுத்து.

சேனா ஆனாவே

பெரிய புள்ளி !

மெய்யாகவே

வழங்குகிறார் அள்ளி !

அதனால்

அவரைக் குறிக்கும்

மேலான எழுத்திரண்டும்

புள்ளி தேவைப்படாத

மெய்யெழுத்து !

மெய்யானவரைக் குறிக்கும்

மெய்யெழுத்து !

வள்ளல் இனத்திலும்

வல்லினம் உண்டு.

சேனா ஆனாவோ

மெல்லினம்;

நல்லினம்

எப்போதும்

நடுநிலையான மார்க்கப்படியே

நடப்பதால்

இவரும்

இடையினம் !

‘ஈமான்’ எனும் ‘உயிர்’ தான்

இஸ்லாத்தை ‘மெய்’ யாக்கும்

சேனா ஆனாவிடம் இரண்டும்

சேர்ந்தே இருப்பதனால்

இவையும்

உயிர் மெய்யெழுத்துக்களே !

தோன்றிய காலத்திலிருந்து

தமிழில் சேனாவும் உண்டு;

ஆனாவும் உண்டு.

ஆனால்…

’சேனா ஆனா’ எனும்

இரண்டெழுத்தும்

சேர்ந்து வரும்போது…

ஏனைய எழுத்துக்கள்

எல்லாம்

’எங்களுக்கு

இந்தச் சிறப்பு இல்லையே’

என

ஏங்குகின்றன.

உச்சரிக்கும் நேரமும்

மாத்திரை

உடல் நலத்தைத்

தருவதற்கும்

மாத்திரை.

சேனா ஆனாவிடம் உள்ளவை

சிந்தனை நலம் தரும்

மாத்திரை.

ஒரு மாத்திரை

அநாதை இல்லத்தை

‘சிறுவர் இல்லம்’ ஆக்கும்;

இன்னொரு மாத்திரை

‘பிச்சைக்காரர்கள்’ என்ற

பேச்சைத்

‘தேவையுள்ளவர்கள்’ என்று

திருத்தும் !

சேனா ஆனாவில்

நிலைமொழியும்

வருமொழியும்

ஒன்றே ஒன்றுதான்.

அதுதான்

வரலாற்றுப் புகழ்மொழி !

சேனா ஆனா

ஒரு பதம்

பதமானவரைக் குறிக்கும்

பதம்.

இவர்

பதமாய், பலவிதமாய்ப்

பகுத்து அளிப்பதனால்

ஒரு பகுபதம்.

பாகுபாடு பாராது

பழகுகிற தன்மையினால்

இனிய

பாகுபதம் !

சேனா ஆனா

என்ற பதத்துக்கு ஒரு

சிறப்புண்டு.

இது

பகாப் பதங்களையெல்லாம்

ஒரு பகுதியிலே

ஒதுக்கிவிடும்;

இதற்கு

வெற்றிதான் இருமைக்கும்

விகுதி

பொருளின் பெயரைப்

புகல்வது

பெயர்ச்சொல் –

இது, பழைய இலக்கணம்.

பொருள் செய்து,

பொருள் கொடுத்து

பெயர் பெற்ற

சேனா ஆனாவின் பெயரே

இனிப் பெயர்ச்சொல்லாம் !

இது, புதிய இலக்கணம் !

பெயர்செய்யும் வேலையே

வினைச்சொல்லாம்.

சேனா ஆனாவாம்

இவர் பெயரைச் சொன்னால்

எத்தனை வேலைகள்

நடைபெறுகின்றன !

இதுமட்டும்

வினைச்சொல் இல்லையா !

‘சேனா ஆனா ! என்பது

கீழக்கரை சூட்டிய

அன்புப் பெயர்;

வள்ளல் சீதக்காதியின்

பண்புப்பெயர் !

இலக்கண எழுவாய்க்கு

ஒரு பொருள், ஒரு செயலைச்

செய்தாலே போதும்

சேனா ஆனா என்னும்

அரும் பொருளோ

பொருள் ஒன்றாய்,

செயல் பலவாய்ப்

புரட்சி செய்வது !

இது –

அன்பின் எழுவாய்,

பண்பின் எழுவாய்,

உழைப்பின் எழுவாய்,

உயர்வின் எழுவாய்,

வள்ளன்மையின் எழுவாய்…!

இப்படிப் பலவாய்

இப்படி / பல/ வாய்

பாராட்டும் படியாய்ப்

பரிணாமம் பெறும்

பயன்மிகு எழுவாய் !

மிகவும்

’பர்க்கத்’ தான எழுவாய் !

வினைமுற்று

பயனிலை யாம்

ஒவ்வொருவருக்கும்

ஒரு நிலை – ‘மகாம்’

உண்டு.

சேனா ஆனாவின் நிலை

எங்கும்

சிறந்த பயன்தரும் நிலை.

’செய்தார் ! செய்தார் !’ என

எத்தனை வினைகளை

முற்றுப்பெறச் செய்கிறார் !

எனவே

சேனா ஆனாவும்

பயனிலைதானே !

சேனா ஆனா

பொருள் செய்பவர்;

நல்லன நல்கும்

எல்லாப் பொருளுமே

இவரால்

செயப்படுபொருள் தான் !

சேனா ஆனாவின்

மனிதாபிமானத்தில்

எந்த, வேற்றுமையும்

இல்லை.

எனவே இவருக்கு

உவமையும் இல்லை !

எதிலும் இரண்டாவதாய்

இருக்க, இவர் ஒன்றும்

எதுகை அல்ல.

சேனா ஆனா எப்போதுமே

முன்னிற்கும் மோனைதான் !

சேனா ஆனாவின்

’அசை’ வெல்லாம்

’சீர்’ ஆகும்.

’அடி’ யெல்லாம் –

அவர் எடுத்துவைக்கும்

அடியெல்லாம் –

’தொகை’ யாகும் !

இந்தத் தொகை,

கடந்த காலத்திலும்

நிகழ் காலத்திலும்

இறைவன் அருளால்

எதிர் காலத்திலும்

விசேஷமாய் விளங்கும்

’வினைத்தொகை’ ஆகும்.

Leave a Reply