செல்வச் சுத்திகரிப்பு

திருமலர் மீரான்

 

பூலோக நாடுகளின்

பொருளாதாரப்பூகம்பத்தில்

பாதிக்கப்பட்டவர்களுக்குப்

படைத்தவன் வீசிய

பெரு நிவாரணப் பொருள்

பொதியே ஜக்காத் !

சமூகச் செயல்பாட்டிற்கு

சர்வலோக அதிபதியின்

சத்தான பொருள் திட்டம் !

 

ஏழைகள் மேம்பாடுற

ஏக இறை வகுத்த

கட்டாய தானத்தின்

கணக்குத் திட்டம் !

 

கரன்சியில் சேரும்

கசடு நீக்கும்

செல்வச் சுத்திகரிப்பு

சிறப்புத் திட்டம் !

 

ஆகுமான வருவாயில்

ஆகாதவை நீக்கும்

மாமறை வழிவந்த

மாசுக் கட்டுப்பாட்டுத் திட்டம் !

 

நாளும் திரட்டிடும்

நல்ல பொருளில்

நாற்பதில் ஒருபங்கு

நலிந்தவர்க்கு நல்கிட

நாதன் தந்த பொருள் !

 

உரிய நேரத்தில்

உரிமையுடையோரிடம்

ஒப்படைப்பது கடமை !

 

பாங்காய் வந்த பொருளை

பாங்காய் பங்கிட்டு வழங்க

மாண்பாய் வந்த மாதம்

மாதவ மிகு ரமளான் !

 

மூல முதல்வன் தந்த

மூல தனத்தினை

தானவன் நெறியில்

தானம் செய்தால்

தகுதி உயரும் !

 

செலவிட்டால் தானே

செல்வம் ஆகும் !

ஷரீயத் வழியில்

சராசரி சனங்களில்

சரியான விகிதத்தில்

செல்லாதிருந்தால் செல்வம்

செல்லாக் காசாகி

செல்வேன் என்று

சிதறிச் சென்றுவிடும் !

 

காலம் காலமாய்

செட்டாய்ச் சேர்த்து

கட்டி வளர்த்த

சமூகக் கட்டுமானம்

உடைந்து சிதறிடும் !

 

முழுவுலகப் பொருளியலுக்கும்

முதுகெலும்பாய் நிற்கும்

முத்தாய்ப்பான ஜகாத்

உலகில் உள்ள

சோசலிஸம் கம்யூனிஸம்

இஸங்களுக்கு எல்லாம்

‘இல்ம்’ போதித்திடும்

இஸ்லாமியப் பெரும் இஸம் !

 

நன்றி :

சமரசம்

1 – 15 செப்டம்பர் 2010

Tags: , ,

Leave a Reply