செல்போனில் வேளாண் செய்திகள்: இணை இயக்குநர் தகவல்

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் வேளாண்மை தொழில் நுட்ப செய்திகளை குறுஞ்செய்திகளாக செல்போனில் பெறலாம் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் நா.வீ.கிருஷ்ணமூர்த்தி வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை மூலம் விவசாயிகளுக்கு தேவையான தொழில் நுட்ப செய்திகள் மற்றும் இடுபொருள்கள் இருப்பு, விலை விவரம், உரமிடுதல், பூச்சிமருந்து தெளித்தல் போன்ற தொழில் நுட்ப செய்திகள் மற்றும் மானியவிவரங்கள் அவர்களது தொலைபேசி எண்ணுக்கே குறுஞ்செய்தி மூலமாக அனுப்பப்பட்டு வருகிறது.

இந்திய அரசின் வேளாண்மைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள விவசாயிகள் வலைதளம் மூலம் பதிவு செய்த விவசாயிகளுக்கு இச்செய்திகள் அனுப்பப்பட்டு வருகின்றன. தமிழ் மொழியில் இச்செய்திகள் வழங்கப்பட்டு வருவதால் எளிதாகவும், உடனடியாகவும் அந்தந்த பருவத்திற்கும், பயிருக்கும் தேவையான செய்திகள் கிடைப்பதால் சிறப்பான முறையில் விவசாயம் செய்ய பயனுள்ளதாக இருக்கிறது. தேவையான இடுபொருள்களை பெறவும் மிகவும் உதவியாக இருக்கிறது.

இக்குறுஞ்செய்திகள் எழுத்து வடிவத்திலும், குரல் வடிவத்திலும் வழங்கப்படுவதால் அனைத்து தரப்பினரும் இதை எளிதாக அறிந்து கொள்ளமுடிகிறது. அனைத்து மானிய திட்டங்களும் இதன் மூலம் தெரிவிக்கப்படுவதால் விவசாயிகள் அரசின் மானியத் திட்டங்களின் பயனை சுலபமாக அடைய இக்குறுஞ் செய்தி தகவல் மிகவும் உதவியாக இருக்கிறது.

எனவே ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் இத்தகவல் தளத்தை பயன்படுத்திக் கொள்ளவும். இதுவரை பதிவு செய்யாத விவசாயிகள் அந்தந்த பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி தங்களது கைபேசி எண்ணை பதிவு செய்து பயனடையலாம் என, மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் நா.வீ.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Tags: , , , ,

Leave a Reply