சென்னையில் முடி திருத்தும் கட்டணம் உயர்வு

சென்னையில் முடி திருத்தும் கட்டண உயர்வு புதன்கிழமை (ஜன.1) முதல் அமலுக்கு வந்தது.

கடந்த நவம்பர் மாதம் ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு சவரத்தொழிலாளர்கள் சங்கம் சார்பில் மாநில பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.

இதில் ஜன.1-ஆம் தேதி முதல் முடி திருத்தும் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள சாதாரண முடிதிருத்தக் கடைகள் மற்றும் குளிர்சாதன வசதி (ஏ.சி) செய்யப்பட்ட முடித்திருத்தக் கடைகளில் புதன்கிழமை முதல் புதிய கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.

முடித்திருத்தம் ரூ.100, முகச்சவரம்- ரூ.50, முகச் சவரம் மற்றும் முடித்திருத்தம்- ரூ.150, சிறுவர்களுக்கு முடித்திருத்தம்- ரூ.100 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இவற்றோடு சேர்த்து ஹேர்-டை அடிப்பதற்கு ரூ.350 புதிய கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இதே போன்று குளிர்சாதன வசதி செய்யப்பட்ட முடிதிருத்தக் கடைகளில் முகச் சவரம் செய்ய ரூ.80-ம், முடித்திருத்தம் செய்ய- ரூ.150-ம், சிறுவர்களுக்கு முடித்திருத்தம் செய்ய- ரூ.120-ம், முடித்திருத்தம், சவரம் ஆகியவற்றுடன் ஹேர்டை அடிப்பதற்கு ரூ.350 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பிருந்ததைக் காட்டிலும் ரூ.20 முதல் ரூ.60 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

இருப்பினும் முடிதிருத்தும் கடை உரிமையாளர்கள் தங்களது வாடிக்கையாளர்களை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ளும் பொருட்டு கே.கே.நகர், வடபழனி, கோயம்பேடு உள்பட சென்னையின் பல்வேறு இடங்களில் முன்பிருந்த கட்டணத்துடன் ரூ.10 முதல் ரூ.30 வரை மட்டுமே கூடுதலாக வசூலிக்கப்பட்டது.

Tags: , , ,

Leave a Reply