சென்னையில் தபால் துறையின் முதல் ஏ.டி.எம். திறப்பு

6 மாதம் சோதனை அடிப்படையில் செயல்படும் சென்னை, பிப்.28- நாடு முழுவதும் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களையும் “தகவல் தொழில் நுட்ப நவீனமயமாக்கல் திட்டத்தின்” கீழ் இணைத்து, அனைத்து வங்கிகளின் பரிவர்த்தனையை செய்யும் வகையிலான “கோர் பாங்கிங் சோலிசன்” என்ற திட்டம் அஞ்சல் துறையில் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்தவகையில் நாட்டிலேயே முதன் முதலாக சென்னை தியாகராயநகரில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் புதிய ஏ.டி.எம். மையம் தொடக்க விழா நேற்று நடந்தது. இந்திய தபால் துறை அரசு செயலாளர் பத்மினி கோபிநாதன் தலைமை தாங்கினார். மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், கலந்து கொண்டு ஏ.டி.எம். மையத்தை திறந்து வைத்தார்.

பின்னர் நடந்த விழாவில் அவர் பேசியதாவது:- நவீன மயமாக்கல் திட்டத்தின் கீழ் தபால் துறை புதிய முயற்சியில் இறங்கி உள்ளதுடன், வரும் காலங்களில் தபால் துறையை நவீனபடுத்துவதற்காக புதிய யுக்திகளும் கையாளப்பட்டு வருகிறது. கடிதம், தபால் கார்டு விற்பனை குறைந்தாலும், மாற்று வழிகளில் துறை மேம்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக கூரியர், பார்சல் சேவைகளை செய்து வரும் தபால் துறைக்கு பொதுமக்களிடம் அதிக வரவேற்பு உள்ளது. தியாகராயநகரில் திறக்கப்பட்ட ஏ.டி.எம். 6 மாதத்திற்கு சோதனை அடிப்படையில் செயல்படும். இது முழுமையாக வெற்றி பெற தபால்துறையும், வாடிக்கையாளர்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

தபால் துறை அதிகாரிகள் கூறியதாவது:- நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்கள் ரூ.700 கோடியில் நவீன மயமாக்கப்பட்டு வருகிறது. இதில் முதல் கட்டமாக 51 தலைமை தபால் நிலையங்கள், 11 துணை தபால் நிலையங்களில் உள்ள 64 லட்சம் கணக்குகள் ஒருங்கிணைக்கப்படுகிறது. தொடர்ந்து 700 தபால் நிலையங்கள் அடுத்த மாதம் 31-ந்தேதிக்குள் நவீனப்படுத்தப்பட உள்ளது. 2016-ம் ஆண்டுக்குள் 26 ஆயிரத்து 840 தபால் நிலையங்களும் நவீனப்படுத்தப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

விழாவில் சென்னை தலைமை தபால் துறை அதிகாரி டி.மூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags: , , , ,

Leave a Reply