சுவனப்பேறு தரும் கல்வி

சுவனப்பேறு தரும் கல்வி

பேராசிரியை ஹாஜியா கே. கமருன்னிஸா அப்துல்லாஹ், எம்ஏ.,பிடி.,

முன்னாள் முதல்வர், கிரஸண்ட் பெண்கள் பள்ளி, மதுரை

கல்வியை தேடி ஒருவர் ஒரு வழியில் சென்றால் அவருக்கு சுவர்க்கத்திற்குச் செல்லும் ஒரு வழியை அல்லாஹ் இலகுவாக்குகிறான் – அல்ஹதீஸ்

அறிவு வளர்ச்சிக்கு தோண்டி எடுத்தல் (கல்லுதல்) இன்றியமையாதது. சேகரிப்பதைப் போல மனிதனும் கல்வி என்னும் மாபெரும் சொத்தைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். இதைத்தான் ஒரு கவிஞன் தேனியாகினால் ஞானியாகலாம் என்றான்.

கல்விப் பயனை சிலாகித்துச் சிறப்பாக எடுத்துரைக்கும் செம்மல் நபி (ஸல்) அவர்கள் இவ்வுலக வாழ்க்கைக்கு மட்டுமல்ல மறுமையின் மணமான வாழ்விற்கும் வழிகோலும் கல்வியைத் தேடிச் செல்லும்படி ஏவுகிறார்கள்.

மனிதன் தம் கண்முன் காட்சியளிக்கும் இவ்வுலக வாழ்விற்கு ஆதாரமான கல்வியைத் தேடுவதில் கவனம் செலுத்துகிறான். பட்டம், பதவி, பொருளாதாரம் இவற்றின் உணர்வு எந்தக் கல்வித் துறை மூலம் கிடைக்குமோ அதைத் தேர்ந்தெடுக்கிறான். இது தவறில்லை என்றாலும் இவ்வுலக வாழ்வு ஒரு குறுகிய காலம் தங்கிச் செல்லும் சத்திர வாழ்வு என்பதை அவன் புரிந்து கொள்வதில்லை என்பது தான் வேதனைக்குரியது. மறைந்திருக்கும் மறுமை வாழ்வின் மீது அவனுக்கு அக்கறையில்லை. மறுமைக்குப் பயன் தரும் கல்வி அவனைப் பக்குவப்பட்ட பண்பாளனாக மாற்றும் வல்லமை பெற்றதாகும் என்பதை ஏனோ மனிதன் நினைத்துப் பார்ப்பதில்லை.

தனிமையில் மனிதனின் இணைபிரியாத நண்பனாகத் திகழும் புத்தகங்களைத் தேடிச் சென்று தேர்ந்தெடுப்பதில் மனம் முந்த வேண்டும். நல்ல நண்பர்கள் நல்ல வழிகாட்டிகள் அது போன்றே நல்ல புத்தகங்கள் நன்மையின் மறுபக்கம் நம்மை ஈர்த்துச் செல்லும் ஒழுக்கநெறிகளை விரிவுபடுத்தும் நல்ல கல்வியே நாட்டிற்கும், தனி நபருக்கும் நன்மை பயக்கும். சமுதாயத்தைச் சீர் செய்யும் சுவனப்பாதையை இலகுவாக்கும்.

எனவே இம்மை, மறுமைப் பேறு வழங்கும் கல்வியை இன்றே கற்போம். நன்றே கற்போம். எனச் சூளுரைப்போம்.

நன்றி : குர்ஆனின் குரல்

 

Tags: ,

Leave a Reply