சுற்றுலாப் பயணிகளை கவரும் பாம்பன் சாலைப் பாலம்

பராமரிப்பு பணிகள் முடிந்து கம்பீரமாக காட்சியளிக்கும் பாம்பன் சாலைப் பாலத்தில் சுற்றுலாப் பயணிகள், வாகனங்களை சாலைப் பாலத்தில் நிறுத்தி கடலின் அழகையும், ரயில் செல்லும் பாலம் மற்றும் தூக்கு பாலத்தின் தோற்றத்தையும் கண்டு ரசித்துச் செல்கின்றனர்.

ராமேசுவரம் என்றவுடன் பிரமிப்புடன் பார்க்கப்படும் பாம்பன் பாலம் தான் சுற்றுலாப் பயணிகளின் நினைவில் வரும். உலகப் புகழ் பெற்ற சுற்றுலாத் தளமான ராமேசுவரம் தீவுப் பகுதியையும், மண்டபம் பகுதியையும் இணைத்து மிக நீளமான கடல் பரப்பில் பாம்பன் சாலைப் பாலம் அமைந்துள்ளது. கடலில் இருந்து மிக உயரத்தில் 76 தாங்குதூண்கள் தாங்கி நிற்கும் வகையில் பாலம் வடிவமைத்துக் கட்டப்பட்டுள்ளது. பாலத்தின் தாங்குதூண்களின் அடிப்பகுதி கடலுக்குள் அதிக ஆழம் தோண்டப்பட்டு மிக நவீன முறையில் உருவாக்கப்பட்டுள்ளன.

பாலத்தில் வாகனங்கள் செல்லும்போது உருவாகும் அதிர்வுகளால் பாலத்தில் விரிசல் ஏற்படாமல் இருக்க நவீன முறையில் ஸ்பிரிங் அமைத்து கட்டப்பட்டுள்ளது. பாலத்தில் போக்குவரத்து துவங்கப்பட்டு 25 ஆண்டுகளுக்குப்பின் பாம்பன் சாலைப் பாலத்தில் ரூ.18 கோடி மதிப்பில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. மேலும் பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள ஸ்பிரிங் புதுப்பிக்கப்பட்டும், உயரமான இரும்புத் தூண்களில் விளக்குகள் பொருத்தும் பணிகளும், தூண்கள், கைப்பிடிச் சுவர் பகுதிகளில் வர்ணங்கள் பூசும் பணிகளும் நடந்து வருகின்றன.

பாம்பன் சாலைப் பாலத்தில் வாகனங்களில் செல்லும் போது கண்களில் விரியும் பரந்த நீலக்கடலின் அற்புத காட்சிகள் பார்ப்போரை பரவசமூட்டும். பாம்பன் சாலைப் பாலத்தின் அருகில் பாம்பன் ரயில் பாலத்தில், கீழே கடலில் ஆர்ப்பரிக்கும் அலைகளுக்கு மத்தியில் மிக மெதுவாக ரயில் ஊர்ந்து செல்லும் காட்சி கண்களை விட்டு அகலாது. மாதத்தில் சில முறை கடலில் பாம்பன் பாலத்தை கடக்கும் கப்பல்களுக்காக, தூக்குப்பாலம் தூக்கி இறக்கப்படும் நேரங்களில் அவற்றைக் காண நிறுத்தப்படும் வாகனங்களால் பாம்பன் சாலைப் பாலத்தில் போக்குவரத்து ஸ்தம்பித்து விடும். பாம்பன் சாலைப் பாலத்தை கடக்கும் வாகனங்கள் பாலத்தின் மத்தியில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டு, பரந்த கடலில் செல்லும் சிறிய படகுகளை கண்டு களித்து, கடல் காற்றையும் சுவாசித்து செல்லும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

மேலும் வளைவான அமைப்பில், அழகான தோற்றத்தில் கட்டப்பட்டுள்ள சாலைப் பாலத்தில் வாகனங்களும், ரயில் பாலத்தில் ரயிலும் செல்லும் காட்சியை பாலத்தின் கீழ் பகுதியில் நின்று சுற்றுலாப் பயணிகள் பிரமிப்புடன் கண்டு ரசிக்கின்றனர்.

Tags: , , , ,

Leave a Reply