சுயமான சிந்தனையே ஆராய்ச்சியின் அடித்தளம்

அறிவியல் கதிர்

சுயமான சிந்தனையே ஆராய்ச்சியின் அடித்தளம்
பேராசிரியர் கே. ராஜு

டாக்டர் பி.எம்.ஹெக்டே மருத்துவர்களில் மிகவும் வித்தியாசமானவர். அலோபதி மருத்துவர் ஆனாலும் மருந்துக் கம்பெனிகள் அடிக்கும் கொள்ளைக்கும் தேவையான அளவுக்கு மேல் மாத்திரைகளைப் பரிந்துரைப்பதற்கும் எதிராக கட்டுரைகள் எழுதி சகமருத்துவர்களின் கடுப்பைச் சம்பாதித்து வருபவர். தன்னுடைய மாணவர் ஒருவரைப் பற்றி 2017 டிசம்பர் 24 தேதியிட்ட ஆங்கில இந்து நாளிதழில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் ஆராய்ச்சி என்றால் என்ன என்பதைப் பற்றி அற்புதமான விளக்கம் கொடுக்கிறார்.

“ஏற்கனவே தெரிந்த விஷயங்களை மீண்டும் திருப்பிச் சொல்வதால் அறிவு முன்னேறுவதில்லை.. மாறாக, மாற்றவே முடியாது என நிலைபெற்றுவிட்ட சில தவறான கோட்பாடுகளை உடைத்தெறிவதன் மூலமே முன்னேறுகிறது என மாணவர்களிடம் நான் கூறுவதுண்டு. எனது ஆயிரக்கணக்கான மாணவர்களில் அருணாச்சலம் குமார் அந்த போதனையை சரியாகக்  கடைப்பிடிப்பவர். மணிபால் பல்கலைக்கழகத்தின் உடற்கூறியல் துறையில் அவர் ஓர் இளம் ஆசிரியராகச் சேர்ந்தார். மாணவர்கள் அவரை மிகவும் நேசித்தனர். ஆனால் எம்பிபிஎஸ் படித்தபோது சில தேர்வுகளில் பல முறை தோற்றதினால் அவரை படிப்பில் பின்தங்கிய ஒரு மாணவராகவே ஆசிரியர்கள் கருதினர்! காரணம், அவர் ஒரு சுயசிந்தனையாளர். தெரிந்த விஷயங்களை தேர்வுத்தாளில் அப்படியே எழுதி சமர்ப்பிப்பதில் அவருக்கு நாட்டம் இருக்காது. ஆனால் நமது கற்றல் முறை, நிதியுதவியைப் பெற்றுக் கொண்டு அதைத் தக்கவைத்துக் கொள்ளச் செய்யப்படும் வழக்கமான ஆராய்ச்சிகள், ஆராய்ச்சித் தாள்களை தயாரிக்கும் முறை, சான்றிதழ்களின் பட்டியல்கள் – இவைதான் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு தருவதற்கான அளவுகோல்கள். அதிகாரத்தில் இருப்பவர்களில் பெரும்பாலோருக்கு ஆராய்ச்சியைப் பற்றிய ஆழமான புரிதல் கிடையாது. பதவி உயர்வு கிடைக்காததைப் பற்றியெல்லாம் டாக்டர் குமார் கவலைப்படமாட்டார். அவருடைய அறிவுக்கூர்மையைக் கண்டறிந்து அவருக்கு நான் பதவி உயர்வு அளித்தபோது சில அதிருப்திக் குரல்கள் எழுந்தன. தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் திருமணத்திலும் குமார் பரவலாக ஏற்கப்பட்ட நடைமுறைகளின்படி நடந்து கொள்ளாதவர். வாழ்க்கையை ஒரு சவாலாக ஏற்று அதைத் தைரியமாக சந்தித்தவர்” என்று தன் கட்டுரையைத் தொடங்குகிறார் டாக்டர் ஹெக்டே.

ஒரு முறை அவர் ஹெக்டேயிடம் கிரிக்கெட்டில் சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய உடலுக்கேற்ற  மட்டையைப் பயன்படுத்தாமல் மிகுந்த எடையுள்ள மட்டையைப் பயன்படுத்துவதாகக் கூறினார். டெண்டுல்கர் விளையாடுவதை டிவியில் பார்த்துவிட்டு ஆய்வு செய்த குமார் விரைவிலேயே அவருடைய முதுகுத் தசைகளில் பாதிப்பு வரும் என்று கணித்தார். சில மாதங்களுக்குப் பிறகு சச்சினுக்கு உண்மையிலேயே முதுகுவலி வந்து படுத்த படுக்கையானார். அவருடைய டாக்டர்கள் டெண்டுல்கருக்கு அளிக்க வேண்டிய சிகிச்சை பற்றி அறிந்து கொள்ள டாக்டர் குமாருடைய ஆய்வுத் தாளைப் பயன்படுத்திக் கொண்டார்களாம்!

மங்களூரைச் சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகளில் ஏராளமான மீன்கள் செத்துக் கரையொதுங்குவதைக் கவனித்த டாக்டர் குமார் கடலின் ஆழப்பகுதியில் நிலநடுக்கம் போன்ற அதிர்வுகள் இருப்பதாகவும் அது சுனாமி வருவதில் போய் முடியும் என்றும் கணித்துக் கூறினார். அவருடைய ஆராய்ச்சி பெரிதும் பாராட்டப்பட்டது.

ஒரு நோய்க்கு மருந்தென்று சொல்லி வெறும் இனிப்பு உருண்டைகளை டம்மியாகக் கொடுத்தபோது சில நோயாளிகள் குணமாகிவிட்டதாக உணர்ந்தார்கள் என்கிறது அண்மையில் செய்யப்பட்ட ஓர் ஆய்வு. ஆழ்மனதில் நம்பிக்கை தரும் இந்த உணர்வினை பிளேசிபோ உணர்வு (placebo effect) என்கிறார்கள். டாக்டர் ஹெக்டே தன்னுடைய முதல் புத்தகத்தில் கடவுள் என்ற கருத்தாக்கம் மனித மனம் உருவாக்கிய பிளேசிபோ சிகிச்சையாளர் என்றும் மனித மனம் என்பதும் மூளை என்பதும் ஒன்றல்ல, வெவ்வேறானவை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். மனக்கோளாறுகளுக்கு வேதியியல் மருந்துகளை எடுத்துக்   கொள்வதால் மூளைக்கு பாதிப்பு ஏற்படுமே தவிர, மனநல பாதிப்பை அது சரிசெய்துவிடாது என்கிறார் ஹெக்டே.

“புகைபிடிப்பது ஆளைக் கொல்லும் என்பதை நடைமுறையில் நிரூபித்துக் காட்டினார் டாக்டர் குமார். புற்றுநோயை அவர் தைரியத்துடன் சந்தித்தார். நல்லதொரு ஆய்வின் உண்மையான முகமாக அவர் இருந்தார். மனதில் எழும் ஒரு கேள்வியை வைத்துக் கொண்டு விடையைக் கண்டுபிடிக்க மனதிலிருந்து எவ்வளவு தூரம் விலகிச் செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் செல்வதுதான் உண்மையான அறிவியல். இதை வாழ்வியல் முறையாகக் கடைப்பிடித்த டாக்டர் குமார்,  தான் படித்த-பல ஆண்டுகள் ஆசிரியராகப் பணிபுரிந்த உடற்கூறியல் துறைக்கு தன்னுடைய உடலைத் தானமாகக் கொடுத்துவிட்டு மறைந்தார்” என்று தன் மாணவருக்கு புகழாரம் சூட்டி கட்டுரையை நிறைவு செய்கிறார் டாக்டர் ஹெக்டே.

தமிழ் இந்து வெளியிட்டுவரும் குரு-சிஷ்யன் தொடரில் இந்தக் கட்டுரையைக் கூட பிரசுரிக்கலாமே..!
(உதவிய கட்டுரை : 2017 டிசம்பர் 24 அன்று ஆங்கில இந்து நாளிதழில் பி.எம்.ஹெக்டே எழுதியது)

Tags: ,

Leave a Reply