சுகந்தங்கள் சூழ்கொண்ட சூஃபித்துவ மாநாடு

சுகந்தங்கள் சூழ்கொண்ட சூஃபித்துவ மாநாடு
தென்னிந்தியா தமிழ்நாடு, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் என்ற கிராமத்தில் தன் அருள் அரசாட்சி பீடத்தை அமைத்து ஆட்சி செய்துகொண்டிருக்கும் மாட்சிமை மிகு மஹான் குத்பே இர்ஷாத் காஜா ஆரிஃபுல்லாஹ் ஷாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்.
அவர்களின்  மருமகனும் சீலமிகு சீடருமான குத்பே தோ ஆலம் காஜா ஹபீபுல்லாஹ் ஷா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்.
சிதம்பரத்தில் பிறந்து சீரான ஞானத்தின் சிகரமாக விளங்கி சிங்கப்பூர் சிக்லாப் ரோட்டில் குபூர் காஸிம் என்னும் கப்ருஸ்தானில் அமைதி கொண்டு ஆன்மிக ராஜ்ஜியம் செலுத்தி வரும் அன்னவர்களின் நாற்பதிற்கும் மேற்பட்ட கலீஃபாக்களில் ஒருவர் காஜா வஜ்ஹுல்லாஹ் ஷாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்.
முத்து ஹழ்ரத் என முரீதீன்களாலும், முஹிப்பீன்களாலும் முகமலர அழைக்கப்படும் முர்ஷித் நாயகம் அவர்கள் பரங்கிப்பேட்டையை பிறந்தகமாகக் கொண்டவர்கள்.
ஞானத்தின் பெட்டகமாகவும், பெரும் குன்றாகவும் திகழ்ந்த இவர்கள் ஞான வழியில் எண்ணற்ற சீடர்களுக்கு ஆன்ம ஞான பானம் புகட்டி அரியதொரு நெறி செலுத்தி ஞானப்பாட்டையில் தரிபடுத்தி தர்பியத் செய்து வந்தார்கள், வருகிறார்கள்.
சுருக்கமாக சொல்லவோ எழுதவோ முடியாத வகையில் செழும் செங்கோல் செலுத்திய மஹான் அவர்கள் பரங்கிப்பேட்டையிலேயே   மணந்து மறைந்து  மனம் பரப்பி  மக்களின் மனங்களிலே ஊணாக உயிராக உதிரமாக உள்ளாட்சி செய்து வருகிறார்கள்.
அவர்கள் அருளாசிபெற்ற கலீஃபாக்களில் ஹஜ்ரத் காஜா ஃபத்ஹுல்லாஹ் ஷாஹ் தவ்வலல்லாஹு உமுரஹு அவர்களும் ஒருவர்.
முன்சொன்ன முர்ஷித் மஹானின் நடை, உடை, பாவனைகளை தம் வாழ்வில் கடைப்பிடித்தொழுகும் இவர்கள் முர்ஷித் அவர்களின் சேவைகளை சிரமேற்று செயல்பட்டு வருகிறார்கள்.
ஞான சீடர்களுக்கு ‘பைஅத்’ என்னும் ஞான தீட்சை வழங்கி வழிநடத்தி வருவதுடன், அர்ஷத் ஃபத்ஹிய்யா என்னும் அறக்கட்டளை நிறுவி அதன் வழியே பொதுப் பணிகள், தூய பல சேவைகளை செய்து   வருகிறார்கள்.
அவர்களின் உள்ளத்தில் ஓர் உதிப்பு ஏற்பட்டது. 2004ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிங்கப்பூரிலே முர்ஷித் முத்து மஹான் அவர்கள் ஒரு மனித நேய மாநாட்டை நடத்தினார்கள். அதன் படியே தமிழகத்திலும் அப்படியொரு மாநாட்டை நடத்தினால் என்ன? என்ற எண்ண உதிப்புதான் அது.
மஹான்களின் எண்ண உதிப்பு சாதாரணமானவை அல்ல. மாறாக எல்லாம் வல்ல அல்லாஹ்வே அவர்களின் உள்ளங்களில் உதிக்கச் செய்யும் உதிப்பாகும்.
விதைப்பதும் அவனே, அதற்கு பாசனமிட்டு விளையச் செய்வதும் அவனே, விருட்ஷமாய் அது விரிந்து கிளை பரப்பி கனி தரச் செய்பவனும் அவனே.
புள்ளிகள் சேர்ந்து கோலம் ஆகும். ஆனால் அவனோ முன்னரே கோலம் போட்டுவிட்டு பின்னர் நம்மை புள்ளி வைக்கச் சொல்வான். அவனே புள்ளியாகி உள்ளிருப்பான். அதை சொல்லி முடியாது சொல்லியும் புரியாது. ஆக அனைத்தும் அவனே. ஆசிப்பதும் அவனே ஆசியும் அவனே. அந்த பரமானந்த  பரம்பொருளுக்கே புகழெல்லாம் அல்ஹம்துலில்லாஹ்.
அவனின் நாட்டப்படியே அனைத்தும் நடந்தேறின. அதற்கு சதையும் இரத்தமும் கொண்ட சில மனித உருவங்கள் நடனமாடின அதிலும் அவனே நடமாடினான்.
நிர்ணயிக்கப்பட்ட அந்த நாள் வந்தது. அது ஜனவரி மாதத்தின் 20ஆம் தேதி 2018ஆம் வருடம். சனிக்கிழமை.
சனிக்கிழமை மாநாடு நடத்தலாமா மக்கள் வருவார்களா? எங்கே நடத்தலாம், மாபெரும் அரங்குகளிலா? கல்லூரி வளாகங்களிலா? மஸ்ஜித்களிலா, மண்டபங்களிலா என்ற மாபெரும் ஆலோசனைகளின் முடிவிலே முன்வந்து முடிவானது எம்.எஸ். மஹால் என்ற மண்டபம்.
என்ன தவம் செய்ததோ, எத்தனை பெரும் சூஃபிகள் கண்களுக்கு தெரிந்தும் தெரியாமலும் அங்கே வந்திருந்தும், வந்திருந்தோரை வாழ்த்தி நின்றும் வகைவகையான தோற்றங்களிலும், மாற்றங்களிலும் மனிதர்கள் நிறைந்திருந்தனர். மனிதமும் நிறைந்திருந்தது.
மண்டபம் மட்டுமல்ல மனமும்தான்
நிறைந்திருந்தது.
எண்ணிக்கைகளில் மட்டுமின்றி எடைகளாலும் அதிக பலுவும் வலுவும் மிக்க ஏராளமானோர் அங்கே தாரளமாக தென்பட்டனர்.
இஸ்லாமியர்களால் நடத்தப்படுகிற இஸ்லாமிய நிகழ்ச்சி என்கிற மரபுகளை மறுத்து சமயங்களைக் கடந்த சகோதரத்துவ மாநாடாக மலர்ந்தது.
மதங்களைக் கடந்து மனங்களை ஒன்று சேர்க்கும் மகத்தான முயற்சியின் வெற்றி மாநாடாக அது மணக்கோலம் கொண்டது.
பணங்கள் இருந்தால் மட்டுமே போதாது, ஒருமித்த மனங்கள் வேண்டும். இதுபோன்ற வெற்றி இலக்கை தொடுவதற்கு என்று அங்கே தோரணம் கட்டி தொங்கவிடப்பட்டது போல பதாகைகள் பறைசாற்றின.
மௌலானா ரூமி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் சொல் சித்திரங்கள் சுவர்களிலும் சாளரங்களிலும் சமிக்ஞை செய்து கொண்டிருந்தன.
நம் நினைவில் வாழும் நாதாக்களான
குத்பே இர்ஷாத் காஜா ஆரிஃபுல்லாஹ் ஷாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி,
குத்பே தோ ஆலம் காஜா ஹபீபுல்லாஹ் ஷா ரஹ்மதுல்லாஹி அலைஹி,
காஜா வஜ்ஹுல்லாஹ் ஷாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி
ஆகிய பெருமக்களின் பெயர்களால்  அரங்கம் அலங்கரிக்கப்பட்டது.
கலீஃபா காஜா ஸபியுல்லாஹ் ஷாஹ் தவ்வலல்லாஹு உமுரஹு அவர்கள் தங்களின் சீரிய செழுமையால் தலைமை ஆசனத்தை அலங்கரித்தார்கள்.
சில்சிலா ஹபீபிய்யாவின் சிறப்பு மிகு கலீஃபாக்களான
ஹஜ்ரத் காஜா ஃபத்ஹுல்லாஹ் ஷாஹ்
ஹஜ்ரத் காஜா ரஃபீகுல்லாஹ் ஷாஹ்
ஹஜ்ரத் காஜா இனாயத்துல்லாஹ்  ஷாஹ் சுலைமானி
ஹஜ்ரத் காஜா தாவூத் ஷாஹ் சுலைமானி
ஆகிய ஞான வாரிசுகள் இருக்கைகளில் இருந்தது நம் இதயங்களை ஈர்த்தது. அவர்களின் மோன மவுனத்திலும் மாநாடு மகிழ்ந்தது.
ஆரீபீன்கள், ஆஷீகீன்கள், அருள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருவழித் தோன்றல்கள், ஆன்மிக ஆன்றோர்கள் அறிஞர்கள், நீதிபதிகள், கற்றறிந்த சான்றோர்கள், காவியங்கள் படைத்த கவிஞர்கள், புலவர்கள், புரவலர்கள், கல்லூரி முதல்வர்கள், முனைவர்கள் கடமையாற்றும் பெருமைமிகு பேராசிரியர்கள்,
எழுத்தாளர்கள், இதழாசிரியர்கள்,
 பெருந்தகைகள், பெரியோர்கள்,
பெண்கள் என பலரும் சங்கமித்து சங்கமமாக அரங்கம் அலங்காரம் பெற்றது.
மாபெரும் சேவைகள் ஆற்றி சிறந்திட்ட, சன்மார்க்கத்தின் நிகழ்கால காவலர்களான ஆலிம் உலமாக்கள் , அறிஞர்களின் அணிவகுப்பு  ஆன்மீகத்தை அடுத்த யுகத்திற்கு அறிமுகப்படுத்தியது.
தமிழகத்தின் தலைமை காஜி ஆஷிகுர்ரஸூல் அல்லாமா ஸலாஹுத்தீன் முஹம்மது ஐய்யூபி தவ்வலல்லாஹு உமுரஹு அவர்கள் சமூகமளித்து மழலை தமிழில் அவர்கள் நிகழ்த்திய சிற்றுரை செவிகளில் செந்தேன் சிந்தியது.
மௌலவி ஷெய்கு அப்துல்லாஹ் ஜமாலி
மௌலவி அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரி
மௌலவி செய்யிது நியாஜ் அஹ்மத் ஜமாலி
மௌலவி ஸதீதுத்தீன் பாகவி போன்ற மேதைகள் மேடையில்.
உருதுவிலும், உயர் தமிழிலும்  தங்கள் சொல் சிலம்புகளை எடுத்து வீசினர்.
பேராசிரியர் நாகூர் ரூமி
ஊடகவியலாளர் திரு வீரபாண்டியன் ஆகியோர் ஆன்மிகத்தையும் இலக்கியத்தையும் குறித்து ஆற்றிய ஆய்வுரை ஞானப் பசியை மேலும் கூட்டியது.
ஜமா அத்துல் உலமா சபையின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றது இதயத்திற்கு இதமாக இருந்தது.
தமிழ் மாநில செயலாளர்
மௌலவி அன்வர் பாதுஷா உலவி
சென்னை மாவட்ட தலைவர் மௌலவி அபூதாஹிர் சிராஜி
சென்னை மாவட்ட செயலாளர் மௌலவி காஜா முஹ்யித்தீன் ஜமாலி
ஆகிய உலமாக்கள்  அகமகிழ்வுடன் பங்கேற்றனர்.
இஸ்லாமிய இலக்கியக் கழக தலைவர் முனைவர்
பேராசிரியர் சே.மு.மு முஹம்மத் அலி
பொருளாளர் ஹாஜி ஷாஜஹான்
மற்றும் உறுப்பினர்கள் பலர் பங்கேற்றது உள்ளத்திற்கு உவகை சேர்த்தது.
ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அக்பர் அலி
இலக்கிய ஆர்வலர் புதுக்கோட்டை கிருஷ்ணமூர்த்தி
ஆன்மீக ஆர்வலர் சித்தர் மதுரை  யோகபாலசுப்ரமணி
திருவாரூர் ஹாஜி அப்துர்ரஹீம்.
ஈரோடு இர்பானுல் ஹுதா அரபிக் கல்லூரி பேராசிரியர் ஷவ்கத் அலி மஸ்லஹி
மூத்த பத்திரிகையாளர் பீர்முஹம்மத் பாகவி
போன்ற பல்துறை நிபுணர்கள் பங்கேற்றது மாநாட்டின் மென்மையை மேன்மை படுத்தியது.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புகழ்பாடும் பேரவை
நபிநேசப் பேரவை
ரஹ்மத்துல் லில் ஆலமீன் பேரவை
மதனீ மீலாது கமிட்டி
பிலாலியா உலமா பேரவை
ஹிதாயதுல் அனாம் அறக்கட்டளை
என செழும் சேவை செய்யும் நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பு சேர்த்தனர்.
ஆத்ம ஞானி அல்லாமா ஜலாலுத்தீன் ரூமி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் ஞானக் கோர்வை மஸ்னவி ஷரீப் தமிழாக்கத்தின் ஐந்தாம் பாகம் அங்கே வெளியிடப்பட்டது மாநாட்டின் அழகுக்கு அணிசேர்த்தது.
உலகில் சூஃபிஸம் பேசப்படும் அனைத்து முற்றங்களிலும் முன்நிற்கும் மஸ்னவி இந்த மாநாட்டில் வெளியிடப்பட்டது.
 ஆன்மிகமும் இலக்கியமும் இரு கரம் சேர்ந்து எழுப்பிய கர ஒலிகள் செவிகளைக் கடந்து சிந்தையை உசுப்பியது.
பூமான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது கொண்ட காதலால் அரும்பல கவிகளை பாடிய அற்புத கவிஞர்,
 சூபிசத்தின் மீதும் மஸ்னவியின் மீதும் மிகுந்த ஈடுபாடு கொண்ட அறிஞர்.
மர்ஹூம் கவிக்கோ அப்துல் ரகுமான் ( நவ்வரல்லாஹு கபுரஹு) அவர்களின் பெயர் சூட்டப்பட்ட பூமான் நபியின் புகழரங்கம் (நஃத் மஜ்லிஸ்) நயனங்களை நனைத்தது.
நினைத்ததை விட சிறப்பாக இனித்தது.
முர்ஷித் வஜ்ஹுல்லாஹ் ஷாஹ் நாயகம் ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆன்மா அங்கே ஆலாபனை செய்தது ஆன்மிகத் தழுவலாய் அமைந்தது.
காணொளிக் காட்சியின் வழியே அவர்கள் முன்வந்து முகமலர்ந்து ஸலாம் ஓதியதைக் கேட்டு நெஞ்சங்கள் நெகிழ்ந்தன.
 சாமரங்கள் வீசி அங்கே சகலரின் கண்களும் பணித்தன. உள்ளங்களைக் கொள்ளைக் கொண்டது. உத்வேகம் பிறந்தது.
வலி மஹான் எம் குரு மஹான்
காஜா ஃ பஹீமுல்லாஹ் ஷாஹ்
 மத்தலில்லஹுல் ஆலி அவர்களின் ஆசியும் அணுக்கிரகமும் அங்கே காற்றில் மெல்லக் கலந்து எம் சுவாசங்களில் ஸ்பரிசித்தது.
இடையிடையே இதயத்திற்கு இதமான இசையும். ஓசையில்லாமல் தேநீரும் தேவைக்கேற்ப பரிமாறப்பட்டன.
மதிய இரவு உணவுகள் சைவ அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன.
முந்திரி, பாதம் அத்திப் பழம், கற்கண்டு , பேரிச்சம் பழம் கொண்ட தப்ருக் நேர்ச்சையாக வழங்கப்பட்டது.
நாகூர் நாயகத்தின் பதினொன்றாம் வாரிசு அல்ஹாஜ் கலீபா மஸ்தான் ஸாஹிபு அவர்களது ஆசியுரையுடன்
ஃபஹீம் சகோதரர்களின் துஆ ஸலாம் பைத்துடன்
   வலிமார்கள்  வாழ்த்துரைக்க ,  வானவர்கள் ஆமீன் கூற
வந்தோர் யாவரும் மகிழ்ந்து சென்றனர்.
ஃபஹீமிய்யா ஃபத்ஹிய்யா முரீதுகளின் பகீரத முயற்சியில்
ஹபீபிய்யா சூஃபித்துவ மாநாடு சுகந்தங்கள் சூழ் கொண்டது , இன்ஷா அல்லாஹ் இனியும்….
அன்புடன்
அபூதாஹி ஃபஹீமீ மஹ்ழரி
Tags: 

Leave a Reply