சிவகங்கை அரசு இசைப்பள்ளியில் மாணவ–மாணவிகள் சேர்க்கை தலைமை ஆசிரியை தகவல்

சிவகங்கை,

சிவகங்கையில் உள்ள அரசு இசைப்பள்ளியில் மாணவ–மாணவிகளுக்கான சேர்க்கை நடைபெறுகிறது என்று பள்ளி தலைமையாசிரியை மீனலோசனி தெரிவித்துள்ளார்.

அரசு இசைப்பள்ளி

சிவகங்கை மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமையாசியை மீனலோசனி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:–

தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் சிவகங்கையில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளியில் 2014–15ம் கல்வியாண்டிற்கான குறளிசை, பரதநாட்டியம், தவில், நாதசுரம், தேவாரம், மிருதங்கம், வயலின் ஆகிய பாடப்பிரிவுகளில் மாணவ–மாணவியர் சேர்க்கை நடைபெற உள்ளது.

இதில் சேர விருப்பம் உடையவர்கள் வயது 12முதல் 30க்குள் இருக்கவேண்டும். மேலும் தவில் மற்றும் நாதஸ்வரம் வகுப்பில் சேருவதற்கு கல்வித்தகுதி தேவையில்லை. மற்ற வகுப்புகளுக்கு 7ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் பரதநாட்டியம் பிரிவில் ஆண்களும் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.

கல்வி உதவித்தொகை

3ஆண்டுகள் நடைபெறும் இந்த பயிற்சியில் பயிற்சி கட்டணமாக ஆண்டிற்கு ரூ.152 செலுத்த வேண்டும். தேர்வு செய்யப்படும் மாணவ–மாணவிகளுக்கு அரசின் இலவச பேரூந்து பயண அட்டையுடன் கல்வி உதவி தொகையாக மாதம் ரூ.400அளிக்கப்படும். அரசு மாணவர் விடுதி வசதியும் அளிக்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் சிவகங்கை சத்தியமூர்த்தி தெருவில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளியில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags: , , , , , , ,

Leave a Reply