சிறுபான்மையினருக்கு ஓராண்டில் ரூ 165 கோடி நிதியுதவி

சிறுபான்மையினருக்கு கடந்த ஓராண்டில் மட்டும் ரூ 165 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என, தமிழக சிறுபான்மைத் துறை மேம்பாட்டுக் கழக ஆணையர் முகம்மது அஸ்லாம் தெரிவித்தார்.
சென்னை, அயனாவரத்தில் உள்ள தாதாவாடி ஜெயின் அறக்கட்டளையில், ஜெயின் சமூகத்திற்கான நலத்திட்டங்கள் குறித்த கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த கருத்தரங்கில், அனைத்திந்திய ஜெயின் சங்கத் தலைவர் லலித் காந்தி, தமிழக ஜெயின் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் தொடர்பாக பேசினர்.

இந்த நிகழ்ச்சியில், சிறுபான்மையினருக்கு அரசு வழங்கிவரும் நிதியுதவி, நலத்திட்ட உதவிகள் குறித்து ஆணையர் முகம்மது அஸ்லாம் கூறியது:

தனிநபர் கடன் உதவித் திட்டம்: பெற்றோரின் ஆண்டு வருமானம், 1 லட்சத்து 3000-க்குள்ளும், கிராமப் புறத்தில் வசிப்பவராக இருப்பின் ரூ 81 ஆயிரத்துக்குள்ளும் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் 18 வயது நிரம்பிய 1 நபருக்கு மட்டும் வழங்கப்படுகிறது.
இதன்படி, வியாபாரத்துக்கும், தொழிலை மேம்படுத்திக் கொள்ளவும் கடன் வழங்கப்படுகிறது. இதில், நபர் ஒருவருக்கு அதிக பட்சமாக ரூ. 20 லட்சமும், குறைந்த பட்சமாக ரூ 5 லட்சமும் வழங்கப்படுகிறது.

கல்வி கடன் திட்டம்: அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில், இளம்நிலை, முதுநிலை தொழில்கல்வி, தொழில் நுட்பக்கல்வி, குறுகிய கால திறன் வளர்ச்சிப் படிப்பு பயில்பவர்களுக்கு கல்விக் கடனுதவி வழங்கப்படுகின்றன.

இதில், குறுகிய கால வளர்ச்சிப் படிப்புக்கு (1 ஆண்டு) ரூ. 3 லட்சம், தொழிற்கல்விக்கு (5 ஆண்டுகள்) ரூ 3 லட்சம் முதல் ரூ 15 லட்சம் வரையிலும், முதுநிலை தொழிற்கல்வி, தொழில்நுட்பக்கல்வி பயில்வோருக்கு ரூ. 3 லட்சம் முதல் ரூ. 9 லட்சம் வரையிலும், வெளிநாடுகளில் தொழிற்கல்வி பயில ரூ. 4 லட்சம் முதல் ரூ. 20 லட்சம் வரையிலும் ஆண்டுக்கு 3 சதவீத வட்டியுடன் கல்விக் கடன் வழங்கப்படுகின்றன.

இதன்படி, கடந்த ஓராண்டில் மட்டும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறுபான்மையினர் பயனாளிகளுக்கு ரூ.134 கோடி கல்வி உதவித் தொகையும், ரூ. 31 கோடி தொழில்முனைவோர் கடனுதவியும் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

Tags: , ,

Leave a Reply