சிறுநீரிலிருந்து மின்சாரம்!

அறிவியல் கதிர்

சிறுநீரிலிருந்து மின்சாரம்!
பேராசிரியர் கே. ராஜு

நுண்ணுயிரி எரிபொருள் செல்களைப் (microbial fuel cells) பயன்படுத்தி சிறுநீரிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஒரு முறையினை பிரிட்டனில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.  நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தி உயிரிப் பொருட்களை (organic matter) மின்சாரமாக மாற்றுவதற்கு ஒரு முற்றிலும் புதிய வழிமுறையை நுண்ணுயிரி எரிபொருள் செல் சாத்தியமாக்கியிருக்கிறது. இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்பு என்பதில் சந்தேகம் இல்லை.
சிறுநீரை சேகரிக்கும் கொள்கலனில் எரிபொருள் செல்கள் பொருத்தப்படுகின்றன. நுண்ணுயிரிகள் செல்லின் ஆனோடை (நேர்மின்முனை) சென்றடைந்து சிறுநீரிலுள்ள உயிரிப் பொருட்களை மக்கவைக்கின்றன. விளைவாக புரோட்டான்களும் எலெக்ட்ரான்களும் வெளியிடப்படுகின்றன. புரோட்டான்கள் ஒரு `பகுதி சவ்வூடு பரவும் திரையின் (semipermeable membrane) வழியாக கேதோடை (எதிர்மின்முனை) சென்றடைகின்றன. எலெக்ட்ரான்கள் ஒரு மின்சுற்றின் வழியாக பயணிக்கின்றன. எரிபொருள் செல்லின் இரண்டு மின்முனைகளும் 0.5 வோல்ட் மின் அழுத்த வித்தியாசத்தில் செயல்படுகின்றன. இதில் நுண்ணுயிரிகளுக்கு எரிபொருள் உணவு தேவைப்படுகிறது. சிறுநீர் அந்த எரிபொருளாகப் பயன்படும் என்பதையும் இந்த செல்லை செயல்படவைக்க அது மட்டுமே போதும் என்பதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். எல்ஈடி பல்புகள் அல்லது குழல் விளக்குகளை எரியவைக்கத் தேவையான ஆற்றலை இந்த வழிமுறையின் மூலம் உற்பத்தி செய்ய முடிகிறது. தொல்எரிபொருட்களைச் சார்ந்து இருப்பதிலிருந்து ஆய்வாளர்கள் நம்மை விடுவித்து அதிக செலவின்றி மின்சாரம் தயாரிக்கும் ஓர் அற்புத வழிமுறையைக் காட்டியுள்ளனர்.
“வளரும் நாடுகளில் உள்ள சுகாதார வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே இத்திட்டத்தை செயல்படுத்த நினைக்கிறோம். மின்சாரத்தை உற்பத்தி செய்வது மட்டுமல்ல, சிறுநீர் வீணாக சாக்கடையில் ஓடுவதற்குப் பதிலாக வேதியியல் மாற்றம் செய்து அதை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக் கொள்ளவும் முடியும் என்ற அளவில் இது ஒரு இரட்டை நன்மைத் திட்டம்” என்கிறார் ஆய்வாளர்கள் குழுவில் உள்ள விஞ்ஞானி ஐரீன் மெரினோ.
இதுவரை ஆய்வாளர்கள் இரு களபரிசோதனைகளைச் செய்துள்ளனர். தங்கள் பல்கலைக்கழக வளாகத்திலேயே குறைந்த எண்ணிக்கையிலான நபர்களைக் கொண்டு நடத்தப்பட்ட பரிசோதனை ஒன்று. அடுத்து பிரிட்டனின் மிகப் பெரிய இசை விழாவான கிளாஸ்டன்பரி விழாவில் கடந்த ஆண்டு ஒரு நாளைக்கு ஆயிரம் பேர்களை வைத்து பரிசோதனை நடத்தப்பட்டது. இரு பரிசோதனைகளிலும் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரம் சிறுநீர் கழிக்கும் அறைக்கு வெளிச்சம் தரப் பயன்படுத்தப்பட்டது. கிளாஸ்டன்பரி பரிசோதனையில் 432 செல்களைக் கொண்டு 300 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
அடுத்து இந்தியாவிலும் ஆப்பிரிக்காவின் சில பகுதிகளிலும் ஆக்ஸ்பாம் நிறுவனத்துடனும் வேறு சில நிறுவனங்களுடனும் இணைந்து இந்த பரிசோதனையை நடத்த ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர். குறிப்பாக போதிய வெளிச்சம் இல்லாத அகதிகள் முகாம்கள், சமுதாயக் கூடங்கள், பள்ளிகள், பொதுக்கழிப்பறைகள் போன்ற இடங்களைத் தேர்ந்தெடுக்க அவர்கள் முடிவு செய்துள்ளனர். “பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பகுதிகளில் உள்ள கழிப்பறைகளுக்குப் போதிய வெளிச்சம் தருவது, முடிந்தால் வெளியே உள்ள பகுதிகளுக்கும் தருவது, அதன் மூலம் வீடுகளில் அல்லாமல் பொதுக்கழிப்பறைகளைப் பயன்படுத்த வேண்டிய தேவை உள்ள நாடுகளில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு தருவது என்பதுதான் திட்டத்தின் நோக்கம். தொல்எரிபொருட்களைப் பயன்படுத்த வேண்டிய தேவை இல்லாத பசுமைத் திட்டம் இது. இயற்கையிலேயே தாராளமாகக் கிடைக்கும் ஒரு கழிவுப் பொருளை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்திக் கொள்வது வரவேற்கத் தகுந்த மாற்றம் அல்லவா?” என்று வினவுகிறார் இந்த ஆய்வை நடத்திய பிரிஸ்டல் உயிரியல் ஆற்றல் மையத்தின் இயக்குநர் அயோனிஸ் ஐரோபோலோ.
கண்ட இடங்களில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ள நாம் நமது பழக்கத்தை மாற்றிக் கொண்டே ஆகவேண்டும் என்ற சூழலை அரசு உருவாக்க வேண்டும். போதுமான பொதுக்கழிப்பறைகளைக் கட்டி சிறுநீரிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் அருமையானதொரு திட்டத்தைச் செயல்படுத்த அரசும் உள்ளாட்சிகளும் தன்னார்வ நிறுவனங்களும் மக்களும் இணைந்து முனைந்தால் எவ்வளவு சிறப்பாக இருக்கும் !

(நன்றி : செப்டம்பர் ட்ரீம் 2047 இதழில் பிமன் பாசு எழுதிய கட்டுரை.)

Tags: 

Leave a Reply