சிங்கப்பூர் : வெளிநாட்டுத் தொழிலாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் “லிட்டில் இந்தியா’

 

வெளிநாட்டுத் தொழிலாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் மிகச் சிறந்த இடமாக “லிட்டில் இந்தியா’ பகுதி திகழ்கிறது என்று சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் அந்நாட்டின் மனிதவள அமைச்சர் டான் சுவான்-ஜின் தெரிவித்தார்.

சிங்கப்பூர் நாடாளுமன்றக் கூட்டத்தில் திங்கள்கிழமை அவர் மேலும் பேசியதாவது:

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் ஒன்று கூடுவதற்கு ஒரு இடம் தேவை. அவர்கள் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்களை சந்தித்து, தங்களது தகவல்களை பரிமாறிக் கொள்ளும் அந்தத் தருணம் விலைமதிப்பற்றது.

சிங்கப்பூரில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சிங்கப்பூர் மக்களாலும், வேலை செய்யும் நிறுவனங்களின் முதலாளிகளாலும் நல்ல முறையிலேயே நடத்தப்படுகின்றனர்.

ஆனால், தொழிலாளர்கள் திட்டமிட்ட ரீதியிலும், பரவலாகவும் துன்புறுத்தப்படுவதாக சிலர் குற்றம்சாட்டுகின்றனர். எந்த அடிப்படையில் இவ்வாறு கூறுகின்றனர் என்று தெரியவில்லை. அவ்வாறு கூறப்பட்டதே லிட்டில் இந்தியா கலவரத்துக்கு வழிவகுத்தது.

வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பொருத்தவரை, ஒருசில விஷயங்களைத் தவிர பொதுவாக நல்ல சூழலே உள்ளது. அவற்றை சரி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்காக மேலும் பல பொழுதுபோக்கு மையங்கள் ஏற்படுத்தப்படும். ஆனால், அவை “லிட்டில் இந்தியா’வைப்போல முழுமையான பொழுதுபோக்கு இடமாக விஸ்தரிக்கப்படமாட்டாது. தெற்காசிய தொழிலாளர்கள் தங்களது வாரவிடுமுறை நாள்களை மகிழ்ச்சியுடன் செலவிடும் வகையில், இந்திய வம்சாவளி வணிக வளாகங்கள், உணவு வகைகள் மற்றும் கேளிக்கை விடுதிகள் அதில் இடம்பெறும் என்று அமைச்சர் டான் சுவான்-ஜின் பேசினார்.

இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளர் சக்திவேல் குமாரவேலு என்பவர் சிங்கப்பூரில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, இந்தியர்கள் அதிகம் வசிக்கக் கூடிய லிட்டில் இந்தியா பகுதியில் டிசம்பர் 8-ஆம் தேதி கலவரம் வெடித்தது.

Tags: , , , ,

Leave a Reply