சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் முதல்வர் “பெரும்புலவர்” சி.நயினார் முஹம்மது நினைவுக் கூட்டம்

IMG_9539 (1)சிங்கப்பூரில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் முதல்வர் “பெரும்புலவர்” சி.நயினார் முஹம்மது நினைவுக் கூட்டம்திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்கள் சங்கம் (சிங்கப்பூர் கிளை)யின் ஏற்பாட்டில், அக்கல்லூரியின் முன்னாள் முதல்வர், பெரும் புலவர் முனைவர் சி. நயினார் முஹம்மது, கடந்த 23-07-2014 அன்று அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், தனது 85 வயதில் இறைவனடி சேர்ந்ததை முன்னிட்டு, அன்னாரின் கல்விப்பணியையும், தமிழ்ப்பணியையும், சமூகப்பணியையும் நினைவு கூர்ந்து, சிங்கப்பூர் பென்கூலன் பள்ளிவாசல் பன்னோக்கு அரங்கத்தில் சென்ற 03-08-2014 அன்று மாலை 4 மணியளவில் நினைவுக் கூட்டம் நடைபெற்றது.சங்கத்தின் தலைவர் ஆடிட்டர் ஹாஜி முஹிய்யத்தீன் அப்துல் காதர், கூட்டத்திற்கு தலைமை வகித்தார். சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் ஜனாப் பரீஜ் முஹம்மது கிராஅத் ஓதி கூட்டத்தை துவங்கி வைத்தார். பெரும் புலவர் மர்ஹூம் சி. நயினார் முஹம்மது அவர்களைப் பற்றிய முக்கிய குறிப்புகளை, சங்கத்தின் துணைத்தலைவர் கலந்தர் மொஹிதீன் எடுத்துரைத்தார்.

மூத்த எழுத்தாளர் ஜே.எம்.சாலி, பன்னூல் ஆசிரியர் டாக்டர் ஹிமானா சையத், சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஹாஜி  மு.அ. மசூது, பிரபல விரிவுரையாளர் அப்துல் கரீம், எழுத்தாளர் ஷாநவாஸ் அப்துல் காதர், கணிதப் பேராசிரியர் அமானுல்லாஹ் ஆகியோர் கலந்துகொண்டு பெரும்புலவர் ஆற்றியப் பணிகளை நினைவுகூர்ந்தனர். பென்கூலன் பள்ளிவாசலின் இமாம், உஸ்தாத் ஹாஜி அப்துல் கையூம் பாகவி அவர்கள் சிறப்பு துஆ ஓதினார்கள். சமூகப் பிரமுகர்களும், கல்லூரியின் முன்னாள் மாணவர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரியில் 32 ஆண்டுகள் தமிழ்த்துறைப் பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும், பின்னர் 4 ஆண்டுகள் அக்கல்லூரியின் முதல்வராகவும் அரும்பணியாற்றியவர். பின்னர், தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். குன்றக்குடி அடிகளார் இவருக்கு “பெரும் புலவர்” பட்டம் வழங்கி பெருமிதப்படுத்தினார். திருக்குர்ஆனுடன் திருக்குறள் எப்படி ஒத்துப் போகிறது என ஆய்வுக் கட்டுரை எழுதி மதச்சார்பின்மைக்கு வித்திட்டவர். “குறள் ஞாயிறு” என்ற விருது பெற்ற பெருமகன் இவர்.

முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விஸ்வநாதனுடன் இணைந்து “தமிழக புலவர் குழு”வை உருவாக்கி அதன் செயலாளராக 28 ஆண்டுகள் பணியாற்றியவர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் “தமிழ்ச் செம்மல்” என்ற பட்டம் வழங்கி இவரைக் கௌரவித்தது.

“இஸ்லாமிய இலக்கியக் கழகம்” என்கிற அமைப்பை தோற்றுவித்து, ஐந்து அனைத்துலக இலக்கிய மாநாடுகளை நடத்தி அதன் மூலம் இஸ்லாமிய இலக்கியத்தை மக்களிடையே கொண்டு சேர்த்தவர். திருச்சி தமிழ்ச்சங்கத்தின் துணை அமைச்சராக இறக்கும்வரை இருந்தவர். உலகத் திருக்குறள் பேரவை இவருக்கு “திருக்குறள் நெறி தொண்டர்” என்ற விருது வழங்கி கௌரவித்தது. பல அரிய நூல்களை எழுதி, தமிழ்மொழி வளர்ச்சிக்கும், சமூகத்திற்கும் பெரும் பங்களிப்பை வழங்கிய பெருமைக்குரியவர்.

அவருக்கு மனைவி, மகள், நான்கு மகன்கள் உள்ளனர். பிள்ளைகள் அனைவரும் பொறியியல் நிபுணர்கள்.

அன்னாரின் மறுமை வாழ்வு ஈடேற்றம் பெற, எல்லாம் வல்ல இறைவன் நல்லருள் பாலிப்பானாக! ஆமீன்.

தகவல் :
Dr Mohiadeen Abdul Kader
President
Jamal Mohamed College Alumni Association (Singapore Chapter)
100 Jalan Sultan #09-07 Sultan Plaza, Singapore 199001
kader@dnh.com.sg

 

Tags: , , , , ,

Leave a Reply