சமூக நல்லிணக்கத்துக்கு அடையாளம் நத்ஹர்வலி தர்கா !

சமூக நல்லிணக்கத்துக்கு அடையாளம்

நத்ஹர்வலி தர்கா !

திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசல் எனப்படும் ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா நத்ஹர்வலி தர்காவுக்கு இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல் அனைத்து மதத்தினரும் வந்து செல்வது சிறப்பு. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து இந்த தர்காவில் நடத்தப்படும் சந்தனக்கூடு அனைத்து மதத்தினரும் பங்கேற்பது குறிப்பிடத்தக்கது. திருச்சியில் இஸ்லாமிய வரலாற்றை உருவாக்கியதில் ஹஜ்ரத் தப்லே ஆலம் பாதுஷா நத்ஹர்வலிக்கு பெரும் பங்கு உண்டு.

துருக்கி நாட்டில், பனாஸா நகரைச் சேர்ந்த அஹமத் கபீர் – பத்ஹூனிஷாவின் மகனாக 14.5.952 – ஆம் ஆண்டில் பிறந்தவர் முதஹ்ஹருத்துன்.

தனது 7 ஆவது வயதில் தந்தை அஹமத் கபீரை முதஹ்ஹருத்துன் இழந்துவிட, அரசுப் பொறுப்புக்கு சையது அலி நியமிக்கப்பட்டார். ஆனால், அவரும் அடுத்த 10 ஆண்டில் இறந்துவிட ஆட்சிப் பொறுப்பை முழுமையாக ஏற்றார் முதஹ்ஹருத்துன்.

தனக்கு உதவியாக இருக்கும் வகையில் சையது அலியின் மகன்களான ஷம்சுதீன், ஷம்கல்லாஹ் ஆகிய இருவரையும் அமைச்சர்களாக நியமித்து ஆட்சி நடத்தி வந்தார். முதஹ்ஹருத்துன் தனது 21 வயதில் இறைவழியில் செல்ல எண்ணி, அரசப் பதவியைத் துறந்து இறைப்பணியில் ஈடுபட தீர்மானித்து விட்டேன், எனக்குப் பின்னர் எனது சகோதரன் இந்த நாட்டின் அரியணை ஏறி ஆட்சி செய்வார் என்று கூறினார்.

தாயிடம் இறைவழியில் செல்லப் போவதை முதஹ்ஹருத்துன் தெரிவித்தபோது நீ அல்லாஹ்வின் பாதையில் செல்ல நாடியிருப்பதால், சென்று வா எனக் கூறினார். பத்ஹூனிஷா தாயின் அனுமதி கிடைத்தவுடன், தனது அமைச்சர்கள் ஷம்சுதீன், ஷம்கல்லாஹ் உள்ளிட்ட 900 சீடர்களுடன் தனது இறைப்பயணத்தை தொடங்கினார்

பல பகுதிகளுக்கு சென்ற பின்னர், தனது சீடர்களுடன் ஹர்மூஸ் நகர் சென்றார் முதஹ்ஹருத்துன், அங்கு ஷைகு அலீயிடம் தங்கி, அவரிடம் தீட்சை பெற்றார். அதைத் தொடர்ந்து முதஹ்ஹருத்துனுக்கு நத்ஹர் என்ற பெயரையும் ஷைகு அலீ சூட்டினார்.

ஷைகு அலீயிடம் பல்வேறு ஞானரகசியங்களை கற்றுத் தேர்ந்த பின்னர் நத்ஹர் அவர் அனுமதி பெற்று தம் சீடர்களுடன் மக்கா சென்று ஹஜ் செய்த பின்னர் மதீனா சென்று அண்ணல் நபி அடக்கவிடத்தை தரிசித்தார்.

பின்னர், நத்ஹர், கடல் கடந்து திரிசிரபுரம் வந்து (திருச்சிராப்பள்ளி) அங்கிருந்த மலைமீதேறி (மலைக்கோட்டை) இளைப்பாறி அங்கேயே தங்கினார்.

ஒருமுறை காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு நகரமே மூழ்கிவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் இருந்தபோது, மலைமீதிருந்த  நத்ஹரிடம் மக்கள் முறையிட்டனர். அவர் தம் கையிலிருந்த கழியால் மலை மீது ஓங்கி அடிக்க, அது நகரமெங்கும் பேரொலியாக எதிரொலிக்கச் செய்தது. இதைத் தொடர்ந்து சீறிவந்த வெள்ளம் வடிந்தது. இதனால் நத்ஹருக்கு தப்லே ஆலம் (அகில உலகப் பறை) என்ற பெயர் உருவானது.

தனது ஆயுள் முடியப் போகிறது என்பதை உணர்ந்த நத்ஹர், ஹிஜ்ரி 417 ஆம் ஆண்டு ரமலான் பிறை 9 – ம் நாளில் தனது சீடர்களை அழைத்து “என் முடிவு நெருங்கிவிட்டது. ரமலான் பிறை 14 –ம் நாளில் நான் இவ்வுலகை நீங்கப் போகிறேன், அனைவரும் இறப்பு என்னும் பானத்தை அருந்தியே தீர வேண்டும். ஆதலால் நீங்கள் உலக மாயையில் மூழ்காது, இறைக்காதலில் மூழ்கித் திளையுங்கள். நீங்கள் தொழவும், நோன்பு திறக்கவும் இறைவனைத் தியானிக்கவும் தவற வேண்டாம். இரவில் விழித்திருந்து இறை தியானத்தில் ஈடுபடுங்கள் அதுவே உங்களை இறைவனிடம் கொண்டு போய்ச் சேர்க்கும் பாலமாகத் திகழும்” என்று கூறிய நத்ஹர், “எனக்குப் பின்னர் உங்களின் தலைவராக அப்துர் ரகுமான் சித்துகியை ஆக்கிக் கொள்ளுங்கள்” என்று கூறினார்.

ரமலான் மாதம் 14 –ம் நாள் இரவு (1026 –ம் ஆண்டு அக்டோபர் 28) இஷா தொழுகை நேரத்தில் தம் சீடர்களை நோக்கி நத்ஹர், “என்னுடைய பயணத்துக்கான நேரம் வந்துவிட்டது. நாம் என்னுடைய எஜமானைச் சந்திக்கச் செல்கிறேன்” என்று கூறி தம் தொழுகை விரிப்பைக் கொண்டு வருமாறு கூறி, தக்பீர் கட்டி, கியாம் நிலையில் நின்று பின்னர் ருகூஉ செய்து அதன் பின்னர் தங்களின் நெற்றியை சுஜுதில் கொண்டு போய் தரையில் வைத்தார்கள். அக்கணமே அவரது உயிர் உலகை விட்டுப் பிரிந்ததாகவும் தெரிவித்தனர். பின்னர் அவரது நினைவாக அவ்விடத்தில் கட்டப்பட்டதால் உருவானதுதான் நத்ஹர்வலி தர்கா.

நத்ஹரின் அடக்கவிடத்துக்கு வந்து 12 ஆண்டுகள் காத்திருந்த காஜா அஹமதுல்லா ஷாஹ், பின்னர் நகருக்கு வெளியில் உள்ள மலைக்குச் சென்று அங்கு வாழ்ந்தார். அதிலிருந்து அம்மலைக்கு காஜா மலை எனவும் பெயர் ஏற்பட்டது.

நத்ஹரின் அடக்கவிடத்துக்கு வந்து 12 ஆண்டுகள் காத்திருந்த காஜா அஹமதுல்லா ஷாஹ், பின்னர் நகருக்கு வெளியில் உள்ள மலைக்குச் சென்று அங்கு வாழ்ந்தார். அதிலிருந்து அம்மலைக்கு காஜா மலை எனவும் பெயர் ஏற்பட்டது.

நத்ஹரின் சீடர் கலீபா அப்துர் ரகுமான் சித்திக், வளர்ப்பு மகளான ஹலீமா என்கிற மாமாஜிகினியும் நத்ஹரின் கால்மாட்டுப் பகுதியிலும், அவரது அமைச்சர்களின் ஒருவரான ஷம்ஸ் கோயான் நத்ஹர் அடக்கவிடத்துக்கு கீழ்புறத்திலும், மற்றொரு அமைச்சரான ஷம்ஸ் பீரான் தற்போது சம்ஸ்பிரான் தெருவிலுள்ள பள்ளிவாசலின் பக்கத்திலும் அடக்கம் பெற்றுள்ளனர் எனத் தெரிவித்தனர்

அனைத்து மதத்தினரும் பங்கேற்கும் சந்தனக்கூடு :

ஆண்டுதோறும் ரமலான் மாதத்தின் 14,15 பிறை தேதிகளில் சந்தனக்கூடு ஊர்வலம் நடத்தப்படுகிறது. ரமலான் மாத 13 –ம் பிறையன்று நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் விடிய விடிய காவிரியாற்றிலிருந்து மண் குடங்களிலில் தண்ணீர் எடுத்து வந்து ஹர்பத் என்னும் சுத்தம் செய்தல் பணியை தர்காவில் மேற்கொள்கின்றனர். இதைத்தொடர்ந்து சந்தனம் பூசும் வைபவம் தர்காவில் நடைபெறுகிறது. இதற்காக காந்தி மார்க்கெட் பகுதியிலிருந்து தாரை, தப்பட்டைகள் முழங்க 15 கிலோவுக்கும் மேற்பட்ட எடையில் பல்வேறு திரவியங்கள் கலந்த சந்தனம் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு நத்ஹருக்கு சந்தனம் பூசும் வைபவம் நடத்தப்படுகிறது.

பல நூற்றாண்டுகளாகத் தொடரும் முறை :

நத்ஹருக்கு பூக்களையும், சந்தனத்தையும் கொண்டு வருவது காந்தி மார்க்கெட்டிலுள்ள பூ வியாபாரம் செய்வோர்தான் மும்மதத்தினரும் இணைந்து பூசப்பட்ட சந்தனத்தில் 25% பூ வியாபாரிகளுக்கும், 25% தர்கா நிர்வாகத்துக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது. மீதமுள்ள 50% சந்தனம் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது.

இவர் (நத்ஹர்) கோரிக்கையை இறைவன் ஏற்றுக் கொண்டான் என்பதால், இஸ்லாமியர்கள் மட்டுமல்ல, பிற மதத்தினரும் தங்களின் வேண்டுதல்கள் நிறைவேறிய பின்னர், இங்கு வந்து பொதுமக்களுக்கு அன்னதானம், ஆடைகள் வழங்குவது போன்றவற்றைத் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

இதுபோன்று பல்வேறு நோய்களிலிருந்தும், மனவேதனைகளிலிருந்தும் விடுபட வேண்டும் என்று நினைப்போர் இங்கு 40 நாள்கள் தங்கியிருந்து செல்லுகின்றனர். நத்ஹர்வலி தர்கா சமய நல்லிணக்கத்துக்கான இடமாகத் திகழ்கிறது. தமிழகம் மட்டுமல்லாது, ஆந்திரம், கர்நாடக மாநிலத்திலிருந்தும் அதிகளவில் வந்து செல்கின்றனர் என்கின்றனர் தர்கா பரம்பரை அறங்காவலர்கள்.

1018 ஆண்டுகளாகத் தொடர்ந்து சந்தனக்கூடு ஊர்வலம் எனப்படும் உரூஸ் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதுவே எங்களுக்கு கிடைத்த பெரும் பாக்கியம் என்று மேலும் தெரிவிக்கின்றார் தர்கா பரம்பரை அறங்காவலர்கள்.

-கு. வைத்திலிங்கம்

 

 

( தினமணி – ஈகைப் பெருநாள் மலர் – 2015 )

Tags: , ,

Leave a Reply