சமாதானப் புறாக்களின் சர்வலோக சங்கமம்

 

திருமலர் மீரான்

 

அனைத்துலக அதிபதியின்

அழைப்பினை ஏற்று

சாந்தி மார்க்கச் சோலையின்

சமாதானப் புறாக்கள்

நேசமுடன் நடத்தும்

நெடிய யாத்திரையே

ஹஜ் என்னும்

புனிதப் பயணம் !

 

மனிதப் பிரதிநிதிகள் வழி

மா ஞாலமே துல்ஹஜ்ஜில்

மக்கா மதீனா நோக்கி

இடம் பெயர்கின்றது !

 

அரபி மாக்கடலில்

அகில நாடுகளின்

மனித ஆறுகள்

தடையேதுமின்றி

கண்ணியத்துடன்

கைகோத்து

புண்ணியம் பெறுகின்றன !

 

ஆலயம் கஅபாவில்

அநேக நாடுகளின்

கொள்ளை அழகு

வெள்ளை தேவதைகள்

பறந்து வந்து

கூடியிருக்கின்றன !

 

பல்வேறு இடங்களிலிருந்து

பறந்து வந்த பல லட்சம்

பலப்பல பறவைகளை

அன்போடு அரவணைத்து

அரபாத் சரணாலயம்

அருள் உணர்வும் உணவும்

ஆக்கமுடன் அளிக்கின்றது !

 

வெள்ளைத் துணிக்குள்

பச்சை மனிதமா

மரகதங்கள் உமிழும்

சன்மார்க்க ஒளிகண்டு

சந்திரனே வெட்கிக்கும் !

 

இறைவனை மிக நெருங்கி

இறைவனையே

காதலிப்பவர்கள் குலாவும்

குவலயக் குலப் பெருவிழா !

 

பேரிறைவன் சந்நிதியில்

பாவங்களை பலியிட்டு

மன்றாட்டம் தேடும் தவ்பா

மகா யக்ஞம் !

 

இபுறாகீம் நபியின்

தியாக சாலையில்

திசை எட்டிய

நேசர்கள் நடத்தும்

ஞான யோகப் பெரும் வேள்வி !

 

நன்றி :

சமரசம்

16 – 30 நவம்பர் 2009

Tags: , ,

Leave a Reply