சமச்சீர் பாடத்தை ஆடியோ சிடியாக தயாரித்த காரைக்குடி மாணவிகள்

ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான சமச்சீர் பாடத் திட்டத்தின், முப்பருவ பாடத்திட்டத்தில், ஒரு பருவ பாடத்தை, கற்றுணர்ந்து, அதை ஆடியோ சிடியாக தயாரித்துள்ளனர் காரைக்குடி உமையாள் ராமனாதன் கல்லுாரி மாணவிகள்.கருவாய் உருவாகி, உருவாய் அரங்கேறி, பருவங்கள் பல தாண்டி, வருங்கால வாழ்வை நோக்கி ஒவ்வொருவரும் நடை பயில்கிறோம்.

லட்சியங்கள் கைக்கு எட்டும் துாரத்தில், இருந்தும் அலட்சியப்படுத்துகிறோம். தடைகள் ஓராயிரம், சாதிக்க தன்னம்பிக்கை ஒன்றுதான் பேராயுதம் எனக் கூறி, தன்னம்பிக்கை ஆயுதத்தை மட்டும் கையில் வைத்து, பார்வையற்ற மாணவர்களுக்காக 20 நாட்கள் கஷ்டப்பட்டு, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான சமச்சீர் கல்வி பாடத்திட்டங்களை, சாதனைக்கு சாதனம் ஒரு பொருட்டல்ல எனக் கூறி, மொபைல் வழி வாய்ஸ் ரெக்கார்டரில் பதிவுசெய்து, சி.டி.யாக மாற்றி, அதை திருப்பத்துார் டி.இ.எல்.சி., சிறப்பு பள்ளியில் உள்ள, பார்வையற்ற பள்ளி மாணவர்களுக்கு, இலவசமாக வரும் 19-ம் தேதி வழங்க உள்ளனர் காரைக்குடி உமையாள் ராமனாதன் மகளிர் கல்லுாரியை சேர்ந்த மாணவிகள்.குரலில் சிறந்த 80 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டனர். 6 முதல் 8 ம் வகுப்பு வரையிலான சமச்சீர் பாடத்திட்டங்களை, கணிதத்தை தவிர, மற்ற பாடங்களை நான்கு குழுவாக பிரிந்து படித்து புரிந்து கொண்டனர்.அதை தொடர்ந்து, அவற்றை ரிக்கார்டிங் செய்ய, தங்கள் மாணவிகளிடம் உள்ள சிறந்த மொபைல்களை தேர்வு செய்து, ஒரு மாணவி புத்தகத்தை வாசிக்க, மற்றொரு மாணவி, மொபைலை பிடிக்க என ரிக்கார்டிங் தொடர்ந்தது. பறவைகளின் சத்தம், விலங்குகளின் சத்தத்தை அறிய, மாணவிகளே மிமிக்ரி கொடுத்தனர்.மாணவிகள் தேவி அபிநயா கூறும்போது: “கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு, மாடல்ல மற்றயவை” என்பது கல்வியின் சிறப்பை கூறும் திருக்குறள்.
ஒருவர் எல்லா செல்வம் பெற்றிருந்தாலும், கல்வி செல்வமே சிறந்த செல்வமாகும். அந்த வகையில், கல்லுாரி முதல்வர் ஹேமாமாலினி உதவியுடன், ஆங்கிலத்துறை தலைவர் அழகு மீனாள், ஆசிரியர்கள் சுந்தரி, சுதா, தாரகை ஆகியோர் தலைமையில், பார்வையற்ற மாணவர்களுக்காக, சமச்சீர் பாடத்திட்டத்தை, ஆடியோ சி.டி.,யாக பதிவு செய்துள்ளோம்.ஒவ்வொரு கேள்வியும், பதிலும் இரண்டு முறை வாசிக்கப்படும். பாடத்தை புரிந்து கதை சொல்வது போலவும், பாடுவது போலவும், முழு மனதுடன் செய்துள்ளோம்.தற்போது, அரசு பள்ளிகளில் வாசிப்பு திறன் குறைவாக உள்ளது. அந்த வாசிப்பு திறனை மேம்படுத்தவும், இந்த சி.டி.,யை பயன்படுத்தலாம். ஏற்கனவே நர்சரி படிப்புக்கான ஆடியோ சி.டி. தயாரித்து வெளியிட்டுள்ளோம். ஒரு வகுப்புக்குரிய தமிழ், ஆங்கிலம், அறிவியல், சமூக அறிவியல் அனைத்தும், இரண்டரை மணி நேரம் ஓடும். இதற்கு டாக்கிங் புக் லைப்ரரி என பெயர் வைத்துள்ளோம், என்றார்.முதல்வர் ஹேமாமாலினி கூறும்போது: செய்முறை பயிற்சியை, நோட்டில் எழுதி, ஆசிரியரிடம் காண்பித்து, தாங்கள் மட்டுமே வைத்து கொள்வதால் எந்த பயனும் இல்லை. படிக்கும் காலத்தில் பிறருக்கு உதவ வேண்டும். இன்றைக்கு என்ன தேவையோ அந்த ஆராய்ச்சியில் மாணவர்கள் ஈடுபட வேண்டும்.
இன்றைய தேவைக்குரிய ஆராய்ச்சியே, நாளையதேவையின் படிக்கட்டு. அதன் அடிப்படையில், பார்வையற்ற மாணவர்கள், சமச்சீர் கல்வியை சிரமமின்றி படிக்க, ஆடியோ சி.டி.யை எங்கள் மாணவிகள் தயார் செய்துள்ளனர்.முதல் பருவம் மட்டுமே நிறைவேறியுள்ளது.அடுத்த இரண்டு பருவங்களும் விரைவில்,சி.டி.யாக மாணவர்களுக்கு வழங்க உள்ளோம். அடுத்த பருவ சி.டி.,க்களை, ரெக்கார்டிங் சென்டரில் வைத்து தயாரிக்க முயற்சி செய்து வருகிறோம், என்றார். சமச்சீர் சி.டி., வேண்டுவோரும், தன்னம்பிக்யை பாராட்டுவோரும், 94889 49279 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Tags: , , , , ,

Leave a Reply