சங்கத் தமிழ் அனைத்தும் தா !

 

1.எங்கும் தமிழ் தங்கத்தமிழ் சங்கைத் தமிழைச் சங்கத் தமிழால் அளக்கவா ?

2. பொங்கும் புகழ் தங்கும் எழில் மங்காதிலங்கும் மங்கைத் தமிழை விளக்கவா ?

3. ஆண்டவன் தன் ஆளுமையை அறிவிக்க வேண்டி

4. மானுடத்தைப் புவியிதனில் படைத்துவிட்டு, மொழிவதற்கு

5. நாமணக்கும் தேமதுரத் தீந்தமிழைத் தோற்றுவித்து

6. மாந்திரினம் மாந்துதற்குப் பொழிந்து உவந்தான் !

7. இறைமூலமாய் நிறைமூலமாக வந்த தமிழமிழ்தை முதல் மனிதர் மொழிந்து உவந்தார் !

8. கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே உயர் தமிழ்ச் செம்மொழியைக்

9. கற்பனை தாண்டிக் கருவாய்ப் படைத்த பேரிறைவா !

10. முதல் தாய் தாலசைத்து இசைத்த தாலாட்டு எங்ஙனம் இருந்தது ?

11. முதல் தாய் பால் குடித்து வளர்ந்த மழலைகள் எம்மொழி மொழிந்தனர் ?

12. அன்றலர்ந்து நின்று வளர்ந்து மறைந்துபோன குறையில்லாச் செல்வங்களை எடுத்துத் தா !

13. முந்தைத் தமிழ் மொத்தமும் தா ! சங்கத்தமிழ் அனைத்தும் தா !

14. சேதுக்கரையோரம் சுந்தரர் ஷீது நபி சிறு நடையிட்ட போதில்

15. செழுந்தமிழில் சிந்திய எண்ணச் சிதறல்கள் சலித்து எடுத்துத்தா !

16. ஏதோ நடந்த பிழையின் ஏதுவாய், தீதறுத்த பிரளய நேரம்

17. ஏந்தலர் நூஹூ நபி எனும் முதல் கப்பலோட்டிய தமிழர் தம் நாவாயில்

18. எடுத்துச் சென்ற இணையில்லா இலக்கியக் குவியலை மீட்டெடுத்துத் தா !

19. இலக்கணத் தந்தை தொல்காப்பியர் கற்றுணர்ந்த இலக்கியங்கள்;

20. குமரிக்கண்டம் அழிவோடு எடுத்துச் சென்ற அறிவுக் கருவூலங்கள்;

21. இந்துமாக்கடலின் ஆழத்தில், ஆணிமுத்தும் வலம்புரிச் சங்கும் பவளமும்

22. சங்கமித்துப் பதிந்து கிடக்கும் – அதை அள்ளி வந்து தா !

23. சிந்துவெளி பரப்பினிலே எதிரொலித்த தீந்தமிழ்ப் பாடல்கள்;

24. முத்தமிழில் சிறந்திருந்த நாடகத்தமிழ் ஆவணங்கள்; மறைந்ததெங்கே ?

25. மொத்தமாக அழிந்துபோன கருவூலத்தைச் சிந்தாமல் திருப்பித் தா !

26. சமயம் எல்லாம் படைத்தளித்த அலங்கார அணிகலன்கள்;

27. சமயம் தாண்டிய விரல்கள் சமைத்தளித்த ஒயில் நகைகள்;

28. அணிந்த அவள் எழில் கூட்டும் வளமைக்கிங்கே இணையே இல்லை.

29. சல்லி வேராய்ப் பன்மொழிகள்; அதைத் தாங்கும் ஆணிவேர் அன்னைத் தமிழ்மொழி !

30. எம்மொழிக்கும் தமிழே அன்னை; எம்மொழிக்கும் எம்மொழியே மேன்மை !

31. கிடைத்தளவே உயர் தனிச் செம்மொழித் தகுதி கொடுத்திடின்,

32. படைத்துள யாவும் கிடைத்திடின் அன்னைத் தமிழுக்கு என்ன பெயரிடுவோம் !

– ஆலிம் செல்வன்.

 

முகவரி :

S.N.M. AHAMED SAMSUDEEN

PO BOX NO 1349

DEIRA, DUBAI – UAE

E-MAIL : asdjf73@gmail.com

Tags: ,

Leave a Reply