குழந்தைகள் சித்ரவதையா?: இலவச தொலைபேசி 1098ல் தொடர்பு கொள்ளுங்கள்-எஸ்.பி.

குழந்தைகளை சித்ரவதை செய்வது தெரிய வந்தால் உடனே இலவச தொலைபேசி எண் 1098-ல் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு ராமநாதபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் கூறினார்.

ராமநாதபுரம் வளர்ச்சித் துறை மஹாலில் சைல்டு லைன் அமைப்பு தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவை குத்து விளக்கேற்றி தொடக்கி வைத்து மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர் மயில்வாகனன் பேசியதாவது:

காவல் துறைக்கு இலவச தொலைபேசி எண் 100 உள்ளதுபோல குழந்தைகளை  யாராவது சித்ரவதை செய்தால் இலவச தொலைபேசியில் தெரிவிக்க 1098ல் தொடர்பு கொள்ளுங்கள்.

பேருந்து, ரயில் நிலையங்கள் மற்றும் தெருக்களில் குழந்தைகளைப் பிச்சை எடுக்க வைப்பது தெரிய வந்தாலும் இந்த தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.

குழந்தைகள் பாதுகாப்புக்கு காவல் துறை நூறு சதவிகிதம் ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளது.

குழந்தைகள் கடத்தல், குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர்கள், பிச்சை  எடுக்க வைப்பது, அடித்து துன்புறுத்துவது, பாலியல் கொடுமைகள் செய்வது, சித்ரவதை செய்தல், குழந்தைகள் காணாமல் போகுதல், வீட்டை விட்டு ஓடிப்போகும் குழந்தைகள், தெருவோர மற்றும் ஆதரவற்ற குழந்தைகள் உள்பட எந்த தகவல்களையும் இலவச தொலைபேசி எண் 1098ல் தெரிவிக்கலாம் என்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் பேசினார்.

விழாவிற்கு மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் என்.சிவக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட சமூக நல அலுவலர் மணிமேகலை, குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் குணசுந்தரி, தொழிலாளர் ஆய்வாளர் பாலுச்சாமி, இளைஞர் நீதிக்குழும உறுப்பினர் எம்.ராஜேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சைல்டு லைன் அமைப்பின் இயக்குநர் எஸ்.கருப்பசாமி வரவேற்றார்.

விழாவில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான ஸ்டிக்கரை காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் வெளியிட, குழந்தைகள் நலக்குழுவின் தலைவர் ஆர்.சகுந்தலா பெற்றுக் கொண்டார் .

விழாவில் ஸ்பீடு தொண்டு நிறுவன இயக்குநர் தேவராஜ், செர்டு தொண்டு நிறுவன இயக்குநர் சந்தியாகு உள்பட மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags: , ,

Leave a Reply