குழந்தைகள் காப்பகம் : சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

சூலக்கரையில் அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில் சேர்க்கைக்கு மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி்க் குறிப்பு விவரம் வருமாறு: விருதுநகர் அருகே சூலக்கரையில் மாவட்ட சமூக நலத்துறையின் சார்பில் அன்னை சத்யா குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இக்காப்பகத்தில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலும் தங்கிப் படிப்பதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதேபோல், பிளஸ்2 தேர்ச்சி பெற்ற பின் பட்டம் மற்றும் பட்டயம் படிப்பவர்களும் தங்கி படிக்க அனுமதிக்கப்படுகிறது.

இங்கு தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி, உணவு, உறைவிடம், சீருடை, மருத்துவம், காலணிகள் மற்றும் பாடக்குறிப்பேடுகள் ஆகியவை விலையில்லாமல் வழங்கப்படும். அதேபோல், பிளஸ்2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று உயர் கல்வி பெறும் வகையில் தொழிற் கல்விக்கு ரூ.50 ஆயிரமும், பட்டம் மற்றும் பட்டயம் படிப்பதற்கு ரூ.30 ஆயிரமும் உதவித் தொகையாக வழங்கப்படும். இக்காப்பகத்தில் சேர்வதற்கு தாய், தந்தையரை இழந்த, தாய் அல்லது தந்தையை இழந்தோர், கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் குழந்தைகள், மனநோயால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் குழந்தைகள், ஆயுள் கைதிகளின் குழந்தைகளாக இருக்க வேண்டும். அதோடு, இவர்களது பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களின் ஆண்டு வருமானம் ரூ.24 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும்.

இதில், மாணவர்கள் 5 வயது முதல் 10 வயது வரையிலும், மாணவிகளாக இருந்தால் 5 வயது முதல் 18 வயது வரையிலும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.

அதேபோல், பெற்றோர்களை இழந்த மாணவியாக இருந்தால் 21-வயது வரையிலும் சேர்க்கைக்கு அனுமதிக்கப்படுவர்.

எனவே குறிப்பிட்ட தகுதியுடையவர்கள் விண்ணப்பங்களை மாவட்ட சமூக நலத்துறை அலுவலர், சமூக நலத்துறை அலுவலகம், ஆட்சியர் வளாகம், விருதுநகர் மற்றும் கண்காணிப்பாளர், ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகம், சூலக்கரை, விருதுநகர் என்ற முகவரியிலும் நேரில் சென்று விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். இந்த விண்ணப்பத்துடன் ஆதரவற்றோருக்கான சான்று, வருமான சான்று, கல்விச் சான்று மற்றும் சாதி சான்றிதழ் ஆகியவைகளையும் இணைத்து  நேரிலோ அல்லது அஞ்சலிலோ அனுப்பி வைக்கலாம். மேலும், இது தொடர்பான தகவல்களுக்கு 04562-252701, 04562-252189 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தகுதியுடையவர்கள் பயனடைந்து கொள்ளலாம் என ஆட்சியர் டி.என்.ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

Tags: , , , ,

Leave a Reply