குழந்தைகளை வதைக்கும் கல்வி கூடங்களின் மீது நடவடிக்கை தேவை

குழந்தைகளை வதைக்கும் கல்வி கூடங்களின் மீது நடவடிக்கை தேவை:கீழை ஜஹாங்கீர் அரூஸி கோரிக்கை!
இந்தியன் சோஷியல் ஃபோரம் தமிழ் பிரிவின் மாநில ஊடக பொறுப்பாளர் கீழை ஜஹாங்கீர் அரூஸி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் அரசு பள்ளிக்கூடங்கள் நீங்கலாக தனியார் பள்ளிக்கூடங்கள் பெரும்பாலும் வியாபார நோக்கோடு செயல்படுவதால்…மதிப்பெண் பட்டியலில் மாநில,மாவட்ட அளவில் தங்களது பள்ளிக்கூடம் இடம் பெறவேண்டுமென்ற முனைப்பில் கூடுதல் நேர பாட வகுப்பினை நடத்துகின்றனர்.
குறிப்பாக ஆங்கில வழி கல்வி நிலையங்கள் பாட வகுப்பு நேரம் நீங்கலாக காலையில் 9 மணிக்கு ஆரம்பிக்கும் வகுப்பினை இரவு 8 மணி வரை தொடர்ச்சியாக 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்,மாணவியருக்கு நடத்துவதால் மாணவர்கள் கடும் சோர்வுக்குள்ளாகின்றனர்.
டியூஷன் என்னும் பெயரில் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை 6 ஆயிரத்திலிருந்து 10 ஆயிரம் ரூபாய் வரை மாணாக்கர்களிடம் கூடுதல் தொகையாக வசூலிக்கும் வியாபார கொள்ளையின் பெயரால் முழுமையாக பாதிக்கப்படுவது பெற்றோர்கள் மட்டுமல்ல,மாணாக்கர்களும் தான்.
வார விடுமுறை கட்டாயம் என்ற தமிழக அரசின் உத்தரவை காற்றில் பறக்க விடும் வகையில் வாரத்தில் ஏழு நாட்களும் வகுப்பு நடத்தும் அடாவடியால் மாணாக்கர்கள் மிகுந்த மன உளைச்சல்களுக்கு ஆளாகி படிப்பின் மீதே வெறுப்படைந்து விடுகின்றனர்.
இத்தகைய அத்துமீறல்கள் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே நடைபெற்றாலும்,குறிப்பாக இராமநாதபுரம் மாவட்டத்தில் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய கடும் மழை வெள்ளம் காரணத்தால் மாவட்டம் முழுவதும் இரண்டு நாட்கள் பொது விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்தும் கூட இராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலும் ஆங்கில வழி கல்வி நிலையங்களில் தொடர்ச்சியாக வகுப்புகள் நடந்துள்ளது கவலைக்குரியதாகும்.
கல்வி பணியை வர்த்தக நோக்கில் செயல்படுத்தும் இத்தகைய போக்குகள் மாணாக்கர்களின் உரிமையை பறிக்கும் செயல் மட்டுமல்ல,தேவையற்ற மன உளைச்சல்களையும், கல்வியை விட்டு விலகி செல்லும் போக்கினையும் ஏற்படுத்தி விடும்.
வரம்பை மீறும் இத்தகைய பள்ளிக்கூடங்களை அந்தந்த மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் விடுமுறை காலத்திலும் மாலை 6 மணிக்கு மேல் கட்டாய வகுப்புகள் நடத்தும் பள்ளிக்கூடங்களையும் கண்காணித்து அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்.
Tags: , , ,

Leave a Reply